

தேங்காய் பால் (Coconut milk) அதன் மெல்லிய இனிப்பான சுவையால் தென்னிந்திய சமையல்களில் முக்கிய இடம் பெறுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இதை சுவைக்காக சேர்ப்பது பாரம்பரியமாக உள்ளது. சுவை விஷயத்தில் தேங்காய் பால் முக்கியமானதாக இருந்தாலும், அது உடல் ஆரோக்கியத்தில் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
தேங்காய் பால் உடலில் கொழுப்பினை சேர்க்கும் என்று நீண்ட காலமாக கருத்துகள் உள்ளன. இதய நோயாளிகளுக்கு தேங்காய் பாலினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்ல வருகின்றன என்பதையும் இங்கு பார்ப்போம்.
முற்றிய தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் அதிக கீரீம் மற்றும் அதிக கலோரிகள் உள்ளன. மேலும் இதில் கொழுப்பும் சற்று அதிகம் உள்ளது. இதில் நிறைவுற்ற கொழுப்பு, அதன் மொத்த கொழுப்பு உள்ளடக்கத்தில் 80-90% வரை உள்ளது.
அதிக நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் வழக்கமாக LDL கெட்ட கொழுப்பின் அளவுகளை அதிகரிக்க கூடியது. இவை இருதய ஆபத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், தினமும் தேங்காய்பால் சாப்பிடும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
வழக்கமாக அனைத்து நிறைவுற்ற கொழுப்புகளும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. தேங்காய்ப் பாலில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை சாதாரண விலங்கு கொழுப்புகளில் உள்ள நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களை விட, மாறுபட்ட முறையில் வளர்சிதை மாற்றப்படும் கொழுப்பின் ஒரு வடிவமாக உள்ளது.
தேங்காய்ப்பாலில் உள்ள நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் விரைவில் செரிக்கக் கூடியவை என்பதால் அது கொழுப்பாக உடலில் சேர்வதற்கு முன்னரே, வேறு வகையில் ஆற்றலுக்கு செலவு செய்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு உடல் உழைப்பு குறைவாக இருந்தால் தேங்காய் பால் உங்கள் உடலில் கொழுப்பை சேர்க்கும்.
தேங்காய் பாலில் உள்ள கொழுப்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கின்றன. பல ஆராய்ச்சி முடிவுகளில் தேங்காய் பால் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதோடு கெட்ட கொழுப்பின் (LDL) அளவையும் அதிகரிக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனால் பொதுவாக மொத்த கொழுப்பின் அளவை தேங்காய் பால் அதிகரிக்கக்கூடும். இது ஒரே நேரத்தில் HDL மற்றும் LDL கொழுப்பு விகிதத்தினை அதிகரிக்கிறது. இது இதய ஆரோக்கியத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும்
சமீபத்தில் நியூட்ரிசன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் சோயா பாலை உணவில் சேர்ப்பவர்களை விட, தேங்காய்ப்பால் சாப்பிடுபவர்களுக்கு HDL நல்ல கொழுப்பின் அளவு உடலில் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் கெட்ட கொழுப்பான LDL அளவு சிறிய அளவில் மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால் ஒரு காலத்தில் நம்பப்பட்டது போல் தேங்காய் பால் உணவில் சேர்த்துக் கொள்வதால் மோசமான தீங்கை விளைவிக்காது. அதே நேரத்தில் இதை உட்கொள்பவர்கள் எப்போதும் சிறிது கவனத்துடன் இருப்பது நல்லது.
தேங்காய் பாலை மாதத்தில் ஒரு சில நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் அது உடலில் எந்த ஒரு மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே வேளையில் தேங்காய் பால், தேங்காய் சட்னி, தேங்காய் துருவல்கள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதை தடுக்க இயலாது. அதனால், வாரத்தில் ஒருநாள் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒருவேளை தேங்காய் பால் சேர்த்து சாப்பிடுவதால் பெரிய அளவில் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
உணவில் தேங்காய் பால் சேர்ப்பதற்கு ஆரோக்கியமான மாற்று வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு பதில் பசும் பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)