

இந்தியாவில் பிளாக்பெர்ரி என்ற சிறப்புக்குரியது நாவல் பழம் (Jamun Fruit). எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கோடைகால பழம் இதுவாகும். நாவல் பழம் என்றாலோ ஊதா நிறத்தில் காட்சியளிக்கும் பழம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் நாவல் பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றுள் வெள்ளை நிற நாவல் பழம் (White Jamun) பற்றி பலரும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சாதாரண ஊதா நிற நாவல் பழத்துடன் ஒப்பிடும்போது வெள்ளை நிற பழமே சிறந்தது. அதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க...
இரண்டு நாவல் பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவை என்றாலும் ஊதா நிற நாவல் பழம் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையை கொண்டிருக்கும். வெள்ளை நாவல் பழம் மென்மையானதாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் காணப்படும். குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவிடும்.
வைட்டமின்கள் சி, ஏ மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளுக்கான ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் உள்ளிட்ட உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை.
குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது. சிஜிஜியம் கும்மினி (Syzygium cumini) என்று அழைக்கப்படும் வெள்ளை நிற நாவல் பழம் சுமார் 25 முதல் 30 கிளைசீமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிறந்த பழத் தேர்வாக அமைகிறது. இதை தொடர்ந்து உட்கொள்வது சிறந்த கிளைசீமிக் கட்டுப்பாட்டிற்கு உதவதோடு, நீரிழிவு தொடர்பான சிக்கல்களின் அபாயத்தை குறைக்கும்.
வெள்ளை நாவல் பழத்தில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ள. இவை ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் பிரீரேடிக்கல் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவும் சேர்மங்களாகும். அதிலும் பிளேவனாய்டுகள், பீனாலிக் சேர்மங்கள் உள்ளிட்ட இந்த ஆன்டி ஆக்சிடென்டுகள், ஊதா நாவல் பழத்துடன் ஒப்பிடும்போது வெள்ளை நாவல் பழத்தில் அதிகமாக காணப்படுகிறது.
வெள்ளை நாவல் பழதை தொடர்ந்து உட்கொள்வது, அழற்சியை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய், இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
வெள்ளை நாவல் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து சீரான செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலையும் தடுக்கக்கூடியது. முக்கியமாக இந்த பழத்தில் உள்ள இயற்கையான அமிலங்கள், வயிற்றில் அமில-கார சமநிலையை பராமரிக்கவும் உதவுகின்றன. அவை சிறந்த செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளையும் தடுக்கக் கூடியவை. இதில் உள்ள 'ஜம்போசின்' (Jambosine) மற்றும் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index), ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராமல் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதில் 90% வரை நீர்ச்சத்து உள்ளதால், கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தைக் குறைத்து உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, கலோரி குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது உகந்தது.
வெள்ளை நாவல் பழம் கல்லீரலை பாதுகாக்கும் தன்மைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. வெள்ளை நாவல் பழத்தை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கல்லீரல் நோய்களையும் தடுக்கும்.
சாதாரண ஊதா நிற நாவல் பழம் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், வெள்ளை நாவல் பழம் பல தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது.
இரண்டு நாவல் பழமும் ஒரே மாதிரியான ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருந்தாலும் சுவையிலும், தன்மையிலும் சற்று வேறுபடுகின்றன.
ஊதா நிற நாவல் பழம் புளிப்பு சுவையுடனும், அதிக துவர்ப்புடனும் அடர் நிறச்சதையுடனும் காணப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
வெள்ளை நாவல் பழம் மென்மையானதாகவும், இனிப்பாகவும், சாறு நிறைந்ததாகவும், துவர்ப்பு, புளிப்பு சுவை குறைவாகவும், ஒளி ஊடுருவக்கூடிய சதைப்பகுதியுடனும் காட்சியளிக்கும். கறை ஏற்படுத்தாது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பெக்டின் நிறைந்தது. செரிமானத்திற்கும், கோடை வெப்பத்தில் உடலை குளிர்விப்பதற்கும், சுவாச பிரச்சனைகளை சரி செய்வதற்கும் வெள்ளை நாவல் பழம் சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)