
ஆரோக்கிய வாழ்விற்கு தங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் அறிந்து அதன் செயல்பாட்டு பராமரிப்பு முறைகளையும் அறிந்து கொண்டால் ஆரோக்கியத்தில் நம்மால் சிறந்து விளங்க முடியும். அதனைப் பற்றிய குறிப்புகளை இதில் காண்போம்.
மூளை:
உடலில் மிக முக்கியமானது மூளை. அதை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தாராளமாக தண்ணீர் பருக வேண்டும். காரணம் மூளையில் 75% தண்ணீர் தான் இருக்கிறது. உடலில் தண்ணீர் தன்மையில் தட்டுப்பாடு ஏற்படும் போது அது முதலில் மூளையைத் தான் பாதிக்கும்.
மேலும் உடலின் தேவைக்காக சத்துணவுகளை உண்ணுகிறோம். அதில் குளுக்கோஸ் ஆக மாற்றப்படுவது தான் மூளைக்கு வலுவூட்டுகிறது. மூளை சுறுசுறுப்பாக இயங்க பழங்கள், தானியங்கள் காய்கறிகள், முந்திரி, பாதாம் பருப்பு போன்ற விதை வகைகள், கொழுப்பு குறைந்த உணவுகள் மிகவும் அவசியம்.
அதேபோல் மூளையின் முக்கிய பகுதிகளுக்கும் அங்குள்ள ரசாயனத்திற்கும் வலுவூட்டுவதற்கு ஒமேகா 3 பேட்டி அமிலங்கள் தேவை. இதற்கு சின்ன வகை மீன்களே சிறந்தவை . அவற்றை வறுக்காமல் குழம்பு வைத்து சாப்பிட்டால் சோம்பேறித்தனம், தலைவலி போன்றவை வராது. வந்தாலும் அவற்றை சரிப்படுத்தவும் இந்த மீன்கள் உதவுகிறது.
பெண்களுக்கு வீட்டு வேலையே சிறந்த உடற்பயிற்சி தான். வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் அளவுக்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்தால் வயதானாலும் மூளை தளராமல் இருக்கும்.
கண்கள்:
கண்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதில் அனைவரும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறமுள்ள பழங்களையும் , காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். சோளம், ஆரஞ்சு, மாம்பழம், கீரை, கேரட் போன்றவைகள் கண்களுக்கு அதிக ஆரோக்கியத்தை தருகின்றன. நடுத்தர வயதை கடக்கும்போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்ய வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை இருந்தால் கண்களின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
காது:
குளித்து முடித்தவுடன் காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். மென்மையானதோ, கரடு முரடானதோ எதையும் காதுக்குள் போட்டு குடையக்கூடாது. அப்படி குடைந்தால் உள்காயங்கள் ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்படும். ஆதலால் கோழி இறகு, பட்ஸ் போன்றவைகளை இதற்கு அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
வாய், உதடுகள்:
சிலரின் வாயின் ஓரம் உள் பகுதியில் உதடுகள் வெடித்து, கீறலுடன் தசைகள் பிசிறியும் இருப்பதைக் காணலாம். அதற்கு காரணம் என்னவென்றால் வைட்டமின் பி2 சத்தின் பற்றாக்குறை தான். இந்தக் குறையை போக்குவதற்கு கொழுப்பு சத்து குறைந்த பால் அருந்த வேண்டும். அடர்ந்த பச்சை நிறம் உள்ள காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது, தவிடு நீக்காத தானியங்கள் சாப்பிடுவது போன்றவை தேவையான சத்தை கொடுக்கும். இவைகளில் நிறைய வைட்டமின் பி இருக்கிறது. வாய் மற்றும் உதட்டில் உள்ள நிற மாற்றங்கள் போன்றவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மார்புகள்:
குறிப்பிட்ட கால இடைவெளியில் பெண்கள் சுயமாகவே மார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வீக்கமோ, கட்டியோ, கல் போன்றோ இருந்தால் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். 35 வயதை கடந்து விட்டால் இந்த பரிசோதனை மிக அவசியம்; ஏனெனில் 30ல் இருந்து 40 வயதுக்குள் மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழல் 250 இல் 1 என்ற கணக்கில் உள்ளது . 40 லிருந்து 49 வயதில் இது 66 இல் ஒன்றாக உள்ளது. அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது பெண்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்பதால் 35 வயதை கடந்து விட்டால் இந்த பரிசோதனை மிக அவசியம்.
உடனடியாக கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும். மேலும் நெஞ்சு பகுதிகளை இறுக்கி பிடிக்காத அளவுக்குரிய பொருத்தமான உள் சட்டைகளை அணிவது அவசியம். மற்றும் இவைகளின் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியும் அவசியம்.
இதயம்:
பெண்களின் இதயம் ஆண்களை விட பலமானது என்றாலும் பெண்கள் இதயத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். நடுத்தர வயதை கடந்தால் தான் இதய நோய் வரும் என்ற நிலை மாறி 20 -25 வயதில் கூட நோய் அறிகுறி தென்பட தொடங்கி விடுகிறது. அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவைகளை முதலில் கண்டறிந்து விட்டால் இதை நோய்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் இருக்கும் பெண்களுக்கு இதய நோய் வரும் சூழ்நிலை அதிகம். பொதுவாகவே பெண்கள் இதயநோய் அறிகுறிகள் மீது அதிக அலட்சியம் காட்டுவது அவர்களது உயிருக்கே கூட ஆபத்தாகி விடுகிறது. அதனால் சுவாசத் தடை, கைவலி, தளர்ச்சி, உடல்வலி, கழுத்திலும், தாடை பகுதியில் சொல்ல முடியாத அவஸ்தைகள், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகளை பெண்கள் உணர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.
வயிறு:
நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தான் உண்ண வேண்டும். உணவு பழக்க வழக்கம் மாறியதுமே வயிறு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறது.
வயிற்றின் தேவையை அறிந்து உண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது தவறு. அது போல அதிகமாக சாப்பிடுவதும் தவறு. வீட்டில் மீதம் இருக்கும் உணவை எல்லாம் சாப்பிட்டு தீர்த்து விட வேண்டும் என்று எண்ணுவது அதிலும் தவறு.
ஆதலால் நமது ஆரோக்கியத்தின் காவல்காரனாக இருப்பது வயிறே. நாம் சாப்பிடுவது எப்படி ஜீரணம் ஆகிறது என்பதில் தான் ஆரோக்கியமே அடங்கி இருக்கிறது. ஆதலால் பெரிய, சின்ன வெங்காயம், பூண்டு போன்றவை வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. வெங்காயத்தில் இருக்கும் சல்பர் ரசாயனம் குடலில் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது. அவசரப்படாமல் நிதானமாகவே எப்பொழுதும் சாப்பிட வேண்டும்.
சிறுநீர்ப் பை:
இடம், பொருள், சூழலை கருத்தில் கொண்டு சிறுநீரை அடக்கி வைப்பதால் பலவிதமான நோய்கள் ஏற்பட காரணமாகிறது. அதனால் சிறு நீரை அடக்காத படிக்கு அதை வெளியேற்றி விடுவது நல்லது. இதற்கு ஜூஸ் இதர பானங்களை விட தண்ணீரே சிறந்தது.
கால்கள்:
நின்று கொண்டே நீண்ட நேரம் வேலை பார்ப்பது, சமைப்பது போன்று கால்களுக்கு அதிக வேலை கொடுத்தால் மூட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதிக உடற்பயிற்சி, அதிக ஓட்டம், அதிகமாக நடப்பது, போன்றவைகளும் மூட்டுகளை பாதிக்கும். அதனால் தினசரி ஓட்ட பயிற்சி எடுப்பவர்கள் இடையிடையே ஒரு சில நாட்கள் நீச்சல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கால்களுக்கு யோகா பயிற்சியும் நல்லதே. கால்களில் இறுக்கமான செருப்புகளை அணியாமல் எதை அணிந்தாலும் பாதங்கள் நெகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்து அணிவது சிறப்பு. நீரிழிவு நோயாளியாக இருந்தால் தினமும் பாதங்களை மருத்துவரின் ஆலோசனைப்படி சுடுநீரில் முக்கி துடைத்து சுத்தம் செய்து வர வேண்டும்.
கைகள்:
நம் கைகளை நாம் குறைந்த பட்சம் 25 நொடி நேரமாவது தேய்த்து கழுவ வேண்டும். அப்படி நன்றாக தேய்த்து கழுவினால் கையில் இருக்கும் கிருமிகள் அத்தனையும் அழியும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. நமக்கு ஏற்படும் முக்கால்வாசி நோய்த் தொற்றுகளும் நம் கைகளை சுத்தமாக கழுவாததால்தான் ஏற்படும். இதை, நினைவில் கொண்டு கொரோனா காலத்தில் செய்தது போல் கைகளை அவ்வப்போது சோப்பு கொண்டு சுத்தம் செய்வது மிக மிக அவசியம். இதனால் நோய்த் தொற்றுகளில் இருந்து விமோசனம் கிடைக்கும்.
இப்படி நம் உடல் உறுப்பு ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்தினால் நோய் நொடியின்றி வாழலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படும் என்பது உறுதி.