

பரபரப்பு மிகுந்த வேகமான வாழ்க்கையில், மன அழுத்தமும், பதட்டமும் நிறைய பேருக்குச் சாதாரணமான விஷயமாகி விட்டது. இதனால் பலரும் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். இரவில் தூக்கம் வராமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் விரைவாக தூங்குவதற்கு , தீர்வாக தூக்க மாத்திரைகளை தினசரி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தூக்க மாத்திரைகளைச் சார்ந்து வாழ்வோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், இதில் இருக்கும் ஆபத்துகள் என்னவென்று பலரும் யோசிப்பதில்லை.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஏ. நாகேஸ்வரராவ் அவர்களின் தலைமையில், ஸ்பந்தனா என்ற ஆராய்ச்சி மாணவி இந்த முக்கியமான ஆய்வைச் செய்திருக்கிறார். தூக்க மாத்திரைகள் நம் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன என்றும், அவற்றை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள், எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் பற்றியும் இந்த ஆய்வு விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது.
இந்த ஆய்வுக்கு சோதனை செய்ய பழ ஈக்களை தேர்ந்தெடுத்தனர். இதற்கு முக்கிய காரணம் பழ ஈக்களின் நரம்பு மண்டலம் மனிதனின் நரம்பு மண்டலம் மற்றும் மூளையைப் போலவே இருக்கும். ஆறு மாதங்கள் நடந்த இந்த சோதனையில் 10 செமீ உயர கண்ணாடி குழாய்களில் பழ ஈக்களை வைத்துப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. சுமார் ஒருமாத காலம் தொடர்ந்து அவற்றிற்கு தூக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அதிக அளவில் மருந்து கொடுக்கப்பட்ட ஈக்களில் 95% மூன்று நாட்களில் இறந்து விட்டன.
அடுத்ததாக தொடர்ந்து மாத்திரை கொடுக்கப்பட்ட பழ ஈக்களுக்கு, ஒரு நாள் மாத்திரை கொடுக்காமல் நிறுத்தி வைத்த உடன், சில பழ ஈக்கள் பைத்தியம் பிடித்தது போல் விசித்திரமாக நடந்து கொண்டதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் தொடர்ச்சியாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் மாத்திரைகளை உட்கொண்ட பழ ஈக்களின் நரம்பு மண்டலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது இந்த ஆராய்ச்சியில் தெரியவந்ததுள்ளது.
இந்த ஆய்வு தூக்க மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்வது ஒரு நிரந்தரமான பழக்கமாக, நம் உடலில் ஒரு அடிமைத்தனத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று உணர்த்துகிறது. அதன் மூலம் மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது என்ற உளவியல் பாதிப்பு உருவாகிவிடுகிறது.
தூக்கமின்மைக்கு மன அழுத்தம், சரியான உணவு முறை இல்லாதது, அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள்தான் காரணமாக இருக்கலாம். மேலும், மாத்திரைகள் உண்மையிலேயே தூக்கமின்மைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிவதைத் தடுத்துவிடுகின்றன. இதனால் உடல்நல பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது.
முக்கியமாக இந்த ஆய்வு தூக்க மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறது. இவை ஒருவரின் உடலுக்கும், அவரது நரம்பு மண்டலத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். பெரிய நகரங்களில் வாழும் மக்களில் சுமார் 25 சதவிகிதம் பேர் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவர்களின் அறிவுரை:
ஒருவர் தனிப்பட்ட முறையில் சுயமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. உடனடியாக ஒரு மருத்துவ நிபுணர் அல்லது மனநல மருத்துவரை (Psychiatrist) சந்திப்பது மிக அவசியம்.
மாத்திரைகளைச் சார்ந்திருப்பதை குறைத்து விட்டு, தூக்கத்தை வரவைக்கப் பாதுகாப்பான, இயற்கையான வழிகளைக் கடைப்பிடிக்கலாம். சரியான நேரத்தில் சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, படுப்பதற்கு முன் செல்போன் போன்ற திரைகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, மற்றும் தியானம் செய்வது போன்ற நல்ல பழக்கங்கள் மூலம் நம் தூக்கப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளை மட்டுமே நாட வேண்டும் என்று உஸ்மானியா பல்கலைக்கழக டாக்டர் ஏ. நாகேஸ்வரராவ் அறிவுறுத்துகிறார்.