
நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீரைகள் மிகவும் அவசியமானது என்கிறார்கள். அதில் இருக்கும் சிறிய வகையிலான கனிமங்கள் மற்றும் உப்புகள் வேறு எந்த உணவிலும் காணப்படுவதில்லை. அதில் இருக்கும் ஃபோலிக் ஆசிட்கள் மற்றும் செலினியம் ஆகியவை நம் அன்றாட பணிகளை மேற்கொள்ள உதவுவதுடன், நீண்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றன.
கீரைகளில் அதிக அளவில் உள்ள நோய் எதிர்ப்புப் பண்புகள், ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் அதில் உள்ள கிளைகோலிபிட் பண்புகள் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுக்க உதவும். கடுகு கீரைகள், காலே கீரைகள் ஆகியவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும் தன்மை கொண்டவை. இவைகளை பொரியல் வடிவில் எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிக அளவில் குறைக்க முடியும்.
இலைக் காய்கறிகள் எனும் கீரைகள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதில் ஏராளமான குளோரோபில் இருப்பதால் கல்லீரலில் டேஜின்கள் நடுநிலைப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை செரிமானத்தை ஊக்குவிக்கின்றன; கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.
கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது கீரைகளில் அதிகமுள்ளது. மெக்னீசியம் தசை உருவாக்கத்திற்கு அவசியமானது மற்றும் எலும்பு வலிகளை போக்க உதவும். இதுவும், கீரைகளில் அதிகமுள்ளது.
ஒவ்வொரு கீரைக்கும் விஷேச மருத்துவ குணங்கள் உண்டு.
முருங்கைக்கீரை கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு கண்ணுக்கு நல்லது. முருங்கைக் கீரை அந்த அளவுக்கு கண் பார்வைக்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியது .
கரிசலாங்கண்ணி கீரையை 'தேக ராஜன்' எனவும் கூறுகின்றனர். மேலும், அது கடுமையான சளி தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும் மருந்தாகிறது. கரிசலாங்கண்ணி தைலம் பெரும்பாலும் முடி எண்ணெய்கள், ஷாம்பூகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த கீரையை தொடர்ந்து 45 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் இளநரை, பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக அமையும்.
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். அதோடு கீரையில் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. நமது நரம்பு மண்டலம் சரியாகவும் திறமையாகவும் செயல்படுவதற்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவை. இவை கீரைகளில் உள்ளன. குறிப்பாக பொன்னாங்கண்ணிக்கீரை, வல்லாரை கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. எனவே அவற்றை தினமும் சாப்பிடலாம்.
ஒரு வாரத்திற்கு 500 முதல் 600 கிராம் வரை கீரைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பெண்களைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு கட்டாயம் 100 கிராம் கீரை சாப்பிட வேண்டும். கீரையில் இருந்து நமக்கு தேவையான இரும்புச் சத்து எளிதில் கிடைத்து விடுகிறது.
கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் தான் முட்டை, பால் போன்றவற்றுடன் கீரையை சேர்த்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில், செரிமானத்தை எளிதாக்குவதற்காக இவற்றை தனியாக சாப்பிட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கீரையை நன்கு கழுவி சமைக்க வேண்டும். அதிகளவில் பச்சையாக சாப்பிடக்கூடாது. நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். கீரையை ஒரே நேரத்தில் அதிகளவில் சாப்பிடக்கூடாது. புளி சேர்த்து கீரையை சமைக்க கூடாது. சமைத்து முடித்த பிறகு இறுதியில் எலுமிச்சம் சாறு சேர்த்து கொள்ளலாம்.
கீரை சாறை வடிகட்டக்கூடாது. சாறோடு சேர்த்து தான் சாப்பிட வேண்டும். இரவில் கீரையை சாப்பிட கூடாது. செரிமானம் ஆவதற்கு தாமதமாகும் என்பதால் அதை இரவில் எடுத்து கொள்ள கூடாது. அப்படி இரவில் சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கீரையை மீண்டும் சூடு செய்து சாப்பிட கூடாது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார்பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.