உயிரைக் குடிக்கும் நாயின் அன்பு? நாயின் உமிழ்நீரில் ஒளிந்திருக்கும் கொடிய விஷம்!

Sepsis - Dog lick and manjit sangha
Sepsis - Dog lick and manjit sangha
Updated on

செப்சிஸ் (Sepsis) நோய் பரவல், இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண்மணியின் உடல் ஆரோக்கியத்தை மோசமாகச் சீர்குலைத்ததுடன், அவரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. நாய்களின் உமிழ்நீரில் கடுமையான செப்சிஸ் தொற்றுக்குக் காரணமான 'கேப்னோசைட்டோபாகா கனிமோர்சஸ்' (Capnocytophaga canimorsus) என்ற பாக்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியா தொற்றுகள் மிகவும் அரிதானவை; இது நாய்களுக்குப் பாதிப்பைத் தருவதில்லை. ஆனால், மனிதர்களின் இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிட்டால், அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடியது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, செப்சிஸ் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடிய நோயாக உள்ளது. இந்த பாக்டீரியாக்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தடுத்து, உடல் முழுக்கத் தொற்றினைப் பரவச் செய்கின்றன. இதன் பரவல் உடலின் உள்ள திசுக்களைச் சேதப்படுத்தி, உறுப்புகளையும் செயலிழக்க வைக்கிறது. இது இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சாதாரண காயங்கள், வெட்டுக்காயங்கள், சிறுநீர்ப் பாதை தொற்றுக்கள், இரத்த ஓட்ட நோய்த்தொற்றுகள், நிமோனியா போன்ற நிலைகளில் செப்சிஸ் எளிதில் தாக்கும்.

தன் செல்ல நாய், தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கே வேட்டு வைத்துத் தன்னை முடக்கிப்போடும் என்று மஞ்சித் சங்கா நினைத்திருக்க மாட்டார். நாய்களைக் கொஞ்சி விளையாடுவதும், அவை அன்பை நக்கி வெளிப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதும் எவ்வளவு பேராபத்து என்பதைப் பலரும் உணர்வதில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண்மணியான மஞ்சித் சங்கா, தன் செல்ல நாயைக் கொஞ்சிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் இருந்த காயத்தை நாய் நக்குவதை அவர் தடுக்கவில்லை. சில மணி நேரங்களிலேயே அந்தப் பெண்மணி மயங்கினார்; அவரது உதடுகள் ஊதா நிறமாகவும், கைகள் சில்லிட்டும் போயின. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தபோது, அவரது இதயம் பலமுறை செயலிழந்தது. மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி அவரது உயிரை மீட்டனர்.

ஆனாலும், மீண்டும் மீண்டும் அந்தப் பெண்மணியின் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்தது. எந்த மருந்துகளும் அவரது உடலில் செப்சிஸ் பரவுவதைத் தடுக்க முடியவில்லை. உயர் சிகிச்சைக்காக மஞ்சித் சங்காவின் குடும்பத்தினர் அவரை வோல்வர்ஹாம்டனில் உள்ள 'நியூ கிராஸ்' மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் 32 வாரங்கள் தங்க வேண்டியிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் மட்டும் ஆறு முறை அவரது இதயம் செயலிழந்துள்ளது. அப்போதுதான் பாக்டீரியா தொற்றின் தீவிரத்தை மருத்துவர்கள் உணர்ந்தனர். அவரது செல்ல நாய், சிறிய வெட்டுக்காயத்தில் நக்கியதன் மூலம் செப்சிஸ் பாக்டீரியா அவரது இரத்த ஓட்டத்தில் நுழைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அவரது இரு கைகளையும் இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அகற்ற வேண்டியிருந்தது. அதனுடன் அவரது மண்ணீரலும் அகற்றப்பட்டது; தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துபவரா நீங்க? ஆய்வுகள் தரும் அதிர்ச்சி தகவல்!
Sepsis - Dog lick and manjit sangha

அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை:

அதிக காய்ச்சல் அல்லது குறைந்த உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு அதிகரித்தல், வேகமான சுவாசம், உடல் பலவீனம் ஆகியவை செப்சிஸின் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய்க்கு உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

மஞ்சித் சங்காவின் துயரச் செய்தியை அறியும் நாம், வீட்டு விலங்குகளுடன் அளவுக்கு அதிகமாக நெருக்கமாகப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றின் உமிழ்நீர் வீட்டில் விழாத வகையில் பராமரிக்க வேண்டும். நாயின் வாயில் கையை விடுவது, அதை உடல் பாகங்களில் நக்க விடுவது அல்லது அவற்றின் எச்சில் படும்படி இருப்பதைத் தவிர்ப்பது நலம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com