கசூரி மேத்தி என்னும் உலர்ந்த வெந்தயக் கீரை நீண்ட காலமாக வட இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பச்சை வெந்தயக் கீரைகள் அறுவடை செய்யப்பட்டு, அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தை பாதுகாக்க கவனமாக உலர்த்தப்படுகின்றன. கசூரி மேத்தி அதன் லேசான கசப்பு சுவைக்காகவும் வாசனைக்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக இது லேசான இனிப்பு சுவை கொண்ட வட இந்திய கிரேவிகள், ரொட்டிகள், சப்பாத்திகளிலும், பன்னீர் சேர்க்கப்படும் உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.
கசூரி மேத்தியின் நன்மைகளில் ஒன்று அது நீண்ட காலம் கெடாமல் இருக்கும். தனித்துவமான முறையில் உலர்த்தப்பட்டதால் அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. கசூரி மேத்தி இந்திய உணவு வகைகளில் பாரம்பரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பல பாரம்பரிய சமையல் வகைகளில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. காடாய் பன்னீர் , பன்னீர் பட்டர் மசாலா, சாஹிப் பன்னீர், பட்டர் சிக்கன், மேத்தி பராத்தா போன்ற உணவுகளில் கசூரி மேத்தி பயன்படுத்தும் போது தான் அதன் சுவை தனித்துவமாக உள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் சமையல் பாரம்பரியத்தில் கசூரி மேத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. பாகிஸ்தான் உணவு வகைகளில் கூட கசூரி மேத்தி முக்கிய பண்பு வகிக்கிறது.
ஆரோக்கிய நன்மைகள்
•கசூரி மேத்தியில் உள்ள வைட்டமின் ஏ, சி, இரும்பு, கால்சியம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. கால்சியம், இரும்பு போன்றவை உடலை உற்சாகமாகவும் எலும்பை வலுவாக்கவும் உதவுகின்றன. இது மூட்டுவலி மற்றும் உடல் வலி போன்ற நிலைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் உதவுகின்றன.
•கசூரி மேத்தியில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானம் மற்றும் வாயு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகிறது. கசூரி மேத்தியில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்தி, வழக்கமான குடல் இயக்கங்களை நன்கு செயல்பட உதவுகிறது. இது மலச்சிக்கலை தவிர்க்கவும், அஜீரணம் மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.
•இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுக்கிறது. நார்ச்சத்து உடலில் குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்கி, சர்க்கரை நோயைப் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரழிவு நோயாளிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த கசூரி மேத்தி உதவுகிறது.
•கசூரி மேத்தியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கும் முதன்மையான பொருளாகும். இது இதயத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. கசூரி மேத்தியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. எனவே இதயத்தை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்க அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
•இருமல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நிலைகளை நிர்வகிப்பதில் கசூரி மேத்தியின் பண்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. இது மூச்சிரைப்பு நோயை குறைக்கவும், சுவாசத்தை எளிதாக்கவும் உதவுகிறது.