கொழுப்பு கல்லீரல் இருந்தால் ஆபத்து கல்லீரலுக்கு மட்டும் அல்ல... சிறுநீரகத்திற்கும்!

Liver and Kidney health tips
Liver and Kidney health tipsAI Image
Updated on

மோசமான வாழ்க்கை முறையினால் கல்லீரல் கொழுப்பு (Fatty liver) நோய் பெரும்பாலான மக்களை தாக்கும் உடல் நல பிரச்சனையாக இருக்கிறது.

உலகம் முழுக்க இந்த பிரச்சனை சராசரியாக அதிகரித்து வருகிறது. இந்த நோய் வருவதற்கு மிக முக்கிய காரணமாக மாறிவரும் உணவு பழக்கம் இருக்கிறது. மேலும் உடற்பயிற்சியின்மை, நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல் ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல் ஆகியவையும் கல்லீரலில் கொழுப்பு படிய காரணமாக இருக்கின்றன.

பொதுவாகவே அனைவரும் கொழுப்பு கல்லீரல் நோயை கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயாக மட்டுமே பார்க்கின்றனர். நீண்ட கால கொழுப்பு கல்லீரல் நோய் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாக ஒவ்வொரு உறுப்பிற்கும் பாதிப்புகள் ஏற்பட தொடங்கும். மற்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் கல்லீரலை சார்ந்து இருப்பதால், அவற்றின் செயல்பாடுகளும் மோசமடைய தொடங்கும்.

பல உடல் உறுப்புகள் பாதிப்பு அடைவதற்கு அறிகுறியாக கல்லீரல் கொழுப்பு நோய் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது. கொழுப்பு கல்லீரல் பல உடல்நல பாதிப்பிற்கு துவக்கமாக இருக்கிறது என்றால் மிகையல்ல. முதலில் அழற்சி, இன்சுலின் எதிர்ப்பு போன்ற உடல் நலப் பிரச்சினைகளை இது துவக்குகிறது. இதன் விளைவுகள் சிறிது சிறிதாக உள்ளுறுப்புகளை பாதிக்க ஆரம்பிக்கிறது.

அழற்சி நோய் இரைப்பை மற்றும் உணவுக் குழாய் பகுதிகளை தாக்கக்கூடும். இதன் தாக்கம் உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், உடல் சோர்வு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பு ஆகியவை ஏற்படலாம். அடுத்ததாக இன்சுலின் எதிர்ப்பு உடலில் ரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்யலாம். இது தொடர தொடங்கினால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நாவல் பழம் சாப்பிடுபவரா நீங்க? - இந்தத் தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க, உயிருக்கே ஆபத்தாகலாம்!
Liver and Kidney health tips

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் கொழுப்பு கல்லீரல்:

சமீபத்தில் வெளியான தேசிய மருத்துவர் நூலக இதழின்படி நீண்ட கால கொழுப்பு கல்லீரல் நோய் படிப்படியாக சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோய் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதால் சிறுநீரக நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரம் இதன் பாதிப்புகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம்.

சிறுநீரக பாதிப்பிற்கான முக்கிய அறிகுறிகள்:

இது போன்ற பாதிப்புகள் தொடர்ச்சியாக இருந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பரிசோதனைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செய்து கொள்ள வேண்டும். தொடர் சோர்வு, வயிறு உப்புசம், பசியின்மை , உடல் எடை அதிகரித்தல், சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ சோதனை செய்து கொள்ளவும். ஒருவருக்கு நீண்ட காலமாக நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இருந்தால் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.

இதையும் படியுங்கள்:
நள்ளிரவில் கால் கட்டை விரலில் கடுமையான வலியா? உடனே இதை செக் பண்ணுங்க!
Liver and Kidney health tips

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் முறைகள்:

தினசரி உணவு வகைகளில் கொழுப்பு குறைந்த சமச்சீரான உணவை தேர்ந்தெடுங்கள். உணவில் காய்கறிகள் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிராசஸ் செய்யப்பட்ட உணவு வகைகளையும் , ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளையும் முற்றிலும் தவிர்ப்பது உடலுக்கு நன்மை தரும். மது, சிகரெட் பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.

போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதும், தினசரி உடற்பயிற்சி செய்வதும், தண்ணீர் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உண்பது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களும் நன்மை அளிக்கும். நீரழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் அதற்கு உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல உணவு பழக்கம் ஆகியவை உடல் உறுப்புகளை நீண்ட காலம் வரை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com