வேகன் உணவு முறை நல்லதா என்றால் நிச்சயம் நல்லது தான். நன்கு திட்டமிடப்பட்ட வேகன் உணவு முறை பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். ஆனால் புரதம், வைட்டமின்B12, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை சமச்சீராகப் பெறுவதை உறுதி செய்தால் நன்மைகளைையே தரும்.
1) வேகன் உணவு என்றால் என்ன?
வேகன் உணவு என்பது இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள் மற்றும் தேன் போன்ற அனைத்து விலங்கு பொருட்களையும் தவிர்த்து தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவுகளை மட்டுமே உண்ணும் ஒரு உணவு முறையாகும்.
2) மக்கள் ஏன் வேகன் உணவை தேர்ந்தெடுக்கிறார்கள்?
விலங்குகளை பாதுகாக்கவும், விலங்கு வளர்ப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், இதய நோய், நீரிழிவு, சில புற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் இந்த உணவு முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். இது விலங்குகளின் சுரண்டலைத் தடுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் உள்ளது. முழுமையாக தாவர அடிப்படையிலான உணவு முறையை பின்பற்றுபவர்கள் வீகன் அல்லது நனிசைவர் என்று அழைக்கப்படுகின்றனர்.
3) வேகன் உணவு முறையின் நன்மைகள்:
உடல் எடை குறைப்பு: தாவர உணவுகளில் கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியம்: வேகன் உணவு உண்பவர்களுக்கு கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.
நீரிழிவு கட்டுப்பாடு: ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலமும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலமும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த இந்த உணவு முறை உதவும்.
புற்று நோய் பாதுகாப்பு: பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவுகள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக நார்ச்சத்து காரணமாக, வேகன் உணவு குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
4) இந்த உணவு முறையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
முக்கிய ஊட்டச்சத்துக்களான புரதம், வைட்டமின் பி12, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் விலங்கு பொருட்களிலிருந்து கிடைப்பதால், தாவர உணவுகள் மூலம் இவற்றை ஈடு செய்வது அவசியம்.
பால் பொருட்கள் மற்றும் இறைச்சியைத் தவிர்ப்பதால் விட்டமின் டி, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கீரை, பருப்பு வகைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான மாற்றுகளை உட்கொள்வது அவசியம்.
மீன்களில் உள்ள ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைப் பெற ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் அல்லது ஆல்கா எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் போன்ற மாற்று மூலங்களை எடுத்துக் கொள்ளலாம்.
தாவர அடிப்படையிலான புரதங்களில் சில அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் குறைவாக இருக்கலாம். அனைத்து அமினோ அமிலங்களையும் பெறுவதற்கு பல்வேறு வகையான பயறு வகைகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சோயா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வேகன் உணவுகளில் பல பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கலாம். அவற்றை தவிர்த்து முழுமையான, இயற்கையான தாவர உணவுகளை உண்பது நல்லது. வேகன் உணவு முறை ஆரோக்கியமான தேர்வாக இருந்தாலும், நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சமச்சீராக பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அத்துடன் புதிய உணவு முறைக்கு மாறுவதற்கு முன்பு ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெற்று செயல்படுவதும் நல்லது.