

சமீப காலமாக சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு ஆரோக்கிய பானம் தான் புரோட்டீன் காபி (Protein Coffee அல்லது Proffee). உடற்பயிற்சி செய்பவர்கள், எடை குறைக்க முயற்சிப்பவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள் இதை ஆர்வத்துடன் குடித்து வருகின்றனர். ஆனால், இந்த Proffee உண்மையில் உடலுக்கு நன்மை தருகிறதா? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
புரோட்டீன் காபி என்றால் என்ன?
புரோட்டீன் காபி என்பது சாதாரண காபியுடன் புரோட்டீன் பவுடர் அல்லது புரோட்டீன் ஷேக் சேர்த்து தயாரிக்கப்படும் பானமாகும். இதில் காப்பியின் கஃபீன் சக்தியும், புரோட்டீனின் ஊட்டச்சத்து நன்மைகளும் ஒன்றாக கிடைப்பதாக கருதப்படுகிறது.
புரோட்டீன் என்பது மனித உடலின் அடிப்படை ஊட்டச்சத்து ஆகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடலின் பல திசுக்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது.
மருத்துவ ஆய்வுகளின்படி, போதுமான அளவு புரோட்டீன் எடுத்துக்கொள்வது, தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது எனவே, புரோட்டீன் சேர்க்கப்பட்ட காபி சிலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
புரோட்டீன் காபியின் நன்மைகள்:
1. அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வு:
காபி மட்டும் குடித்தால் சில மணி நேரங்களிலேயே மீண்டும் பசி ஏற்படலாம். ஆனால் புரோட்டீன் சேர்க்கப்படும்போது, வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும். இதனால் தேவையற்ற சிற்றுண்டிகளைத் தவிர்க்க முடியும்.
2. தசை பராமரிப்பு:
உடற்பயிற்சி செய்பவர்கள் தசைகளை பராமரிக்க அதிக புரோட்டீன் தேவைப்படுகின்றது. காலை நேரத்தில் Proffee குடிப்பது தினசரி புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய உதவலாம்.
3. கவனம் அதிகரிக்கலாம்:
காபியில் உள்ள கஃபீன் மூளையின் கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் புரோட்டீன் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவுவதால், ஆற்றல் நீண்ட நேரம் சீராக இருக்கும்.
இது எல்லோருக்கும் பொருத்தமானதா?
புரோட்டீன் காபி சிலருக்கு நன்மை அளித்தாலும், அனைவருக்கும் அவசியமான பானம் அல்ல.
ஏற்கனவே முட்டை, பருப்பு, பால், மீன், கோழி போன்ற உணவுகள் மூலம் போதுமான புரோட்டீன் கிடைத்தால், கூடுதலாக புரோட்டீன் காபி குடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், சில புரோட்டீன் பவுடர்களில் அதிக சர்க்கரை, செயற்கை இனிப்புகள் மற்றும் கூடுதல் சேர்மங்கள் இருக்கக்கூடும். எனவே பொருளின் லேபிளை கவனமாகப் படிப்பது முக்கியம்.
மேலும், ஒரு நாளில் அதிக அளவு கஃபீன் எடுத்துக்கொள்வது தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் பதற்றம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
அதனால் Proffee குடிப்பவர்கள் மற்ற கஃபீன் பானங்களின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலர் காலை உணவைத் தவிர்த்து புரோட்டீன் காபி மட்டும் குடிக்கிறார்கள். ஆனால் மருத்துவ நிபுணர்கள் இதை பரிந்துரைப்பதில்லை. முழுமையான உணவில் கிடைக்கும் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் Proffee-யில் கிடைக்காது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, உடல் எடை குறைப்பு அல்லது தசை வளர்ச்சி போன்ற இலக்குகளை அடைய, Proffee மட்டும் போதாது. சரியான உணவு, போதுமான தூக்கம் மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சியும் அவசியம்.
புரோட்டீன் காபி என்பது சரியான முறையில் பயன்படுத்தினால் சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய பானமாகும். இருப்பினும், உங்கள் உடலின் தேவைகள், உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தே இதன் பயன் மாறுபடும்.
Reference link:
Coffee Consumption and Skeletal Muscle Mass Study - National Institutes of Health (PMC)
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்).