

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, சமையலுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொழுப்பு வகைகளான நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பல்வேறு சமையல் எண்ணெய்களையும், தமனிகளில் கொழுப்பு படிவதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் 'கெட்ட' கொலஸ்ட்ரால் (LDL) அளவு அதிகரிப்பதற்கும் இடையிலான தொடர்பை இந்த ஆய்வு ஒப்பிட்டு ஆராய்ந்தது.
உடலில் கெட்ட கொழுப்பை (LDL Cholesterol) அதிகரிக்கச் செய்யும் அபாயம் பாமாயில் எண்ணெய் (Palm Oil) மற்றும் தேங்காய் எண்ணெய் (Coconut Oil) போன்ற அதிகளவில் நிறைவுற்ற கொழுப்புகளை (Saturated Fats) கொண்ட சமையல் எண்ணெய்களில் அதிகம். மேலும், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதி (Vanaspati / Trans fats) போன்ற எண்ணெய்களும் இதயத்திற்கு மிகவும் ஆபத்தானவை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் ICMR-INDIAB நடத்திய சமீபத்திய தேசிய அளவிலான ஆய்வின்படி, கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது, நெய்/வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு உடலில் 'கெட்ட கொழுப்பு' (LDL Cholesterol) அதிகரிக்கும் அபாயம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் நடத்தப்பட்ட தரவுகளின்படி, கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது நெய்யை முக்கியமாக பயன்படுத்தியவர்களுக்கு ‘கெட்ட கொழுப்பு’ (LDL) அதிகரிக்கும் அபாயம் சுமார் 3 மடங்கு இருந்தது.
தேங்காய் எண்ணெயிலும், கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது LDL அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
உணவில் நிறைவுற்ற கொழுப்பு 2% அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும், LDL அதிகரிக்கும் அபாயம் 6% அதிகரித்தது.
நெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கிறது.
அதன்படி, கடலை எண்ணெயை அடிப்படையாக வைத்து, மற்ற சமையல் எண்ணெய்கள் மற்றும் கொழுப்புப் பொருட்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) எப்படிக் கூட்டுகின்றன என்பதை இந்த ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வு முடிவுகள் விளக்குகின்றன.
கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அதிகரிக்கும் மடங்கு அளவு:
இந்த ஆய்வில் கடலை எண்ணெய் ஒரு அடிப்படை அளவுகோலாக (Benchmark) பயன்படுத்தப்பட்டது.
நெய் / வெண்ணெய்: அதிக LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவு இருப்பதற்கான வாய்ப்பு 3.4 மடங்கு அதிகம் (மிக அதிக ஆபத்து)
தேங்காய் எண்ணெய்: வாய்ப்பு 2.9 மடங்கு அதிகம் (அதிக ஆபத்து)
சூரியகாந்தி எண்ணெய்: வாய்ப்பு 1.5 மடங்கு அதிகம்
பாமாயில்: வாய்ப்பு 1.7 மடங்கு அதிகம்
சோயாபீன் எண்ணெய்: வாய்ப்பு 1.8 மடங்கு (அதிக ஆபத்து)
ஆனால் கடுகு எண்ணெயில் குறைந்த LDL ஏற்படும் அபாயம் 32% குறைவு என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அபாயத்திற்கான முக்கியக் காரணம்:
நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டிலும் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. நிறைவுற்ற கொழுப்பு LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கக்கூடும்
அதாவது, நெய்யில் சுமார் 62% மற்றும் தேங்காய் எண்ணெயில் சுமார் 82% நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) உள்ளது. நிறைவுற்ற கொழுப்பை அதிகமாக உட்கொள்ளும்போது, கல்லீரலால் LDL கொழுப்பைச் சரியாக வெளியேற்ற முடிவதில்லை; இதனால் காலப்போக்கில் தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் படியத் தொடங்குகிறது. இதுவே ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி, தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான (இதய நோய்) அபாயத்தை அதிகரிக்கிறது.
தேங்காய் எண்ணெய் HDL (நல்ல) கொலஸ்ட்ராலை உயர்த்தக்கூடும் என்றாலும், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, அதே நேரத்தில் அதிகரிக்கும் கெட்ட LDL கொலஸ்ட்ராலால் ஏற்படும் இதய நோய் அபாயங்களை நீக்கிவிடாது என்று சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒருவருக்கு தினசரி 27 கிராம் சமையல் எண்ணெய் பரிந்துரைக்கப்படும் நிலையில், இந்தியாவில் நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் ஒரு நாளைக்கு சுமார் 29.5 கிராம் சமையல் எண்ணெய் அல்லது கொழுப்பை உட்கொள்கிறார்கள் என்றும், கிராமப்புறத்தில் உள்ள மக்கள் சுமார் 16.2 கிராம் மட்டுமே உட்கொள்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆரோக்கியமான மாற்று வழிகள்:
இந்த ஆய்வின்படி, கடுகு எண்ணெய் ஒரு மாறுபட்ட தன்மையைக் காட்டியது; கடலை எண்ணெயுடன் ஒப்பிடுகையில் இதில் குறைந்த HDL (நல்ல கொலஸ்ட்ரால்) அளவு இருப்பதற்கான ஆபத்து 32% குறைவாக இருந்தது. கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்குச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக கடுகு எண்ணெய், நல்ல கொழுப்பை (HDL) தக்கவைப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது.
எந்த எண்ணெயமாக இருந்தாலும், அதனை அளவாகப் பயன்படுத்துவதே இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
சமையலுக்கு ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்றிப் பயன்படுத்துவது (Rotation) சிறந்தது. அதாவது ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றைச் சுழற்சி முறையில் (Rotation) அல்லது கலந்து பயன்படுத்துவது நல்லது என்று ICMR-NIN பரிந்துரைக்கிறது.
எந்த எண்ணெயாக இருந்தாலும், அதனை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்தக் கூடாது என்று ICMR எச்சரிக்கிறது. அவ்வாறு செய்வதால் நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்கள் உருவாகி, புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தை உண்டாக்கும்.
தினமும் அதிக அளவில் நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்ளாதீர்கள். உணவில் சேர்க்கப்படும் கொழுப்பின் அளவை பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் (உங்கள் தினசரி ஆற்றல் தேவையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் 15–30 கிராம் வரை) வைத்துக்கொள்ளுங்கள்.
கடலை, கடுகு, ஆலிவ் அல்லது நல்லெண்ணெய் போன்ற இதயத்திற்கு உகந்த நிறைவுறாக் கொழுப்புகளை (unsaturated fats) கொண்ட எண்ணெயை உணவில் சேர்த்து சமநிலையைப் பேணுங்கள்.
எண்ணெயை அளவோடு பயன்படுத்துவதுடன், வேகவைத்தல், ஆவியில் வேக வைத்தல், மிதமான சூட்டில் வதக்குதல் போன்ற சமையல் முறைகளை தேர்வு செய்வதும் முக்கியம்.
ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயை மட்டும் சார்ந்திருக்காமல், உங்கள் ஒட்டுமொத்த உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் இரத்தச் சர்க்கரை அளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே உங்கள் ஆரோக்கியம் அமைகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.