நம்முடைய உடலுக்கு சக்தியை உருவாக்க உணவு என்பது மிகவும் அவசியமாகும். நன்றாக உணவு சாப்பிட்ட சில மணி நேரங்களில் மீண்டும் பசிக்க தொடங்குவது சாதாரண விஷயம் தான். ஆனால், நன்றாக மூச்சு முட்ட சாப்பிட்டு முடித்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கிறதா? இதை 'Polyphagia' என்று கூறுவார்கள். இது சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் வருவதற்கான அறிகுறியாக சொல்கிறார்கள். அடிக்கடி பசிப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. நம்முடைய உடல் உணவில் இருக்கும் சர்க்கரையை குலுக்கோஸாக மாற்றி உடலுக்கு தேவையான சக்தியாக பயன்படுத்திக் கொள்ளும். இதுவே சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் செல்களுக்கு சென்று சேருவதில்லை. அதற்கு பதிலாக குலுகோஸ் சிறுநீர் வழியாக சென்றுவிடுவதால், உடலுக்கு தேவையான சக்தியை பெறுவதற்கு மூளை நம்மை அதிகமாக சாப்பிட சொல்லி தூண்டுகிறது. டைப் 1 டையாபிடிஸ் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இருப்பினும் உடல் மெலிந்துக் கொண்டே போவார்கள்.
2. நம்முடைய உடலில் உள்ள குளுகோஸின் அளவு மிகவும் குறைந்துவிட்டால், அதை hypoglycemia என்று கூறுவார்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை வரும். இதனாலும் அதிகமாக பசி எடுக்கும்.
3. தூக்கமின்னை நம் உடலில் உள்ள பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனை தூண்டி பசியை அதிகரிக்க செய்யும். எனவே, சரியான நேரத்தில் சரியான அளவு தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும். சரியாக தூங்கவில்லை என்றால் அதிக உணவு உண்ண தூண்டும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
4. நாம் பதற்றமாகவும், ஸ்ட்ரெஸ்ஸாகவும் இருக்கும் போது நம் உடல் கார்டிசால் என்ற ஹார்மோனை சுரக்கத் தொடங்கும். இது நம் பசியை அதிக அளவில் தூண்டும். அதிகமாக ஸ்ட்ரெஸ்ஸில் உள்ளவர்கள் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவதற்கு இதுவே காரணமாகும்.
5. சரியான உணவை எடுத்துக் கொள்ளாததும் அதிகம் பசி எடுப்பதற்கு காரணமாக அமையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும். எனவே, விரைவில் பசிக்கத் தொடங்கிவிடும். உணவில் புரதம், நார்ச்சத்துகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது பசியைக் கட்டுப்படுத்த முடியும். காய்கறிகள், மீன், பீன்ஸ், பால் பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும்.
6. சில மருந்துகளை எடுத்துக் கொள்வது கூட அதிகப் பசியை தூண்டும் காரணமாகும். ஸ்டீராய்ட், டையாபடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது பசி அதிகரிக்கும். சில நோயாளிகளுக்கு மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு உடல் எடை அதிகரித்திருக்கும் அதற்கு இதுவே காரணமாகும்.
7. கார்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிகமாக பசிக்கத் தொடங்கும். இதன் மூலமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உடல் எடுத்துக் கொள்ளும்.
8. நம் கழுத்துப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கக்கூடிய ஹார்மோன் தான் தைராய்ட் ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் தான் நம் உடலில் உள்ள உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது. இந்த ஹார்மோனில் பிரச்னை ஏற்படும் போது அதிக பசியை தூண்டி உடல் எடையை அதிகரிக்கும். இந்த தைராய்ட் பிரச்னையை மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையின் மூலமாக சரிசெய்ய முடியும்.
9. தண்ணீர் தாகமாக இருக்கும் உணர்வைக் கூட சிலர் பசி எடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள். சாப்பிடுவதற்கு முன்னும், சாப்பிட்டு முடித்த பிறகும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது பசியை தூண்டுவதை குறைத்து வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.
10. சிலருக்கு உணவை வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். இவ்வாறு சாப்பிடும் போது நம் மூளைக்கு நம்முடைய வயிறு நிரம்பி விட்டது என்பதை கவனிக்க நேரம் எடுக்கும். இதனால் அளவுக்கு அதிகமாகவே உணவை சாப்பிட்டு விடுவோம். எனவே, மெதுவாக உணவை மென்று சாப்பிடும் போது வயிறு நிறைந்த திருப்தியை முழுமையாக பெற முடியும். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் நல்ல மருத்துவரை சென்று பார்ப்பது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)