

தற்போது உடல் எடை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு பொதுவாக நம் அனைவரிடமும் பெருமளவில் வந்து விட்டது. நமது உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். மேலும் மருத்துவர்கள், நீரிழிவு நோயாளிகள் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வர பரிந்துரைக்கின்றனர்.
உடல் எடை பராமரிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு டயட் எனப்படும் உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. இந்த சமயத்தில் நாம் ஆரோக்கியமான பானங்களை அருந்துவது அவசியம். அவற்றில் சில எளிய, இயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய பானங்களை பற்றி பார்ப்போம்.
ஜூஸ் வகைகள்:
1. நெல்லிக்காய் + கறிவேப்பிலை + தயிர் + இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து, உப்பு சேர்த்து பருகலாம்.
2. கறிவேப்பிலை + இஞ்சி + தயிர் சேர்த்து நன்கு அரைத்து, உப்பு சேர்த்து பருகலாம்.
3. வெண்பூசணி + இஞ்சி + சீரகம் சேர்த்து நன்கு அரைத்து, உப்பு சேர்த்து பருகலாம்.
4. செம்பருத்திப் பூ இதழ்கள் + ஏலக்காய் சேர்த்து அரைத்து, கருப்பட்டி சேர்த்து பருகலாம்.
தேநீர் வகைகள்:
1. வெந்தயத் தேநீர் / வெந்தய நீர்:
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு அந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது வெந்தயம் ஊறிய தண்ணீரை குடித்துவிட்டு, மீதமுள்ள வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சூடாக பருகலாம். இறுதியாக வெந்தயத்தை மென்று சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும், பசியையும் கட்டுப்படுத்தும்.
2. சோம்பு தேநீர்:
ஒரு ஸ்பூன் சோம்பை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வர, செரிமான சக்தி தூண்டப்படும்.
3. இலங்கப்பட்டை டீ:
ஒன்று அல்லது இரண்டு இலங்கப்பட்டைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இந்த டீ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
4. கொத்துமல்லி டீ:
ஒரு ஸ்பூன் கொத்துமல்லியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வர, செரிமான சக்தியை தூண்டி உடல் எடை குறைய உதவுகிறது.
5. சப்ஜா விதைகள் நீர்:
ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரில் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது ஒமேகா 3-ஐ அதிகரித்து, நார்ச்சத்தை அளிக்கிறது.
6. சீரகம் + ஓமம் + கருஞ்சீரகம் டீ:
ஒரு ஸ்பூன் சீரகம் + ஓமம் + கருஞ்சீரகம் கலந்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வர, வாயுத் தொல்லைகளை நீக்கி செரிமான சக்தியை தூண்டுகிறது.
7. உலர் கருப்பு திராட்சை நீர்:
10 அல்லது 12 உலர் கருப்பு திராட்சைகளை நீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு அந்த தண்ணீரை குடிக்கலாம்.
ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இது, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேற்சொன்ன பானங்களை அவரவர் உடல் எடை ஆரோக்கியத்திற்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)