
ஜூன் 4; Global Running Day
நடைப்பயிற்சியைப் போலவே தினமும் சிறிது தூரம் ஓடுவதும் உடற்பயிற்சியின் ஒரு சிறந்த வடிவமாகும். அது உடலுக்கும் மனநலனுக்கும் பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
ஓடுவதன் உடல் ஆரோக்கிய நன்மைகள்:
இருதய ஆரோக்கியம்;
ஓடுவது இதயத்தின் செயல் திறனை பலப்படுத்துகிறது. நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தொடர்ந்து ஓடுவது படபடப்பான இதயத்துடிப்பை குறைத்து நார்மல் ஆக்குகிறது. இதயத்திற்கு சரியான அளவில் ஆக்சிஜன் சென்று சேர்கிறது. இதனால் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயங்கள் குறைகின்றன.
எடை மேலாண்மை;
ஓடுவது உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும், எடை இழப்பை ஊக்குவித்து சரியான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. தசைகள் நன்றாக பலம் பெறுகின்றன. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.
எலும்பு அடர்த்தி;
ஓடும்போது நமது பாதங்கள் மொத்த உடலையும் தாங்குவதால் எலும்புகள் வலுவாக்கப்படுகின்றன. வயதாகும் போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயமும் குறைகிறது.
தசைகள் வலுப்படுதல்;
ஓடுவது கால்களுக்கான பயிற்சி என்றாலும் உடல் முழுவதும் உள்ள தசைகள் அதில் ஈடுபடுகின்றன. இதில் தொடை எலும்புகள், மைய தசைகள், பிட்டப்பகுதி, காஃப் மசில்ஸ் அனைத்தும் நன்றாக வலுப்படுகின்றன.
மூட்டு ஆரோக்கியம்;
ஓடுவது முழங்கால்கள் மற்றும் பிற மூட்டுகளை வலுப்படுத்தும். பொதுவாக ஓட்டப்பந்தய வீரர்கள் சிறந்த மூட்டு ஆரோக்கியத்தை கொண்டுள்ளார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ஓடும் போது குருத்து எலும்பு ஆரோக்கியம் தூண்டப்பட்டு மூட்டில் உள்ள நாள்பட்ட வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
வளர்சிதை மாற்ற ஆரோக்கியம்;
ரத்த சர்க்கரை அளவுகள், ட்ரை கிளிசரைகள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து டைப் டு நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
சிறந்த தூக்கம்;
தொடர்ந்து ஓடுவது சிறந்த தூக்க முறைகளுக்கு வழிவகுக்கும். சர்க்காடியன் தாளங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் உடலில் ரசாயனங்கள் நிதானமாக வெளியிடப்பட்டு ஆழமான தூக்கம் கிடைக்கும்.
மனநல நன்மைகள்;
ஓடுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சக்தி வாய்ந்த மருந்தாகும். இது மூளையின் அழுத்தப் பதிவுகளை குறைத்து எண்டார்ஃபின்கள் சுரப்பை அதிகரித்து அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை அதிகரிக்கிறது.
செரோட்டோனின் மற்றும் டோபோமைன் போன்ற நல்ல உணர்வு கொண்ட நரம்பிய கடத்திகளை வெளியிடுவதன் மூலம் மனநிலை மேம்பாடு அடைகிறது. குறைந்த அளவு ஓடினால் கூட உணர்ச்சி ரீதியாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளை குறைப்பதால் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளைப் போலவே ஓட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
ஓடுவது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல், கவன மேம்பாடு அதிகரிக்கும். புதிய மூளை செல்களின் பிறப்பை ஊக்குவிக்கிறது. மேலும் தினமும் குறிப்பிட்ட அளவு தூரம் ஓடும்போது அது ஒருவருக்கு சாதனை உணர்வையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. தெளிவான சிந்தனைகளுக்கு வழிவகை இருக்கிறது.
ஓட்டப்பந்தய வீரர்கள் பிறரை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள். ஒரு நாளைக்கு 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை ஓடுவது கூட ஒருவரை ஆரோக்கியமாக வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி வராமல் தடுக்கும். புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். மேலும் எண்ண ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.