

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகளில் பீட்ரூட்டிற்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ரத்தத்தை விருத்தி செய்யவும், சருமத்தை பளபளப்பாக மாற்றவும் இது ஒரு அற்புதமான சூப்பர் உணவு. பலரும் இதை அப்படியே பச்சையாக ஜூஸ் போட்டு குடிப்பார்கள், இன்னும் சிலர் நன்றாக வேகவைத்து பொரியலாகச் சாப்பிடுவார்கள்.
ஆனால், பீட்ரூட்டை எந்த முறையில் சாப்பிடுவது நமது உடலுக்கு முழுமையான சத்துக்களை கொடுக்கும் என்பதில் பலருக்கும் ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது. குறிப்பாக இதை தவறான முறையில் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. எந்த பயமும் இல்லாமல் பீட்ரூட்டை எப்படி பாதுகாப்பாக சாப்பிடுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
பச்சை பீட்ரூட்: நன்மைகள் Vs ஆபத்துகள்!
பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நைட்ரேட் சத்துக்கள் கொஞ்சமும் குறையாமல் அப்படியே முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும். இந்த நைட்ரேட் சத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், உடலுக்கு உடனடி எனர்ஜியை கொடுக்கவும் பெரிதும் உதவுகிறது. ஆனால் இதில்தான் ஒரு மிகப்பெரிய வில்லனும் மறைந்திருக்கிறான். பச்சை பீட்ரூட்டில் ஆக்ஸலேட் என்ற ஒரு வேதிப்பொருள் மிக அதிக அளவில் காணப்படுகிறது.
கிட்னி ஸ்டோன்!
பொதுவாக சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு இந்த அதிகப்படியான ஆக்ஸலேட் தான் மிக முக்கிய காரணமாக அமைகிறது. நாம் பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது தினமும் ஜூஸாகவோ அதிக அளவில் எடுக்கும்போது, அதில் உள்ள ஆக்ஸலேட் நமது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்ஸலேட் கற்களாக மாறத் தொடங்கிவிடும். ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் அல்லது அந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளவர்கள் பச்சை பீட்ரூட்டை தினமும் உண்பது மிகப் பெரிய தவறு.
வேகவைத்த பீட்ரூட் சிறந்தது!
இந்த கிட்னி ஸ்டோன் பயம் இல்லாமல் பீட்ரூட்டை நிம்மதியாக சாப்பிட வேண்டும் என்றால், அதை நன்றாக வேகவைத்து சாப்பிடுவதுதான் மிகச் சிறந்த வழி. பீட்ரூட்டை சுடுதண்ணீரில் போட்டு வேகவைக்கும் போது, அதில் உள்ள ஆபத்தான ஆக்ஸலேட் கணிசமான அளவில் அந்த தண்ணீரிலேயே கரைந்து வெளியேறிவிடும். வேகவைப்பதால் வைட்டமின் சி போன்ற ஒரு சில சத்துக்கள் லேசாக குறைந்தாலும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. மேலும், வேகவைத்த காய்கறிகளை நமது வயிறு மிக எளிதாக செரிமானம் செய்துவிடும்.
உங்களுக்கு சிறுநீரக கல் சம்பந்தமான எந்த ஒரு பயமும் இல்லை என்றால், எப்போதாவது ஒருமுறை சிறிதளவு பீட்ரூட்டை பச்சையாக சாலட் போல சாப்பிடலாம். ஆனால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும், சிறுநீரகம் நூறு சதவீதம் பாதுகாப்பாக இருக்கவும் பீட்ரூட்டை நன்றாக வேகவைத்து சாப்பிடுவதுதான் எப்போதுமே புத்திசாலித்தனமான ஒரு முடிவு.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)