

முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். முகம் பளிச்சிடுவதற்கு விதவிதமான காஸ்மெட்டிக்ஸ் உபயோகிப்பதும், பார்லர் விசிட் போன்றவையும் செய்யாதவர்கள் மிகவும் குறைவு. ஆனால் இவற்றின் தேவையே இல்லாமல் செய்யக்கூடியது இந்த ஃபேஷியல் யோகா (Facial yoga). முகத்துக்கான இந்த யோகா பயிற்சிகள் முதுமை தோற்றத்தை தள்ளிப்போடுவதுடன் இளமையை தக்க வைக்க உதவும்.
1) ஃபேஷியல் யோகா (Facial Yoga) என்பது:
ஃபேஷியல் யோகா என்பது முகம், கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தவும், தளர்த்தவும், டோன் செய்யவும் உதவும் எளிய பயிற்சிகள் மற்றும் மசாஜ் ஆகும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. தினசரி 15-20 நிமிடங்கள், சுமார் 6 முதல் 20 வாரங்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற முடியும்.
2) முக்கிய ஃபேஷியல் யோகா பயிற்சிகள்:
நெற்றி மெருகூட்டல் (Forehead Smoother):
இரண்டு கைகளின் விரல்களையும் நெற்றியின் நடுவில் வைத்து, வெளிப்புறமாக மெதுவாக அழுத்தி நீவவும். இது நெற்றிச் சுருக்கங்களைக் குறைக்க உதவும்.
கண் இமை தூக்குதல் (Eye Lift):
ஆள்காட்டி விரலால் புருவங்களுக்குக் கீழே பிடித்துக்கொண்டு, கண்களை அகலமாகத் திறந்து மூடுவதன் மூலம் கண் தசைகள் வலுப்பெறும்.
அதேபோல் கண்களை அகலமாக விரித்து, ஆச்சரியப்படுவது போல புருவங்களை உயர்த்தி 5 முறை செய்யவும்.
மகிழ்ச்சியான கன்னங்கள் (Smiling Fish Face)
கன்னங்களை உள்ளே இழுத்து, உதடுகளைக் குவித்து, மீன் முகம் போலச் செய்து சிரிப்பது கன்னத்து தசைகளை இறுக்கும் சிறந்த பயிற்சியாகும். இந்த நிலையில் 5-10 நொடிகள் இருக்க, கன்னக் கொழுப்பை வெகுவாக குறைக்க முடியும்.
கழுத்து மற்றும் தாடை உறுதிப்படுத்துதல் (Jaw & Neck Tightener):
தலையைச் சற்று பின்னோக்கி சாய்த்து, கீழ் உதட்டை மேல் நோக்கி உயர்த்தி தாடை மற்றும் கழுத்துப் பகுதியை முன்னால் தள்ளவும். இது இரட்டைக் கன்னம் (Double chin) குறைவதற்கு உதவும்.
கன்னத்தை உயர்த்துதல் (Cheek Lifter):
வாயைத் திறந்து, பற்களை உதடுகளால் மூடி, கன்ன தசைகளை மேல்நோக்கி உயர்த்தவும். 10 நொடிகள் வைத்திருந்து பின் தளர்வாக விடவும்.
சிம்ம முத்ரா (Lion Pose):
வாயை அகலமாகத் திறந்து, நாக்கை வெளியே நீட்டி, கண்களை அகல விரித்து மூச்சை வெளியே விடவும். இது முகப் பதற்றத்தை குறைக்கும்.
3) பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
பயிற்சிக்கு முன் கைகளை நன்கு கழுவவும்.
முகத்தில் லேசாக ஆலிவ் எண்ணெய் அல்லது மாய்ஸரைசரை சிறிது தடவிக் கொண்டு தோலை அதிகம் இழுக்காமல் மென்மையாக பயிற்சி செய்யவும்.
தொடர்ச்சியாக பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.
4) ஃபேசியல் யோகாவின் நன்மைகள்:
முக தசைகளுக்கு உடற்பயிற்சி அளிப்பதன் மூலம் தொய்வடைந்த தசைகளை இறுக்கி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியை உறுதியாக்குகிறது.
நெற்றி, கண்கள் மற்றும் வாய்ப் பகுதியைச் சுற்றியுள்ள நுண்ணிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை மென்மையாக்கி, முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தவிர்க்க உதவுகிறது.
தொங்கிய கன்னங்கள் மற்றும் தாடைப் பகுதியை (double chin) சரிசெய்து முகத்தை இளமையாகக் காட்டுகிறது.
முகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவைத் தருகிறது.
நிணநீர் மண்டலத்தைத் தூண்டி (Lymphatic drainage) முகத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து கண்கள் கீழே உள்ள கருவளையங்களை சரிசெய்கிறது.
முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் அழுத்தத்தைக் குறைத்து தளர்வை ஏற்படுத்தி மன அமைதியைத் தருகிறது.
முக தசைகளைத் தூண்டுவதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)