வயது முதிர்வு வரும்போது ஞாபக மறதி வருவதும் இயற்கை. இதற்குத் தீர்வு காண துரித நடைப்பயிற்சி, நடனம் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல் ஆகியவை உதவும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 50 வயதிலிருந்து 83 வயதிற்குள் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள் சாரசரி முதல் அதிகப்படியான உடல் உழைப்பில் ஈடுபடும்போது அதற்கு அடுத்த நாள் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.
நீண்ட நாட்கள் உடலுழைப்பின்றி இருப்பவர்களின் ஞாபக சக்தி குறைபாடு அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், ஆறு மணி நேரத்திற்குக் குறையாத தூக்கமும் சுறுசுறுப்பின்றி சோம்பியிருக்கும் நேரத்தைக் குறைப்பதும் அறிவாற்றலையும் நினைவாற்றலையும் அதிகரித்து புத்துணர்வுடன் செயல்பட உதவி புரிகிறது.
உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம் டோபமைன் மற்றும் நோர்பைன்ஃப்ரைன் (Norepinephrine) போன்ற ந்யூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் ஊக்குவிக்கப்பட்டு நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
உடற்பயிற்சியின் பலன் ஒருசில மணி நேரங்களுக்கு மட்டுமே என நம்பப்பட்ட நிலையில், அதன் பலன்கள் மறுநாள் முழுக்க நிலைப்பதாக தற்போது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் உள்ளிட்ட 76 பேர்களை எட்டு நாட்கள் ஆராய்ச்சிக்குட்படுத்தி ஒவ்வொரு நாளும் அறிவாற்றல் சோதனை செய்ததில் துரித நடைப்பயிற்சி, நடனம் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல் ஆகிய கடினமான பயிற்சிகள் அவர்களின் நினைவாற்றலை உடனடியாக அதிகரிக்கச் செய்யவும் நீண்ட நாட்கள் தொடரவும் உதவிபுரிவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யாதவர்கள் எதிர்மறை விளைவுகளையே சந்தித்துள்ளனர்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மூத்த குடிமக்களின் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது. உடற்பயிற்சி அவர்களின் மன நிலையை 24 மணி நேரத்திற்கு மகிழ்ச்சியுடன் வைக்க உதவுகிறது. துரித நடை அல்லது சுலபமான உடற்பயிற்சிகளுடன் இணைந்த வாழ்க்கை முறை உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன.
நாமும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வோம். குறைவில்லா ஞாபக சக்தியுடன் நிறைவாக வாழ்வோம்!