

"நீ வாக்கிங் போகலை..?' வெளி நாட்டிலிருந்து வந்திருந்த அத்தை அம்புஜம் கேட்டார். "வெளில சில்லுன்னு இருக்கு! வாக்கிங் போகலை!"
"பத்து நாளா, ஏதோ சாக்கு போக்கு ! சில்லா இருக்கு இல்லாட்டி சூடா இருக்கு. இதேதான் சொல்ற! சோம்பல்தான் கெடுக்கறது. சில்லோ! சூடோ! நான் ரெகுலரா போவேன். போக முடியாத நாள்ல, வீட்டுக்கு உள்ளேயே ஏதாவது பயிற்சி செய்வேன். உடம்பை ஃபிட்டா வைக்கக் கூடிய சில பயிற்சிகளைச் சொல்றேன். வெளியில் வாக்கிங் போகமுடியாத நாட்களில் இப்பயிற்சிகளைப் பின்பற்றலாம்," என்று எனது அத்தை கூறிய சில பயிற்சிகளை (simple home fitness tips) பற்றி அறிந்து கொள்ளலாமா..?
ஸ்கிப்பிங்:
சிறு வயதினை நினைவு படுத்தக்கூடிய விளையாட்டு ஸ்கிப்பிங் ஆகும். ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல், அனைவரும் விளையாடுவதுண்டு. குதித்து-குதித்து விளையாடுகையில், கைகள், கால்கள் மற்றும் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
க்ளீனிங்
வீட்டிற்குள் படிந்து இருக்கும் தூசிகளைத் தட்டுவது; அலமாரிகளில் வைத்திருக்கும் புத்தகங்கள், துணிகள்; இதர பொருட்களை ஒழுங்குபடுத்துவது, மாப்பிங் (Mopping) செய்வது போன்றவைகளைச் செய்கையில் வீடு சுத்தமாவதோடு, உடலுறுப்புக்களும் ஃபிட்டாக இருக்கும்.
யூடியூப்
தினமும் வெளியில் வாக்கிங் செல்ல இயலாதவர்களுக்கு யூடியூப் இல் காட்டப்படும் உடற்பயிற்சி ஒரு வரப்பிரசாதமாகும். நுரையீரல்களின் சக்தியை மேம்படுத்த, இடுப்பு மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் இருக்கும் அதிக சதையைக் குறைக்க, தசைகளின் வலுவை அதிகரிக்கவென பலவகை உடற்பயிற்சிகளை யூடியூப் வழியாக கற்று மெதுவாக செய்யலாம். இதில், மூச்சுப் பயிற்சி, Sitting yoga, standing yoga, Back walk, sidewalk, சிரிப்பு வைத்தியம் போன்ற எளிய ஆஸன வகைகளும் கற்றுத் தரப்படுகின்றன. வாரத்தில் நான்கு நாட்கள், தினமும் 45 நிமிடங்கள் செய்தால் போதுமானது. மனதும் அமைதியடையும். உடலிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
நடனம்
இப்பயிற்சி சற்றே மாறுபட்டதொன்றாகும். நடனம் பயின்றிருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. பிடித்த பாடல்களை கைபேசியில் கேட்டவாறே, தெரிந்த வகையில் நிதானமாக ஆடலாம். கை, கால், முகம், இடுப்பு, உடல் ஆகியவைகளை அசைத்து அசைத்து ஆடுகையில், உடலிலுள்ள அதிக கலோரிகள் இயற்கையாகவே எரிக்கப்படும்.
எட்டு நடை
பலர் அறிந்த நடைப்பயிற்சி எட்டு நடையாகும். எண் எட்டு வடிவில் நடப்பதாகும் வெளியில் நடப்பதைப் போல Earphone இல் பாட்டு கேட்டவாறே வீட்டிற்குள்ளேயே நடக்கலாம். பயன் தரக்கூடிய நடை.
உடற்பயிற்சி மட்டுமல்லாது, மூளையையும் சுறு-சுறுப்பாக வைத்துக்கொள்ள, தினமும் சுடாகோ போடுவது, செஸ் விளையாடுவது, நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற ஏதாவது ஒன்றில் ஒரு மணி நேரம் செலவழிப்பதுவும் அவசியம்.
வெளியே சில்லாக இருந்தாலும், சூடாக இருந்தாலும், சோம்பல் இல்லாமல் வாக்கிங் செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு போக இயலாமல் இருக்க நேரிடுகையில், உடல் மற்றும் உள்ளத்தை ஃபிட்டாகவும், மூளையை சுறு-சுறுப்பாகவும் வைத்துக் கொள்ள, அத்தை கூறிய வீட்டுக்குள்ளே செய்யக்கூடிய பயிற்சிகள் ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாக உதவும். சரிதானே!