
பொதுவாக பழங்கள் அனைத்தும் உடலிற்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. அதில் குறிப்பாக, “ஏழைகளின் ஆப்பிள்” எனப் போற்றப்படும் கொய்யா பழம் மற்றும் அதன் இலையின் பயன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
சாதாரணமாக தோன்றும் இந்த பழம், உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை வழங்குவதுடன், பல்வேறு நோய்களை தடுக்கும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. அதேசமயம், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், இப்பழத்திற்கு ‘சூப்பர் ஃப்ரூட்’ என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.
கொய்யா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :
* ஒரு கொய்யா பழத்தில், ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின்- சி நிறைந்துள்ளது.
* இதில் அன்னாசி பழத்தை விட மூன்று மடங்கு அதிகமாக புரதம் உள்ளது.
* 100 கிராம் கொய்யா பழம், ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் சி அளவினைக் கொடுக்கிறது. இது உடலில் உள்ள நோய் தொற்றுகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
* தொடர்ந்து இந்த பழத்தை உட்கொண்டு வருவதால், புற்றுநோய் உருவாகச் செய்கின்ற செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. குறிப்பாக, மார்பக புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.
* சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யா பழம் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. பழங்களே சாப்பிடத் தயங்கும் இவர்கள், கொய்யா பழத்தை தயக்கமின்றி உண்ணலாம்.
* இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
* கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வைட்டமின் குறைபாட்டை சரிசெய்யும் திறனும் இதில் உள்ளது.
* வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால், கண் பார்வை குறைபாட்டைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.
* மேலும், மெக்னீசியம் நிறைந்திருப்பதால், அதிக சோர்வுடன் இருப்பவர்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்தவர்கள், ஒரு கொய்யா பழத்தை உண்டால் உடல் மற்றும் தசைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும்.
* வைட்டமின் பி3, பி6 போன்றவை இதில் அதிகமாக உள்ளதால், மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை தூண்டும். இதனால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்க இந்த கொய்யா பழம் முக்கியப் பங்காற்றுகிறது.
தவிர்க்க வேண்டியவை :
* இந்த கொய்யா பழத்தை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* பழத்தை உட்கொண்டவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த கொய்யா பழத்தை போலவே, அதன் இலைகளிலும் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பல், வாய் சார்ந்த எல்லா வித பிரச்னைகளையும் நீக்க கூடிய தன்மை இந்த கொய்யா இலையில் உண்டு.
ஆறாத வயிற்று புண் இருப்பவர்கள் கொய்யா இலை டீ குடித்து வந்தால் உடனடி நிவாரணத்தை காணலாம்.
கொய்யா இலை டீ செய்யும் முறை :
கொய்யா இலைகளை எடுத்து, இரண்டு டம்பளர் தண்ணீருடன் கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் ஒரு டம்பளர் அளவிற்கு குறையும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்னர், தேவையான அளவு தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இது, வயிற்றுப்புண் மற்றும் உணவுக் குழாய் பகுதியில் ஏற்படக்கூடிய புண்களை குணமாக்குவதில் அருமையான இயற்கை மருந்தாக விளங்குகிறது.
தனித்துவமான சுவையும் மருத்துவ குணங்களும் கொண்ட கொய்யா பழம் மற்றும் அதன் இலைகள் நம் தினசரி வாழ்க்கையில் கட்டாயமாக இடம்பெற வேண்டியவையாகும். நோய் எதிர்ப்பு சக்தி முதல், நினைவாற்றல், வயிற்று நலன் என பல வகைகளில் நமக்கு நன்மை தரும் இப்பழம் உண்மையில் ஒரு இயற்கை மருத்துவமாகும். ஆரோக்கிய வாழ்விற்கு கொய்யா மற்றும் அதன் இலைகள் அவசியமானவை.