

தற்போது முதுகு வலி (Back pain) என்பது வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏற்படும் ஒரு சாதாரணமான பிரச்னையாகி விட்டது பெரும்பாலானவர்களுக்கு.
உடல் இயக்கங்கள் குறைந்து எந்நேரமும் கணினி முன் அமர்ந்திருப்பது ஒரு காரணம் என்றாலும் இதற்கு வேறு பல காரணங்களும், தீர்வுகளும் உள்ளன. அதில் மிக முக்கியமான காரணமாக அமைகிறது காக்சிஸ் எனும் எலும்பு பாதிப்பு. அதென்ன காக்சிஸ்? இதோ சிறு விளக்கம்.
“காக்சிஸ்” (Coccyx) என்றால் என்ன?
“காக்சிஸ்” என்பது முதுகெலும்பின் கடைசிப் பகுதியில் இருக்கும் சிறிய எலும்பு. இது தமிழில் "வால் எலும்பு" (Tailbone)என்று அழைக்கப்படுகிறது. இது நமது முதுகெலும்பு தொடரின் (spine) கீழ்முனையை தாங்கி இருக்கும் ஒரு அசையாத பகுதியாகிறது மூன்று முதல் ஐந்து சிறிய எலும்புகள் சேர்ந்த இந்த பகுதி ஒன்றோடு ஒன்று இணைந்து பார்வைக்கு ஒரே எலும்பாக காட்சி அளிக்கிறது.
இதற்கு எந்த அசைவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது நம்முடைய பெருங்குடல், தசைகள், நரம்புகள் மற்றும் நார்ச்சுவர்கள் போன்றவற்றுடன் இணைந்து அவற்றுக்கு ஆதரவாக செயல்படுவதாக மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
ஆண்களுக்கு மிகச்சிறியதாக வளைந்து முடிவடையும் இந்த எலும்பு பெண்களுக்கு ஸ்டிக் போல நீண்டு உள்பக்கமாக வளைந்து இருக்கும். பெண்கள் தாய்மை அடைவதற்கு வசதியாக இயற்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.
காக்சிஸ் வலி (Coccydynia) என்றால் என்ன?
Coccydynia என்பது வால் எலும்பு பகுதியில் ஏற்படும் வலி. இது ஒரு வகையான கீழ்முதுகு வலி (Lower back pain) ஆகும். பொதுவாக நாம் கீழே அமரும்போது காக்சிஸ் இயல்பாக நெகிழ்ந்து தர வேண்டும். இல்லையொன்றால் அந்த பகுதியில் வலி ஏற்படும். சிலருக்கு பிறவியிலேயே இந்த காக்சிஸ் நீளமாக இருந்து அதிகமாக அழுத்துவதாலும் வலி ஏற்படலாம் . சிலர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுவதாலும் வலி ஏற்படும். குறிப்பாக படிக்கட்டில் தவறி விழும்போது காக்சிஸ் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் கீழே அமரும்போது அல்லது எழும்பும்போது பின்புறம் வலி ஏற்படும்.
காக்சிஸ் வலி ஏற்படும் காரணங்கள் :
கீழே விழும் போது காக்சிஸ் எலும்பு நேரடியாக பாதிப்பது.
நீண்ட நேரம் அலுவலக பணி மற்றும் வாகனம் ஓட்டும் போது கடினமான இருக்கையில் அமர்வது.
சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு காக்சிஸ் பகுதியில் வலி ஏற்படுவது.
அதிக பருமன் அல்லது மிகவும் மெலிந்த உடல் அமைப்பின் காரணமாக காக்சிஸ் மீது அதிக அழுத்தம் ஏற்படுவது
தவறான அமர்ந்த நிலை (Poor posture) அதாவது ஒரே இடத்தில் நீண்ட நேரம் சாய்ந்து அல்லது வளைந்து அமர்வது.
இதன் அறிகுறிகள் :
அமரும்போது வலி, அமர்ந்திருந்த நிலையில் எழும்பும்போது வலி அதிகரித்தல், நீண்டநேரம் அமர்ந்தால் வலி பரவுதல், சிலருக்கு மலச்சிக்கல் போது வலி அதிகரித்தல் போன்றவைகள் இதன் அறிகுறிகள்.
வீட்டிலேயே செய்யக்கூடிய தீர்வுகள் :
அமர்வதற்கு வசதியாக அழுத்தம் தராத Coccyx cushion (வட்டமான துளையுள்ள குஷன்) பயன்படுத்தி அமரலாம்.
சூடான ஹாட் பேக் வைத்து வலியை குறைக்கலாம். தகுந்த நிபுணர் மூலம் கற்று செய்யும் pelvic exercises உதவும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல், ஒவ்வொரு 30 நிமிடமும் எழுந்து சிறிது நடக்க வேண்டும்.
குறிப்பாக வலி நீண்ட நாட்கள் நீடித்தால் மருத்துவரிடம் X-ray / MRI மூலம் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
இந்த வலி எடுத்தவுடன் அறுவை சிகிச்சை நாடாமல் சரியான உட்காரும் நடைமுறை, Cushion பயன்பாடு, மற்றும் தசை வலிமை அதிகரிக்கும் பயிற்சிகள் மற்றும் சீரான எடை பராமரிப்பு போன்றவற்றில் கவனம் வைத்தாலே இது பெரும்பாலும் நிவர்த்தியாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)