உங்களுக்கு சர்க்கரை இருக்கா? உண்மையை உடைக்கும் HbA1c பரிசோதனை!

கடந்த 3 மாத கால சர்க்கரை அளவை துல்லியமாக காட்டும் HbA1c பரிசோதனை பற்றிய முழுமையான விளக்கங்கள்.
HbA1c test
HbA1c testImage Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

HbA1c என்பது கடந்த மூன்று மாதங்களில் நம் ரத்தத்தில் உள்ள சராசரி சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை அளவிடும் ஒரு ரத்த பரிசோதனை ஆகும். இது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் (Glycated Hemoglobin) என்று அழைக்கப்படுகிறது.

HbA1c எப்படி வேலை செய்கிறது?

நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் போது அது ஹீமோகுளோபின் அணுக்களுடன் சேர்ந்து கொள்கிறது. சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் தோராயமாக 3 மாதங்கள் என்பதால், இந்த சோதனை கடந்த 3 மாத சர்க்கரை கட்டுப்பாட்டின் முழுமையான நிலையை துல்லியமாக காட்டுகிறது.

HbA1c சோதனை என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்), ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் புரதத்துடன் எவ்வளவு தூரம் ஒட்டிக் கொண்டுள்ளது என்பதைக் காட்டும் ஒரு ரத்த பரிசோதனை ஆகும். இது கடந்த 2 முதல் 3 மாதங்களின் சராசரி ரத்த சர்க்கரை அளவைக் காட்டுகிறது. ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் சுமார் 120 நாட்கள் (3 மாதங்கள்) என்பதால் இந்த சோதனையின் மூலம் நம் நீண்டகால சர்க்கரை கட்டுப்பாட்டைத் துல்லியமாக அறிய முடியும்.

HbA1c மற்றும் வெறும் வயிற்று சர்க்கரை பரிசோதனை (FBS) இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள்:

கால அளவு:

வெறும் வயிற்று சர்க்கரை(FBS) பரிசோதனையில் செய்யப்படும் அந்தக் குறிப்பிட்ட கணத்தில் அல்லது நாளில் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மட்டும் காட்டுகிறது.

HbA1cயில் கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களின் (90 நாட்களின்) சராசரி சர்க்கரை அளவை பிரதிபலிக்கிறது. (சிவப்பணுக்களின் ஆயுட்காலம் சுமார் 120 நாட்கள் என்பதால்).

உண்ணாவிரதம் தேவை (Fasting Requirement):

வெறும் வயிற்று சர்க்கரை பரிசோதனைக்கு செல்வதற்கு முன்பு குறைந்தது 8 முதல் 12 மணி நேரம் உணவு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

HbA1c பரிசோதனைக்கு உண்ணாவிரதம் தேவை இல்லை. நாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடாமல் அல்லது சாப்பிட்ட பிறகும் கூட, எவ்வித தயாரிப்பும் இல்லாமல் இந்த ரத்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

தினசரி மாற்றங்கள் (Daily Fluctuations):

வெறும் வயிற்று சர்க்கரை பரிசோதனைக்கு முந்தையநாள் சாப்பிட்ட உணவு, மனஅழுத்தம், தூக்கம் அல்லது சிறிய உடல்நலக் குறைவால் கூட இந்த அளவு உடனடியாக ஒரே நாளில் மாறக்கூடியது.

HbA1c பரிசோதனையில் சிறிய அளவிலான தற்காலிக மாற்றங்களால் எதுவும் எளிதில் மாறுவதில்லை. உணவு அல்லது உடல் செயல்பாடு போன்ற காரணங்களால் ஏற்படும் குறுகிய கால ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாததால் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டின் ஒரு நீண்டகால நிலைத்தன்மையை காட்டுகிறது. நிலையானது மற்றும் துல்லியமானது.

Diabetics - HbA1c
Diabetics - HbA1c

பயன்பாடு:

வெறும் வயிற்று சர்க்கரை பரிசோதனை உடனடி ஸ்கிரீன் செய்தல் மற்றும் தினசரி சர்க்கரை அளவைக் கண்காணிக்க உதவுகிறது.

HbA1c நீரிழிவு நோயை உறுதிப்படுத்தவும், சிகிச்சை எந்த அளவுக்குச் சரியாக வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாக மதிப்பிடவும் மிகவும் ஏற்றது.

இதையும் படியுங்கள்:
உடல் பருமன் பெரும் அச்சுறுத்தலா? லான்செட் ஆணைய அறிக்கை!
HbA1c test

HbA1c முடிவுகளின் விளக்கம்:

5.7% க்கும் கீழே இருந்தால் நீரிழிவு இல்லை. சாதாரண நிலை என்று பொருள் கொள்ளலாம்.

5.7% முதல் 6.4% வரை இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய நிலை (Prediabetes). சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ள நிலை என்று பொருள்.

6.5% அல்லது அதற்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் உறுதி செய்யப்படுகிறது.

இப்பரிசோதனை யாருக்குத் தேவைப்படும்?

அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு போன்ற சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருப்பவர்கள் அதனைக் கண்டறிவதற்காக இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதா மற்றும் மாத்திரைகள்/இன்சுலின் சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்காணிப்பதற்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த HbA1c பரிசோதனையை செய்து கொள்வது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களின் மூளையைச் சீரழிக்கும் இரட்டை அச்சுறுத்தல்!
HbA1c test

Reference: