பனிக்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்றால் சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் பெருமளவு குறைகிறது. இதனால் பாதங்களில் வறட்சி ஏற்பட்டு குதிகால் வெடிப்பு வருவது பலரும் எதிர்கொள்ளும் ஒரு சாதாரண சிக்கல்தான். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்து, வழக்கமான ஈரப்பதமூட்டும் பராமரிப்பு மற்றும் சரியான காலணிகளைப் பயன்படுத்தினால் வீட்டிலேயே எளிதாகச் சரிசெய்துவிடலாம்.
சரும நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது பாதங்களை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவும். அவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
பராமரிப்புக்கான வழிமுறைகள்!
பகல் முழுவதும் உழைத்த பாதங்களுக்கு இரவு நேரப் பராமரிப்பு மிக முக்கியம். தூங்கச் செல்வதற்கு முன்பாக சுமார் பத்து நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊறவைத்து மென்மையாகத் துடைக்க வேண்டும். அதிக சூடான நீரைப் பயன்படுத்துவது சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்யும் என்பதால் மிதமான சூடு இருப்பதே பாதங்களுக்கு இதமளிக்கும்.
கால்கள் ஈரமாக இருக்கும்போதே பியூமிஸ் கல் (Pumice Stone) கொண்டு கடினமான சருமத்தை மெதுவாகத் தேய்த்து இறந்த செல்களை அகற்றலாம். எக்காரணம் கொண்டும் சருமத்தை அறுக்கவோ பிளேடு போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது.
கால்களைக் கழுவிய ஐந்து நிமிடங்களுக்குள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளைத் தடவுவது அவசியம். இதற்காக யூரியா அல்லது சாலிசிலிக் அமிலம் கலந்த கால் கிரீம்களைப் பயன்படுத்தலாம். இவை கிடைக்கவில்லை என்றால், சாதாரண பெட்ரோலியம் ஜெல்லியுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தடவினாலும் சருமத்தின் ஈரப்பதம் வெளியேறாமல் பாதுகாக்கப்படும்.
இதன்பிறகு சுத்தமான பருத்தி சாக்ஸ் அணிந்து தூங்குவது சிறந்தது. பகல் நேரங்களில் வீட்டின் உள்ளேகூட வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்த்து, பாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் மென்மையான காலணிகளை அணிவது குதிகால் வெடிப்பு மேலும் விரிவடையாமல் தடுக்கும்.
மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயம்!
மேற்கண்ட வீட்டு வைத்தியங்களைத் தொடர்ந்து செய்தும் குணமாகவில்லை என்றால், சரும நோய் நிபுணரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக, வெடிப்புகள் ஆழமாகி இரத்தம் வடிந்தாலோ நடக்கும்போது கடுமையான வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும். பாதங்களைச் சுற்றி சிவந்து காணப்படுவது, வீக்கம், தொடும்போது அதிக வெப்பம் அல்லது சீழ் வடிதல் போன்றவை பாக்டீரியா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சர்க்கரை நோய் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளவர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இவர்கள் சுயசிகிச்சை செய்வதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. இவர்களுக்குச் சிறிய வெடிப்புகள் கூடப் பெரிய, ஆறாத புண்களாக மாற வாய்ப்புள்ளதால், தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகுவது நன்று.
இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து முறையான வீட்டுப் பராமரிப்பு செய்தும் வெடிப்புகள் குறையவில்லை என்றால், அது எக்ஸிமா அல்லது சொரியாசிஸ் போன்ற சரும நோய்களின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். எனவே, தகுந்த மருத்துவ வழிகாட்டுதல் மூலம் மட்டுமே பாதங்களை ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.
Disclaimer: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference