
ஆசனம் என்பது உடலை வலிமையாகவும், வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் யோகாவின் ஒரு உத்தி என்று கூறலாம்.
ஆசனம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள 'உபவேசனே' என்ற மூலச் சொல்லிலிருந்து வருகின்றது. இதற்கு உட்காருதல், இருத்தல் என்று பொருள். உலகத்தின் முதல் யோகாசிரியரான பதஞ்சலி முனிவர் இதற்கு இரண்டு முக்கிய தன்மைகளை கூறுகின்றார். ''ஸ்திரம்'' மற்றும் "சுகம்". ஸ்திரம் என்பது விழிப்புணர்ச்சியுடன் கூடிய ஸ்திரத்தன்மையைக் குறிக்கும். சுகம் என்பது சௌகரியத்தை குறிக்கும். ஆகவே ஆசனம் என்பது நிலையான, சுகமானதாக இருக்க வேண்டும்.
இன்னொரு விளக்கம் "சரீர அங்க விந்யாசம்". சரீர அங்கம் என்பது உடலின் பாகங்களை குறிக்கும். விந்யாசம் என்பது "ஒரு விதத்தில் வைத்தல்" என்பது பொருள்படும்.
ஆசனங்களின் எண்ணிக்கை: தியான பிந்து உபநிஷம் எனப்படும் மிகப் பழமையான நூலில் சிவனுக்கும் பார்வதியும் நடைபெறும் உரையாடலில் உலகில் எத்தனை வகையான உயிரினங்கள் உண்டோ அவ்வளவு வகைப்பட்ட ஆசனங்கள் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்க்கும்போது ஒவ்வொரு வகையான ஆசனம் செய்யும் பொழுதும் உடலின் பாகங்களை பலவிதமாக தான் வைத்திருக்க வேண்டி இருக்கும்.
இனி ஆசனங்கள் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
ஆசனம் செய்யும் பொழுது உடலில் நடுக்கமோ, வலியோ ஏற்பட்டால் வலுக்கட்டாயமாக அந்த ஆசன நிலையை அடைய முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆசனத்திற்கு அடிப்படையான தன்மைகள் இரண்டு:
ஸ்திரத்தன்மை மற்றும் சுகம்.
ஆசனங்கள் செய்யும் பொழுது மூச்சு இழுத்தல், விடுதல் ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை . மூச்சு வெளியே விடுதல் என்பது வயிற்றுப் பகுதிகளில் ஆரம்பித்து மேல் நோக்கி நகரும் செயல். மூச்சை உள்ளே இழுத்தல் என்பது நெஞ்சு பகுதியில் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும் செயல்.
மூச்சு ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ஆசனங்களின் அசைவு ஆரம்பிக்க வேண்டும் . மூச்சை வெளியேற்றும் அசைவாக இருந்தால் வயிற்றுப் பகுதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மூச்சை உள் இழுக்கும் அசைவாக இருந்தால் நெஞ்சு பகுதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் .
மூச்சின் கால அளவு ஒவ்வொரு அசைவின் கால அளவினை தீர்மானிக்கிறது. எந்த ஒரு அசைவும் மூச்சின் கால அளவுக்குள் இருக்க வேண்டும். முதலில் மூச்சை ஆரம்பித்து ஆசனங்களின் அசைவு, பின் தொடர வேண்டும். அசைவு நின்ற பிறகுதான் மூச்சு இழுத்தலோ விடுதலோ நிற்க வேண்டும்.
பல முறை திரும்பத் திரும்ப செய்யப்படும் ஆசனங்களுக்கு இயக்கமுறை ஆசனங்கள் என்றும், ஒரே நிலையில் இருக்கும் ஆசனங்களுக்கு நிலையான ஆசனங்கள் என்றும் பெயர். எல்லா இயக்கமுறை ஆசனங்களையும் நிலையான முறையில் செய்ய முடியும். எல்லா நிலையான ஆசனங்களையும் இயக்க முறையில் செய்ய முடியாது
இரு பக்கங்களிலும் செய்ய வேண்டிய ஆசனங்கள் பொதுவாக இடதுபுறம் ஆரம்பிக்க வேண்டும். இதையே வலது புறமும் செய்வது மிக அவசியம். ஒருபுறம் எத்தனை முறை செய்கிறோமோ அத்தனை முறை மறுபக்கத்திலும் செய்ய வேண்டியது அவசியம். ஒருபுறம் எத்தனை மூச்சுகள் ஆசனத்தின் நிலையில் நிற்கிறோமோ அத்தனை முறை மறுபக்கமும் சரிசமமாக இருக்க வேண்டும்.
நின்ற நிலையில் செய்யப்படும் ஆசனங்களை வழுக்காத தரையில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். மற்ற ஆசனங்களை ஒரு விரிப்பின் மீது கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.
இப்படி ஆசனங்களை செய்ய திட்டமிடும் பொழுது எந்த நோக்கத்திற்காக செய்கிறோம் என்பதையும் திட்டமிட வேண்டும். ஒரே பயிற்சியில் பல இலக்குகளை தேர்ந்தெடுக்க கூடாது. ஆசன பயிற்சி பல நல்ல விஷயங்களை கொடுக்க வல்லதாக இருந்தாலும் ஒழுங்கான முறையான நாள்பட்ட பயிற்சியே நிலையான பலனை அளிக்கும். ஆதலால் நோக்கம் முக்கியம்.
அதற்கு சில உதாரணங்கள்.
சில வேதனைகளை குறைக்க- காயங்களில் இருந்து விடுபட, சிறந்த ஆரோக்கியத்தை அடைய என்று சிலர் ஆரம்பிப்பார்கள்.
பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது ஆன்மீகப் பயிற்சிக்கு தயார் செய்வதற்காக.
இதுபோல் ஆசனம் செய்ய தொடங்கும் போது இவை எல்லாவற்றையும் அறிந்து வைத்துக் கொண்டு, சரியான திட்டமிடுதலுடன் ஆரம்பித்தால் ஆரோக்கியம் மேம்படும். நாம் நினைத்ததை எளிதில் சாதிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தந்த ஆசனத்தை செய்வதும் எளிமையாக இருக்கும். இதனால் இடைநிற்றலும் கைவிடப்படும். ஆதலால், அனுதினமும் ஆசனம் செய்து ஆரோக்கியம் பெறுவோம் ஆக!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)