

மழை ஆரம்பித்து விட்டாலே அங்கங்கே தண்ணீர் தேங்கி அதை தாண்டியும் அதன் வழியாக வரவேண்டியதுமாகி விடுகிறது. இதனால் சளி, காய்ச்சல், குளிர் காய்ச்சல், தொண்டை பிரச்சனைகள் வந்து அதனால் சிரமப்படுவோம். இதை தவிர்க்க தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் வீட்டில் இருந்தே சில எளிய சித்த மருத்துவ குறிப்புகள் கொண்டு இந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.
மழை மற்றும் குளிர் காலங்களில் மக்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது ஃப்ளூ காய்ச்சல் என்கிற கபசுரம். இது ஒரு வைரஸ் மூலம் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்று நோய். சில தினங்களே இருந்தாலும் நம்மை ரொம்ப கஷ்டப் படுத்தி விடும்.
இதன் அறிகுறிகளாக காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், தலைவலி, உடல்வலி போன்றவை இருக்கும்.
இதை சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் கொண்டு சரிசெய்து கொள்ளலாம்.
கண்டங்கத்தரி வேர்ப் பொடி, அரை ஸ்பூன் எடுத்து நீர் சேர்த்து காய்ச்சி, தேன் கலந்து அருந்தலாம்.
தர்ப்பைப் புல் கைப்பிடி அளவு எடுத்து நீர் சேர்த்து காய்ச்சி, அதில் விஷ்ணுகரந்தி பொடி கால் ஸ்பூன் சேர்த்து கலந்து அருந்த நல்ல குணம் கிடைக்கும்.
கோரைக்கிழங்கு பொடியுடன், சீந்திற்சர்க்கரை சம அளவு கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி கபத்தை போக்கும்.
அதிமதுரம், திப்பிலி, தாளீசம், சிற்றரத்தை சம அளவு எடுத்து இடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து உண்ணலாம்.
கருநொச்சி இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து கலந்து அருந்தி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வில்வ இலை, வேர் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து காய்ச்சி அரை டம்ளர் ஆக வற்றியதும் அருந்தலாம்.
கால் டீஸ்பூன் திப்பிலி பொடியுடன் கம்மாறு வெற்றிலை சாறும் தேனும் கலந்து உண்ணலாம்.
வல்லாரை, மிளகு துளசி இலை சம அளவு எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
நொச்சி இலை கொண்டு வேது பிடிக்க தலைபாரம், நீர்க்கோவை விலகி நல்ல பலன் தரும்.
இவ்வாறு எளிதாக தயாரித்து கபசுரத்தை சரி செய்து கொள்ளலாம்.
இந்த சமயங்களில் தேன், பால் நீக்கப்பட்ட தேநீர், இஞ்சி, பூண்டு, பனங்கற்கண்டு, முளைக்கீரை, காய்கறிகள் இவையெல்லாம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வாழைப்பழம், திராட்சை, புளி, தக்காளி, பால், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், குளிரூட்டப்பட்ட அறை இவற்றை எல்லாம் தவிர்க்க விரைவில் குணம் கிடைக்கும்.
பொதுவாக மழை காலங்களில் வீட்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள நோய்க் கிருமிகள் அண்டாது. மாலை நேரங்களில் வேப்பிலை, துளசி, ஆவாரம்பூ காய்ந்த இவற்றின் இலைகள், காய்ந்த பூண்டுத் தோலைக் கொண்டு புகை போட்டு விட சுவாசத்திற்கு இதமளித்து உடலை நோய்க் கிருமிகளின் இருந்து நம்மை பாதுகாக்கும்.