இந்திய தானிய உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருப்பது கம்பு. கோடை காலத்தில் அதிகளவில் விற்பனையாகும் குறுந்தானியம் இதுதான். கம்பில் நாட்டுக் கம்பு, கலப்பின கம்பு என இரு வகைகள் உள்ளன.
மற்ற குறுந்தானியங்களைவிட, கம்பில் அதிக புரதச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. கம்பில் ரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சிறு தானியங்களின் ராணி என்று அழைக்கப்படும் கம்பு, அரிசியை விட சுமார் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்தைக் கொண்ட தானியமாகும். இதுவே சிறுதானியங்களில் இரும்புச்சத்தில் முதலிடம் வகிப்பது. உடல் சூட்டைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இன்று வர்த்தக ரீதியாக விற்பனையாகின்ற சிலவகை ஊட்டச்சத்து பானங்களில், கம்பு தான் முக்கிய மூலப்பொருள். சர்க்கரை, தைராய்டு போன்ற நோய்களை குணப்படுத்தும் இயல்பு கம்புக்கு உள்ளது.
கோழி, பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு முக்கிய உணவாக கம்பு உள்ளது. கம்பில் இருந்து கூழ், சோறு தவிர நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தும் வகையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்களும் தற்போது கிடைக்கின்றன.
இந்தக் கம்பை, பாரம்பரிய முறையில் கம்மங்கூழாக செய்து சாப்பிடுவது அதன் முழுப்பலனையும் பெற உதவும். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது கம்மங்கூழை உணவில் சேர்ப்பது பல நன்மைகளைத் தரும். கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கும். இரத்த சோகை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 நாள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.
கோடை காலத்தில் தானியங்களில் கம்பை தாராளமாக பயன்படுத்தி வரலாம். காரணம், இதிலுள்ள நார்ச்சத்து. கிராமப்புறங்களில் இன்றும் கோடை வெயிலில் இருந்து பலரை காப்பாற்றி வருவது கம்பங்கூழ் கூழ் தான். இது உடலை குளிர்ச்சிப்படுத்தும் தானியம். முழு கம்பை எடுத்து நன்கு கழுவி, சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊற வைத்த கம்பை மிக்சியில் சேர்த்து, மாவாக்கி ஒரு டம்ளருக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் கலந்து 'கூழ்' செய்து இரவு முழுவதும் நீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் காலையில், புளித்த கம்பங்கூழை தேவையான அளவு மோர் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். இது பருகும் பதத்திற்கு வந்ததும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்துப் பரிமாறவும்.
இந்த கம்மங்கூழை மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய் அல்லது கீரையுடன் சேர்த்துச் சாப்பிடுவது கூடுதல் சுவையையும் ஆரோக்கியத்தையும் தருவதுடன், உஷ்ண பாதிப்புகளும் நம்மை அண்டாது.
கம்பில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் தொடர்ந்து சில காலம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும். அதிக எடை உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்க வைக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சில சமயங்களில் அதிக இரத்த போக்கும் அடி வயிற்று வலியும் வரும். இந்த நேரத்தில் இளஞ்சூடான கம்பு கூழ் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.
கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிர்வில் இருந்து விடுபடலாம்.
கம்பு பொதுவாக உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, அதிகப்படியான கம்பு உட்கொள்ளல் செரிமானக் கோளாறுகள், சிறுநீரக கற்கள் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை தூண்டும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்கிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)