
யோகா முத்ராசனம் என்பது, உட்கார்ந்த நிலையில் செய்யும் பயிற்சியாகும். இந்த ஆசனம் பத்மாசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஒரு யோகாசனமாகும்.
செய்முறை:
யோகா மேட்டில் நிமிர்ந்த நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கைகளை முதுகுக்கு பின்னால் மடித்து, வலது கையால் இடது காலின் பெருவிரலையும், இடது கையால் வலது காலின் பெருவிரலையும் பிடித்து கொள்ளவும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டே முன்னால் குனிய வேண்டும். முன்னால் குனியும் போது மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும். இந்நிலையில் 30 முதல் 40 வினாடிகள் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு வந்து கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை மூன்று முறை செய்ய வேண்டும்.
யோக முத்ராசனத்தில் கைகளை பின்னால் கட்டும்போது சில முறைகளை கடைபிடிக்கலாம். அதாவது முதுகுக்கு பின்னால் கைகளை கொண்டு சென்று கைகளால் கால்களை பிடிக்க முடியவில்லை என்றால் கைகளை கட்டிக்கொள்ளலாம் (படத்தில் உள்ளபடி) அல்லது கைகளால் நமஸ்கார போஸ் செய்யலாம்.
பயன்கள்
* யோகா முத்ராசனம் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.
* பெண்களின் வயிற்று தசைகள் மற்றும் இடுப்புப் பகுதியை வலுப்படுத்த உதவுகிறது
* நினைவாற்றலை ஊக்குவிப்பதோடு கவனச்சிதறல் வராமல் தடுக்கிறது.
* தலை, முகம் மற்றும் கழுத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
* உடலை அமைதிப்படுத்தவும், ஆற்றலை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.
* நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
* இந்த ஆசனம் செய்யும் போது முன்னோக்கி வளையும் போது வயிற்றை அழுத்துகிறது, இது செரிமான உறுப்புகளைத் தூண்டுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.
* முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றாலும் யோகா வல்லுநரின் ஆலோசனையில் பேரில் செய்வது நல்லது.
எச்சரிக்கை
யோகா முத்ராசனத்தின் பயிற்சியுடன், பாதுகாப்பான நடைமுறைகளுக்கு மனதில் கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை பார்க்கலாம்.
* கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, முழங்கால், கர்ப்பப்பை வாய் அல்லது இடுப்பு ஸ்போண்டிலோசிஸ், இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* காயம், அறுவை சிகிச்சை அல்லது வலி தொடர்பான முதுகுப் பிரச்சினைகள் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* பெண்கள் மாதவிடாய், கர்ப்பம், பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* கிட்டப்பார்வை, முதுகு அல்லது மூட்டுகளில் விறைப்பு மற்றும் குடலிறக்கம், ரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.
* உங்கள் உள் உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் அல்லது அத்தகைய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறீர்கள் என்றால் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவும்.