கல்லீரல் பாதிப்பை தவிர்க்க வேண்டுமா? கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பற்றிய முழுத் தகவல்!

ஆரம்பத்தில் தெரியாத இந்த ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளும் எளிமையான தீர்வுகளும்.
Fatty Liver | கொழுப்பு கல்லீரல்
Fatty Liver | கொழுப்பு கல்லீரல்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஃபேட்டி லிவர் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் நிலையாகும். கல்லீரல் செல்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான கொழுப்பு படிந்துள்ள ஒரு மருத்துவ நிலையாகும். ஆரோக்கியமான கல்லீரலில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு இருக்கும். ஆனால் இந்த கொழுப்பின் அளவு கல்லீரலின் மொத்த எடையில் 5% முதல் 10% வரை அதிகரிக்கும் பொழுது அது கொழுப்பு கல்லீரல் நோயாகக் கருதப்படுகிறது.

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் என இரண்டு முக்கிய வகைகளைக் கொண்டுள்ளது.

ஆல்கஹால் அல்லாதது (NAFLD) என்பது மது அருந்தாதவர்களுக்கும் உடல் பருமன் அல்லது நீரிழிவு காரணமாக ஏற்படுகிறது.

ஆல்கஹால் சார்ந்தது (AFLD) என்பது அதிகப்படியான மதுவை அருந்துவதால் கல்லீரலில் கொழுப்பு தேங்குகிறது.

கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்:

கொழுப்பு கல்லீரல் நோய் பொதுவாக ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இது தீவிரமடையும் போது அதிக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.

மேல் வயிற்றின் வலது பகுதியில் லேசான வலி, பாரம் அல்லது அசௌகரியம் தெரியும்.

உணவு மீது நாட்டம் இன்மை மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். இதனால் பசியின்மை மற்றும் உடல் எடை குறைதல் உண்டாகும்.

தீவிர நிலையின் அறிகுறிகள்:

கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்

வயிற்றுப் பகுதி மற்றும் கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் உண்டாகும்.

காரணம் இல்லாமல் உடல் முழுவதும் கடுமையான அரிப்பு ஏற்படும்.

Fatty Liver | கொழுப்பு கல்லீரல்
Fatty Liver | கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரல் காரணங்கள்:

உடலில் அதிக எடை இருப்பது மற்றும் தொப்பைப் பகுதி அதிகரிப்பது கல்லீரலில் கொழுப்பு சேர வழி வகுக்கிறது. உடல் பருமன் மற்றும் அதிகப்படியான உடல் எடை முக்கிய காரணமாகும்.

டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறனும் ஒரு காரணமாகலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சரியாகச் செயல்படாமல் போவது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள்) அளவு அதிகரிப்பது.

அதிகப்படியான மது அருந்துதல் முக்கிய காரணமாகலாம். அதிக அளவில் மது அருந்துவதால் கல்லீரலால் கொழுப்புகளைச் சரியாகப் பிரித்து வெளியேற்ற முடியாமல் கொழுப்புத் தேக்கம் உண்டாகிறது.

துரித உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது.

குடும்பத்தில் மரபணு ரீதியாக பிரச்னைகள் இருப்பதும் சில ஹார்மோன் குறைபாடுகளும் காரணமாகலாம்.

கொழுப்பு கல்லீரல் தீர்வுகள்:

சிகிச்சை மற்றும் தடுப்பு முறை:

இதற்கென குறிப்பிட்ட மருந்து இல்லை. வாழ்க்கை முறை மாற்றமே சிறந்த சிகிச்சையாயகும். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் அதை முற்றிலுமாக குணப்படுத்தவும் முடியும். அதற்கு முதலில் உடல் எடையை படிப்படியாக குறைத்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், முழு தானியங்கள், கீரைகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மற்றும் எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றலாம்.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலியை பறக்கவிட எளிய எருக்கன் இலை வைத்தியம்!
Fatty Liver | கொழுப்பு கல்லீரல்

மதுப்பழக்கம் இருப்பின் அதனை முழுமையாக நிறுத்துவது.

தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது யோகா செய்வது போன்ற பயிற்சிகள் சிறந்த பலனைத் தரும்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரியாக பரிசோதித்து மருத்துவரின் வழிகாட்டுதலின்படி முறையான சிகிச்சையைப் பெறுவது.

கொழுப்பு கல்லீரல் கண்டறிவது எப்படி?

ரத்தப் பரிசோதனை (லிவர் என்சைம்கள் - ஏ.எல்.டி., ஏ.எஸ்.டி., உயர்வு) அல்ட்ராசவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில் கல்லீரலின் அளவு தெரியும். தேவைப்பட்டால் பைப்ரோஸ்கேன் அல்லது கல்லீரல் பயாப்ஸி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

பாதிப்பு அதிகரித்தால் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை தேவைப்படும். எனவே உடலை ஆரோக்கியமாகப் பேணி காக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் ஜோதிஷ்மதி பொடியின் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள்!
Fatty Liver | கொழுப்பு கல்லீரல்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com