

சிலசமயங்களில் காலையில் நீங்கள் தூங்கி எழுந்திருக்கும்போது உங்கள் முகம் பதிந்திருந்த தலையணையில் வாயோரம் எச்சில் படிந்து ஈரப்பதமாகவே, காய்ந்த நிலையிலோ தென்படுவதை பார்த்திருக்கிறீர்களா? இதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் கேலி செய்திருக்கலாம். ஆனால் உண்மையில் இது ஒரு சாதாரண உடல்நிலை மாற்றமா?
இது ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்வோமா?
தூங்கும்போது எச்சில் வடிதல் (Drooling while sleeping) என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும், குறிப்பாக முதியவர்களுக்கு, என எல்லா வயதினரிடமும் பொதுவாக ஏற்படும் ஒரு நிகழ்வாகும். சிலருக்கு உறக்கத்தின் போது முகத் தசைகள் தளர்வடைவது மற்றும் விழுங்கும் அனிச்சை (Swallowing reflex) குறைவது காரணமாக எச்சில் வடியும். பக்கவாட்டில் அல்லது குப்புறப் படுக்கும் பழக்கம் மற்றும் வாய் வழியாக சுவாசிப்பது போன்ற காரணங்களால் உமிழ்நீர் வெளியேறித் தேங்க வாய்ப்புள்ளது.
நாம் விழித்திருக்கும்போது நம் வாயில் சுரக்கும் எச்சிலை அவ்வப்போது விழுங்கிக்கொண்டே இருப்போம். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்முடைய கை, கால் மற்றும் முகத்தசைகள் பலவும் நன்றாக ஓய்வெடுக்கின்றன. முக்கியமாக முகத்தில் உள்ள தசைகளும் தாடையும் தளர்வடைவதால் சிலருக்கு வாய் லேசாக திறந்து கொள்கிறது.
மல்லாந்த நிலையில் அல்லாமல் பக்கவாட்டில் தலைவைத்து படுக்கும்போது வாய் தசைகள் தளர்ந்து திறக்கின்றன. அப்போது ஒரு கிண்ணத்தை சாய்த்தால் நீர் கொட்டுவது போல புவியீர்ப்பு விசையால் எச்சில் தானாகவே வெளியே வந்துவிடுகிறது. அதாவது மல்லாக்கப் படுக்கும் போது எச்சில் தொண்டைக்குள் செல்லும். அதுவே பக்கவாட்டில் அல்லது குப்புறப் படுக்கும் போது புவியீர்ப்பு விசையின் காரணமாக எச்சில் வெளியேறும்.
தூங்கும்போது, முகத் தசைகளும் விழுங்கும் அனிச்சைச் செயலும் எப்போதும் தளர்ந்த நிலையில் இருப்பதால், வாயில் உமிழ்நீரின் ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சேரும்போது, முகத் தசைகள் தளர்ந்து, அவற்றை இனி கட்டுப்படுத்த முடியாது என்ற சூழலில், ஒருவர் மல்லாந்து படுத்திருக்கும்போது, உமிழ்நீர் தானாகவே வயிறு மற்றும் உணவுக்குழாய்க்குள் வழிந்தோடும்; ஆனால், அதுவே அவர் இடது அல்லது வலது பக்கமாக சாய்ந்து படுத்திருக்கும்போது, உமிழ்நீர் மீண்டும் வாயின் வழியாக வெளியே வழிந்தோடும். தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் இந்த நிலையால், நீங்கள் விழித்தெழும்போது, உங்கள் போர்வையும் தலையணையும் ஈரமாக இருப்பதையும், ஒருவித விரும்பத்தகாத வாசனையுடன் இருப்பதையும் காண்பீர்கள்.
மூக்கடைப்பு அல்லது சளி, அலர்ஜி (Allergy) அல்லது சைனஸ் (Sinus) பிரச்சனையால் மூக்கு அடைத்துக் கொள்ளும்போது வாய் வழியாக சுவாசிப்போம். இதனால் வாயில் எச்சில் அதிகமாகத் தேங்கி வெளியேற அதிக வாய்ப்புள்ளது.
சிலநேரம் தூக்கத்தின் போது அதிக காரமான உணவுகளை உட்கொள்வது அல்லது அசிடிட்டி (GERD) போன்ற செரிமானப் பிரச்சனைகள் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்.
நீங்கள் மிகவும் களைப்பாக இருந்து, கனவு காணும் நிலைக்கு செல்லும் அளவுக்கு ஆழ்ந்து தூங்கினால், விழுங்கும் உணர்வு குறைந்து எச்சில் வடியும். தூக்கத்தில் எச்சில் வடிவது நீங்கள் மிகவும் நிம்மதியாக, ஆழ்ந்து தூங்குகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான். இனி உங்கள் தலையணை ஈரப்பதமாகி இருந்தால் ‘நான் நன்றாக தூங்கினேன்’ என்று பெருமையாக சொல்லுங்கள். உடனே தலையணை உறையை சுத்தம் செய்யவும் மறக்காதீர்கள்.
இது பொதுவாக ஏற்படும் ஒரு நிகழ்வாகும். எனவே இதற்காக கவலைப்படதேவையில்லை. இந்த நிலை பொதுவாக பாதிப்பில்லாதது, ஆனால் அதிகமாக எச்சில் வடிந்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு உடல்நலப் பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாகவும் இது இருக்கலாம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
பொதுவாக சில நரம்பியல் அல்லது மனநல மருந்துகள் எச்சில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம். தன்னியக்க நரம்பியல் கோளாறு (Autonomic neuropathy), நரம்பியல் சீர்கேடுகள் போன்ற நரம்பியல் நோய்கள், தூங்கும் போதும் உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தூண்டி, அதிகமாகச் சுரக்கச் செய்யும்.
மேலும், உடல் மன அழுத்தம், தூக்கக் கோளாறுகள், பதற்றம், சோர்வு மற்றும் பலவீனம் போன்றவையும் தூக்கத்தின் போது அடிக்கடி எச்சில் வடியும் நிலையை எளிதில் ஏற்படுத்தக்கூடும்.
தொண்டை அழற்சி, பல் சிதைவு, வாய் புண்கள் போன்ற பல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, தூக்கத்தின் போது கட்டுப்படுத்த முடியாத உமிழ்நீர் சுரக்கும் நிலை அடிக்கடி ஏற்படலாம்.
செரிமான கோளாறுகள், வயிற்றுப் புண்கள் அல்லது முன்சிறுகுடல் புண்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் தூக்கத்தின் போது உமிழ்நீர் வடிதல் அடிக்கடி ஏற்படுவதாக பல பதிவுகள் காட்டுகின்றன.
பொதுவாக, தூங்கும்போது எச்சில் வடிப்பது பாதிப்பில்லாததுதான், ஆனால் இது தொடர்ந்து நடந்தால், அது பலருக்கு அசௌகரியத்தையும் சுகாதாரமற்ற உணர்வையும் ஏற்படுத்தும். எனவே, இந்த நிலையைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும் அல்லது தேவைப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
இருப்பினும், தூக்கத்தின் போது அதிகப்படியான உமிழ்நீர் வடிதல் என்பது நரம்பு மண்டலம், செரிமான அமைப்பு மற்றும் பற்களில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள், வயதானவர்களுக்கு பக்கவாதம் போன்றவை குறித்த எச்சரிக்கையாகவும் இருக்கலாம்... இதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)