

ரத்தம் உறைவதற்கு தேவையான காரணிகள் குறைவாக இருந்தால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படும். இந்த பிரச்னைக்கு ஹீமோபிலியா (Hemophilia) என்று பெயர். ஆண்களை இது அதிகம் பாதிக்கிறது. இவற்றில் பல வகைகள் உள்ளன. ஹீமோபிலியா A, ஹீமோபிலியா B என இரண்டு வகைகள் உள்ளன. ஹீமோஃபீலியா பி என்ற நோயை கிறிஸ்துமஸ் நோய் என்றும் சொல்வார்கள்.
இந்தியாவில் முதல் 85 சதவீதத்திற்கு மேற்பட்டோர் ஹீமோபிலியா பாதிப்பு கண்டறியப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹீமோபிலியா B ஐ விட ஹீமோபிலியா A நான்கு மடங்கு அதிகம் உள்ளது. இந்த நோய் எக்ஸ் குரோமோசோம் மூலம் தாயிடம் இருந்து ஆண் குழந்தையை பாதிக்கிறது.
சிறிய காயங்கள் மட்டுமன்றி உள் உறுப்புகள், மூட்டுகள், தசைகள் மற்றும் மூளை ஆகியவற்றில் தன்னிச்சையான இரத்தக் கசிவு ஏற்படலாம்;
குறிப்பாக, மூட்டுகளில் ஏற்படும் இரத்தப்போக்கு கடுமையான வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். ரத்தப் பரிசோதனை வாயிலாக ரத்தம் உறையும் நேரம் மற்றும் மரபணு காரணிகளின் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
ரத்தம் உறைதலுக்கு தேவையான காரணியை உடலுக்குள் செலுத்தலாம். ரத்தப்போக்கை தடுக்கும் காரணியை குறிப்பிட்ட இடைவெளியில் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
காயங்கள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, அஸ்பிரின் போன்ற வலி நிவாரணி மருந்துகளை தவிர்த்தல் போன்றவையும் இரத்தம் வேகமாக வெளியேறுவதை தடுக்க உதவும்.
ஹீமோபிலியா A கோளாறு உள்ளவர்கள் வாரந்தோறும் அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை நோயாளியின் தேவைக்கு ஏற்ப ஊசி மருந்து செலுத்த வேண்டும்.
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 'கோன்சி ஸ்மாப்' என்ற ஊசி மருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்தது. வேகத்தை குறைக்கும் தடுப்பான்கள் உள்ளவர்களுக்கு பயன்படும் மருந்து இது.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் மூட்டுகளில் ஏற்படும் இரத்த கசிவு கண்டறியலாம்.
உலக ஹீமோபிலியா கூட்டமைப்பு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி, மலை ஏறுதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வில்வித்தை போன்ற பாதுகாப்பான விளையாட்டுக்களை குழந்தைகள் விளையாடலாம்.
இவை ரத்தப்போக்கு அபாயங்களை குறைப்பதோடு மூட்டு நிலைத்தன்மை தசை வலிமை போன்றவற்றை மேம்படுத்துகிறது. சைக்கிள் ஓட்டும் போதும், ஸ்கேட்டிங் செய்யும் போதும், தலைக்கவசம் பாதுகாப்பு பட்டைகளை அணிவது முக்கியம். மூட்டுகளை பாதுகாக்க தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஹீமோபிலியா என்பது மரபணு மாற்றத்தால் உண்டாகும் நோய் என்பதால் இதனை தடுக்க முடியாது.
பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன் மரபணு சோதனை மூலம் இதனை கண்டறியலாம். செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்கள் மரபணு சோதனையின் மூலம் இந்த பிரச்சனை உள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.
உயரம் மற்றும் உடல் எடையை பராமரிப்பது அவசியம். அதிக உடல் எடை மூட்டுகளில் இரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். புரதம், இரும்பு சத்து நிறைந்த உணவுகள், விட்டமின் சி, முழுதானியங்கள், போதிய அளவு நீர்ச்சத்து என்று சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஹீமோபிலியாவிற்கு தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இனி காயம் அடையும்போது ரத்தப்போக்கு அதிகமாகி ரத்தம் உரைவதில் தாமதமோ பிரச்னையோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)