

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், களைப்பைப் போக்க நாம் முதலில் செய்வது கையில் மொபைலை எடுப்பதுதான். நிம்மதிக்காக ஆரம்பிக்கும் அந்த ஸ்க்ரோலிங் மணிக்கணக்காக நீடித்தும் நமக்கு புத்துணர்ச்சி கிடைப்பதில்லை. மாறாக, இன்னும் அதிக சோர்வாக உணர்கிறோம். இது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? Digital Burnout வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நமது மூளை அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்குத் தூண்டுதல்கள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் ஒவ்வொரு போஸ்ட்டும், வீடியோவும் மூளைக்கு இடைவிடாத தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இதனால் மூளை சோர்வடைகிறது. அதோடு நம் மனமும் கனமாகவும், ஒருவித அமைதியற்ற நிலையிலும் இருக்கும். இதை டிஜிட்டல் பர்ன்அவுட் அல்லது டிஜிட்டல் சோர்வு என்றழைக்கிறார்கள் வல்லுநர்கள்.
தொடர்ச்சியான இந்த தகவல் உள்ளீடு காரணமாக, மறுநாள் காலையில் பலருக்கும் 'மூளை மந்தநிலை' ஏற்படுகிறது. குறிப்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
ஸ்க்ரோல் செய்வதை ஏன் நம்மால் நிறுத்த முடிவதில்லை?
சமூக வலைதளங்கள் மூளையின் 'ரிவார்டு சிஸ்டத்தை' பாதிக்கின்றன. ஒவ்வொரு ஸ்க்ரோலும் ஒரு சிறிய அளவு டோபமைனை வெளியிடுகிறது. இது ஒரு போதை போல மாறிவிடுகிறது. நமக்கு சலிப்பு ஏற்பட்டாலும் அல்லது சோர்வாக உணர்ந்தாலும், மூளை அடுத்த புதிய தகவலுக்காக ஏங்குகிறது. இதனால் ஓய்வு கிடைக்க வேண்டிய நேரத்தில் மூளை அதிக வேலை செய்கிறது.
டிஜிட்டல் சோர்விலிருந்து மீள்வது எப்படி?
இதற்காக சமூக ஊடகங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதை ஓய்வுக்கான மாற்றாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
வேலை முடிந்தவுடன் போனைத் தொடாதீர்கள். குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது அமைதியாக அமர்வது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.
சாப்பாட்டு அறை மற்றும் படுக்கை அறையை போன் இல்லா இடங்களாக மாற்றவும். இது மூளைக்கு அந்த இடங்கள் ஓய்வுக்கானவை என்பதை உணர்த்தும்.
உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போனைத் தள்ளி வைத்துவிடுங்கள். மொபைல் திரையில் இருந்து வரும் வெளிச்சம் மெலடோனின் சுரப்பைக் குறைத்து தூக்கத்தைக் கெடுக்கும். அதற்குப் பதில் புத்தகம் வாசிக்கலாம்.
சமூக ஊடகங்களைப் பார்த்த பிறகு நீங்கள் கோபமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்ந்தால், அது உங்கள் மூளைக்கு ஓய்வு கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறி.
நாட்குறிப்பு எழுதுவது, மெதுவான உடற்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்கும்.
மற்றவர்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பார்த்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் காலங்களில் இத்தகைய உள்ளடக்கங்களை மியூட் செய்துவிடுங்கள்.
நீண்ட கால சோர்வு, கவனக்குறைவு மற்றும் உணர்ச்சியற்ற தன்மை ஆகியவை உங்கள் ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணிகள். இவற்றை ஆரம்பத்திலேயே கவனித்து, டிஜிட்டல் உலகிலிருந்து அவ்வப்போது விடுபடுவது உங்கள் மனநலத்தை மேம்படுத்தும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)