மன அழுத்தத் தொப்பையா? ஹார்மோன் தொப்பையா? உங்களை பாடாய்ப்படுத்தும் வயிறு குறைய எளிய தீர்வுகள்!

தொப்பை உருவாவதன் ரகசியக் காரணங்களைக் கண்டறிந்து, ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்க உதவும் வழிகாட்டி.
Belly | தொப்பை
Belly | தொப்பை
Updated on

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை காரணமாக பலருக்கும் தொப்பை பிரச்சனை வருகிறது.

நவீன மருத்துவம் தொப்பையை முக்கியமாக இரண்டு வகையாகப் பிரிக்கிறது: 1. மன அழுத்தத் தொப்பை, 2. ஹார்மோன் தொப்பை.

இவற்றை எப்படி சரி செய்வது என்பதை விளக்குகிறார் மருத்துவர் தி.ரா.ரவி (சரும நிபுணர்)

1. மன அழுத்தத் தொப்பை:

Stress Belly | தொப்பை
Stress Belly | தொப்பை

காரணம்:

வேலைப்பளு, பணக் கஷ்டம், பயம் அல்லது பதற்றம் ஏற்படும் போது உடலில் 'கார்டிசோல்' என்ற மன அழுத்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது. நாம் உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அந்தச் சர்க்கரை ஆற்றலாக மாறாமல் அடிவயிற்றில் கொழுப்பாகச் சேர்கிறது.

அறிகுறிகள்:

வயிற்றின் மேல் பகுதியிலும், தொப்புளைச் சுற்றியும் தொப்பை உருவாகி, ஒரு பை போலத் தொங்கும். இனிப்புகள், எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தோன்றும். பகலில் பதற்றம், மதிய நேரத்தில் கடும் சோர்வு இருக்கும். இரவில் தாமதமாகத் தூக்கம் வருவது, நடு இரவில் விழிப்பு வருவது மற்றும் செரிமானக் கோளாறு ஏற்படும்.

2. ஹார்மோன் தொப்பை:

Hormonal Belly | தொப்பை
Hormonal Belly | தொப்பை

காரணம்:

நமது உடலில் எந்த இடத்தில் கொழுப்பு சேர வேண்டும் என்பதை ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன. உடலில் இன்சுலின் அளவு அதிகமானால், நாம் சாப்பிடும் உணவு உடனே கொழுப்பாக மாறி வயிற்றில் சேரும். தைராய்டு சுரப்பு குறைந்தால், உடலின் வளர்சிதை மாற்றம் மந்தமாகி உடல் எடை கூடும். பெண்களுக்குச் சினைப்பை நீர்க்கட்டி, பிரசவத்திற்குப் பிந்தைய காலம் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும். இதனால் ஹார்மோன் சமநிலை மாறி, தொப்பை மற்றும் இடுப்புப் பகுதிகளில் கொழுப்புச் சேரும்.

அறிகுறிகள்:

அடிவயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு அதிகமாகச் சேரும். உடல் எடை திடீரென அதிகரிக்கும், எளிதில் குறையாது. மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படும்.

உடலிலும் ஆரோக்கியத்திலும் ஏற்படும் விளைவுகள்:

வயிற்றுப் பகுதியில் அதிகளவில் கொழுப்புச் சேரும் போது, அது இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கி டைப்-2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும், இந்தக் கொழுப்பு கல்லீரலில் படிந்து 'ஃபேட்டி லிவர்' பிரச்சினையை உருவாக்கும்.

மன அழுத்தத் தொப்பை இரத்த அழுத்தத்தை உயர்த்தும். இது பிற்காலத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அடிவயிற்றிலும் மார்புப் பகுதியிலும் சேரும் அதிகப்படியான கொழுப்பு மூச்சுக்குழாயை அழுத்துவதால், இரவில் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் உருவாகலாம்.

இதையும் படியுங்கள்:
சளி, காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் தேவையா? ICMR கொடுக்கும் அதிர்ச்சி எச்சரிக்கை!
Belly | தொப்பை

தொப்பையைக் குறைப்பதற்கான தீர்வுகள்:

மன அழுத்தத் தொப்பையை எதிர்கொள்ள:

தினமும் இரவு 7 முதல் 8 மணி நேரச் சீரான தூக்கம் மிக அவசியம். இது கார்ட்டிசோல் அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும். அதிக தீவிரமான உடற்பயிற்சிகள் சில சமயம் கார்ட்டிசோலை மேலும் உயர்த்தக்கூடும். எனவே நடைப்பயிற்சி, யோகா, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) மற்றும் தியானம் போன்றவை சிறந்தது. டீ, காபி மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஹார்மோன் தொப்பையை எதிர்கொள்ள:

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மைதா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உடற்பயிற்சி ஒட்டுமொத்த உடல் கொழுப்பையும், இன்சுலின் சுரப்பையும் சீராக்கி, படிப்படியாக அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்.

இரத்தப் பரிசோதனை மூலம் தைராய்டு, இன்சுலின் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளைக் கண்டறிந்து, மருத்துவர் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சையோ அல்லது சப்ளிமெண்ட்களையோ எடுத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் உடலின் அறிகுறிகளைச் சரியாகக் கவனித்து, அது மன அழுத்தத் தொப்பையா அல்லது ஹார்மோன் தொப்பையா என்பதை அடையாளம் கண்டு அதற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதே நிரந்தர நன்மையைத் தரும்.

இதையும் படியுங்கள்:
நடக்கும்போது ஊசி போல் குத்துதா? கால் ஆணியை விரட்ட சூப்பர் டிப்ஸ்!
Belly | தொப்பை
logo
Kalki Online
kalkionline.com