
யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். ‘யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல்’ என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். ஆன்மாவை கடவுளுடன் இணைத்து ஆன்ம பலத்தை அதிகரிக்கும் யோகாவில் ஏழு முக்கிய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. முக்கிய யோகா வகைகள் ஹத யோகா, ராஜ யோகா, கர்ம யோகா, பக்தி யோகா, ஞான யோகா, மந்திர யோகா மற்றும் தந்திர யோகா ஆகும். இவற்றை தவிர, அஷ்டாங்க யோகா, வின்யாசா யோகா போன்றவையும் பிரபலமானவை.
ஹத யோகா: ஹத யோகா என்பது உடல் மற்றும் மனதை இணைத்து, உள் அமைதியையும் நல்வாழ்வையும் அடைவதற்கான ஒரு வழியாகும். இது உடல் தோரணைகள் (ஆசனங்கள்), சுவாசப் பயிற்சிகள் (பிராணாயாமம்) மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலம் உடலையும் மனதையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது.
ராஜ யோகா: ராஜ யோகம், அஷ்டாங்க யோகா என்றும் அழைக்கப்படுகிறது. ராஜ யோகா என்பது எட்டு அங்கங்களைக் கொண்ட யோகா பயிற்சியாகும். இது தியானம் மற்றும் சுய ஒழுக்கத்தின் மூலம் மனதை கட்டுப்படுத்தவும், ஆன்மாவை மேம்படுத்தவும் உதவுகிறது. தியானம் மற்றும் சுய ஒழுக்கத்தின் மூலம், ராஜ யோகம் ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. பதஞ்சலி முனிவர் தான் ராஜ யோகத்தின் முக்கிய ஆசிரியர்.
கர்ம யோகா: செயல்கள் மூலம் ஆன்மீக முன்னேற்றம் அடையும் யோகா பயிற்சி. கர்ம யோகா, ஒருவரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், அமைதியானதாகவும் மாற்ற உதவும் ஒரு சிறந்த ஆன்மீக பாதையாகும். இது தன்னலமற்ற செயல்கள் மூலம் ஆன்மாவை இறைவனுடன் இணைக்கும் பாதை.
பக்தி யோகா: பக்தி மூலம் ஆன்மீக முன்னேற்றம் அடையும் யோகா பயிற்சி. இதில், இறைவனின் மீதுள்ள பக்தியால் ஒருவரது ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஞான யோகா: ஞான யோகம் என்பது சுயத்தை அறிந்து, அதன் மூலம் பிரபஞ்சத்துடன் இணையும் ஒரு யோகப் பாதையாகும். இதை ‘அறிவு யோகம்’ என்றும் கூறுவர்.
தந்திர யோகா : மனதை ஒருமுகப்படுத்தி, பிரபஞ்சத்தின் மீது சரணாகதி அடைவதை போதிக்கிறது. இது குண்டலினி ஆற்றலை எழுப்புதல், ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தெய்வீகத்துடன் இணைவதற்கு உதவுகிறது.
மந்திர யோகா: மந்திர யோகா என்பது புனிதமான மந்திரங்களை திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலம் மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தி மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவும் யோகப் பயிற்சியாகும்.
மற்ற பிரபலமான யோகா வகைகள்:
அஷ்டாங்க யோகா: யோகாவின் எட்டு உறுப்புகளைப் பின்பற்றும் ஒரு தீவிரமான பயிற்சி முறையாகும். யமங்கள், நியமங்கள், ஆசனங்கள், பிராணாயாமம் பிரத்யாஹார, தாரணை, தியானம் மற்றும் சமாதி ஆகியவற்றை உள்ளடக்கிய அஷ்டாங்க யோகா என்னும் எட்டு அங்கங்களை உள்ளடக்கியது.
வின்யாசா யோகா: ஓட்டத்தின் மூலம் உடல் மற்றும் மனத்தை இணைக்கும் ஒரு வகை யோகாவாகும். இதனால் இது "ஓட்ட யோகா" என்றும் அழைக்கப்படுகிறது. வின்யாசா என்பது, உடல், மூச்சு மற்றும் மனதை இணைக்கும் ஒரு தியான அனுபவமாகும். வின்யாசா யோகா, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும், பதட்டத்தைக் குறைக்கவும் உதவும்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற யோகாவைத் தேர்ந்தெடுத்து, சிறந்த பயிற்சியாளரை அணுகி, பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அதுவே சிறந்ததும் கூட!