
சமஸ்கிருதத்தில், 'பாலா' என்றால் குழந்தை என்றும் 'ஆசனம்' என்றால் போஸ் என்றும் பொருள். பாலாசனம் குழந்தை படுத்திருப்பதை போல் காட்சி தருவதால் 'குழந்தை ஆசனம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் உடல் மற்றும் மனதை ஆழமாக தளர்த்த உதவும் ஓய்வு ஆசனமாகும். இது உடலின் ஒட்டுமொத்த நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மற்ற யோகா ஆசனத்தையும் போலவே, இதையும் உணவுக்குப் பிறகு குறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் கழித்து தான் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை நீங்கள் பயிற்சி செய்யும்போது உங்கள் குடல் மற்றும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
செய்முறை :
முதலில் விரிப்பில் மண்டியிட்டு அமர்ந்து உங்கள் கால் பெருவிரல்களை ஒன்றாகத் தொட்டு இருக்கும்படி குதிகால் மீது உட்காருங்கள். இப்போது உங்கள் முழங்கால்களை சற்று அகலமாக விரிக்கவும். அடுத்து மூச்சை உள்இழுத்தபடி முன்பக்கமாக குனிந்து உங்கள் தொடைகளுக்கு இடையில் உங்கள் உடற்பகுதியை கொண்டு வந்து தரையை உங்கள் முன்நெற்றியால் தொட வேண்டும்.
முன்னால் குனியும் போது மூச்சை உள்இழுத்து பின்னர் முன்னால் மெதுவாக குனியும் போது மூச்சை வெளியில் விட்டுகொண்டே குனியவேண்டும். நெற்றி தரையில் தொடும்போது நார்மல் மூச்சில் இருக்க வேண்டும். உங்கள் கைகள் இரண்டையும் தலைக்கு முன்னால் நீட்டி தரையை (படத்தில் உள்ளபடி) தொட வேண்டும். பின்னர், கண்களை மூடி, சீரான மூச்சில் 30 வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் இருங்கள். பாலசனம் ஆசனம் ஒரு ஓய்வு ஆசனம் என்பதால், நீங்கள் 30 வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கடினமாக ஆசனங்களை செய்யும் ஓய்விற்காக இடையில் இந்த ஆசனத்தை செய்யலாம்.
எச்சரிக்கை:
இந்த ஆசனத்தைச் செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில எச்சரிக்கைகள் இவை.
* உங்களுக்கு கணுக்கால் அல்லது முழங்கால் வலி, அறுவை சிகிச்சை ஏதாவது செய்திருந்தால் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* உங்கள் கால்கள், முழங்கால்கள், தொடைகள், முதுகெலும்பு அல்லது கழுத்தில் சமீபத்தில் அல்லது ஆழமான காயம் ஏற்பட்டிருந்தால், அதைச் செய்யவே வேண்டாம்.
* பாலாசனம் செய்யும்போது, உங்கள் இடுப்பு மற்றும் தொடை தசைகளை அதிகப்படியாக வளைக்க வேண்டாம்.
* உங்களுக்கு கடுமையான முதுகுவலி அல்லது காயங்கள் இருந்தால், பாலசனத்தைத் தவிர்ப்பது நல்லது அல்லது ஒரு யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் செய்வது நல்லது.
* நீங்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் பாலாசனத்தைத் தவிர்க்க வேண்டும். குணமடைந்த பிறகு இந்த ஆசனத்தை தொடரலாம்.
* உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* வயிற்று அசௌகரியம் அல்லது குடலிறக்கம் போன்ற குறிப்பிட்ட இரைப்பை குடல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் பரிந்துரைக்கப்படவில்லை.
* உங்களிடம் ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், யோகா பயிற்சி செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
நன்மைகள்:
* 'குழந்தை ஆசனம்' செய்யும் போது முன்னோக்கி வளைவது உடல் முழுவதும், குறிப்பாக தலைப் பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தலைவலியைப் போக்க உதவும். மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மனதை அமைதிப்படுத்துகிறது. பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
* கீழ் முதுகு, கணுக்கால், இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை மெதுவாக நீட்டி, நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது மற்றும் பதற்றத்தை நீக்குகிறது.
* இந்த ஆசனம் முதுகுத்தண்டை, தசைகளை வலிமையாக்குகிறது.
* இது உடலில் உள்ள உள் உறுப்புகளை மசாஜ் செய்து வளைக்க உதவுகிறது, அவற்றை சுறுசுறுப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
* பாலாசனம் கீழ் முதுகு , கழுத்து, இடுப்பு மற்றும் கால்களில் வலியைக் குறைக்க உதவும்.
* முழங்கால் பகுதியில் உள்ள தசைநாண்கள், தசைகள் மற்றும் தசைநார்கள் முழுமையாக நீட்டி, நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது .
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.