
ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) என்பது ஒரு முழு உடற்பயிற்சியாகும். இதில் கால்களை அகல விரித்து குதிக்கும் பொழுது கைகளை தலைக்கு மேல் உயர்த்தியும், கால்களை சேர்த்து குதிக்கும் பொழுது கைகளை பக்கவாட்டில் இறக்கியும் ஒரு முழு உடல் இயக்கத்தை உருவாக்குவதாகும். இதனால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகின்றன. ஜம்பிங் ஜாப்ஸ் என்பது ஒரு பிலேமெட்ரிக் (plyometric) பயிற்சியாகும். இதில் ஏரோபிக் மற்றும் எதிர்ப்புப் பயிற்சிகளின் கலவை அடங்கும். இது பொதுவாக நிற்கும் நிலையிலிருந்து செய்யப்படுகிறது.
ஜம்பிங் ஜாக்ஸ்களின் வகைகள்:
கிராஸ் ஜாக்ஸ், உயர் முழங்கால் ஜாக்ஸ், ஸ்பிளிட் ஸ்குவாட் ஜாக்ஸ், ஹாப் ஜாக்ஸ் மற்றும் பிளாங்க் ஜாக்ஸ்கள் என இவற்றில் பல வகைகள் உள்ளன.
ஸ்டெப் ஜாக்ஸ்:
தொடக்க நிலையாளர்களும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஜம்பிங் பயிற்சிகளை தவிர்க்க நினைப்பவர்களும் இந்த ஸ்டெப் ஜாக்கை முயற்சி செய்யலாம். கால்களை அகலமாக விரித்து, கைகளை பக்கவாட்டில் நீட்டி நிமிர்ந்து நிற்கவும்.
வலது பாதத்தை பக்கவாட்டில் விரைவாக அடி எடுத்து வைக்கும் பொழுது இரு கைகளையும் மேலே உயர்த்தவும்.
வலது பாதத்தை மையத்திற்கு திரும்ப அடியெடுத்து வைக்கும் போது கைகளை தாழ்த்தவும்.
இந்த இயக்கத்தை மீண்டும் செய்யவும். விரைவான மற்றும் நிலையான வேகத்தை வைத்து பத்து முறை செய்யலாம்.
ஸ்குவாட் ஜாக்ஸ்:
இவற்றின் மேம்பட்ட நகர்வுகள் ஜம்பிங் ஜாக்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கால்களை ஒன்றாக இணைத்து, முழங்கால்களை வளைத்து, கைகளை மார்பின் முன் கட்டிக்கொண்டு லேசான குந்துதலுடன் தொடங்க வேண்டும்.
கால்களை பக்கவாட்டில் நீட்டி, அகலமான குந்துகை பயிற்சியில் இறங்கவும். இந்நிலையில் கைகளை மேல் நோக்கி தூக்கவும். இயக்கத்தை தலைகீழாக மாற்றி கால்களை தொடக்க நிலைக்கு கொண்டு வரவும்.
இதன் ஆரோக்கிய நன்மைகள்:
இதயத் துடிப்பை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயம் சார்ந்த நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவுகிறது.
இந்த எளிய பயிற்சி உடலின் ஒட்டுமொத்த நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. கலோரிகளையும் கொழுப்பையும் எரித்து உடல் பருமன் மற்றும் உடல் பருமன் தொடர்பான உடல்நலச் சிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
ஜம்பிங் ஜாக்ஸ் எனப்படும் உடற்பயிற்சி ஈர்ப்பு விசைக்கு எதிராக செய்யப்படுவதால் எலும்புகளை வலுப்படுத்தி, அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கிறது. இதன் விளைவாக ஆஸ்டியோபோரோசிஸ் உருவாகும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படுகிறது.
இடுப்பு வலிமையை அதிகரிக்கும். இவை உடல் முழுவதும் உள்ள முக்கிய தசைகளை வலுப்படுத்துகிறது.
ஜம்பிங் ஜாக்ஸ் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதிக வளர்சிதை மாற்றம் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற கொழுப்பை எரிக்க உதவுவதுடன், உடலை டோனிங் செய்து சிறந்த தோற்றத்தைப் பெற உதவுகிறது.
ஜம்பிங் ஜாக்ஸ் கார்டிசோலின் அளவைக் குறைத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது.
முக்கியமாக இந்த பயிற்சிக்கு எந்த உபகரணங்களும் தேவையில்லாமல், ஒரே நேரத்தில் உடல் முழுவதும் வேலை செய்யும் ஒரு சிறந்த சக்தி வாய்ந்த பயிற்சியாக உள்ளது.