
ஹரா ஹச்சி பூ(Hara hachi bu) : 80 சதவீதம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதோடு உண்ணும் போது உங்கள் மனம் உணவை எடுத்துக் கொள்வதில் சரியாக ஈடுபட வேண்டும் என்கிறது இந்த ஜப்பானிய உத்தி.
'திருப்தி அடைந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்து; அள்ளி அள்ளி போட்டுக் கொள்ளாதே' என்பது தான் இதன் சுருக்கமான தத்துவம். ஓகினாவன் உணவுத்திட்டம் என்ற ஜப்பானிய முறையின் ஒரு அங்கம் இது. இதனால் ஜப்பானில் உள்ளவர்கள் நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
உடல் என்ன சொல்கிறது என்பதை கவனி; வழக்கமாக இப்படித் தான் சாப்பிடுவேன் என்று சொல்லாதே. 80 சதவிகிதமே சாப்பிடுவதன் மூலம் குறைந்த கலோரிகளை மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். இது எடையைக் குறைக்க உதவும் அல்லவா?
அதிகமாக சாப்பிடுவதை மூளை உணர 20 நிமிடங்கள் ஆகும். ஹரா ஹாசி பூ (Hara hachi bu) மாரடைப்பைக் குறைக்கும்; தவிர்க்கும். மெதுவாக நன்கு கடித்துச் சாப்பிடுங்கள். ஒரு சின்ன வழி – பெரிய தட்டை எடுத்துப் போட்டுக் கொள்ளாமல் சின்ன தட்டில் உணவு வகைகளைப் பரிமாற வைத்து சாப்பிடலாம். சாப்பிடும் போது நடுவில் சற்று நிதானித்து எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பின்னர் தொடரலாம்.
ஓகினாவன் உணவுத்திட்டத்தின் படி ஒரு நாளைக்கு ஒருவர் எடுத்துக் கொள்வது 1900 கலோரிகள் மட்டுமே தான். அமெரிக்காவில் ஆண்கள் 2500 கலோரி முதல் 2692 கலோரி வரை தினமும் சாப்பிடுகிறார்கள். பெண்கள் 1766 கலோரி முதல் 1879 கலோரி வரை சாப்பிடுகிறார்கள். உணவுத் திட்ட ஆலோசகரின் கருத்துப்படி, ஆண்களுக்கு 1900 முதல் 2150 கலோரிகளும் பெண்களுக்கு 1500 முதல் 1700 கலோரிகளும் மட்டுமே போதுமானது.
ஒரு எளிய வழியை நிபுணர்கள் கூறுகிறார்கள். “ஒரு கைப்பிடி குறைத்துச் சாப்பிடுங்கள்; இது வழக்கத்திற்கு வந்த பின்னர் இரண்டு கைப்பிடி குறைத்துச் சாப்பிடுங்கள். தானாகவே உங்கள் வயிறு 80 சதவிகிதம் நிரம்பி விட்டதை நீங்கள் உணர்வீர்கள்.”
ஹரா ஹாசி பூ-ஐக் கடைப்பிடிப்பதால்,
1. நீடித்த ஆயுள் நிச்சயமாக அமையும்.
2. உடல் எடை குறையும்.
3. ஜீரண சக்தி அதிகரிக்கும்.
4. பல்வேறு வியாதிகள் அண்டுவது நிற்கும்.
5. இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
6. இதய சம்பந்தமான வியாதிகள் வராது.
7. உணவு சாப்பிட்டவுடன் ஏற்படும் சோம்பேறித்தனமான உணர்வு வராது.
ஆனால், ஹரா ஹாசி பூ பழக்கத்தைக் கொண்டு வருவதில் சற்று ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அதிக உற்சாகம் கொண்டு சாப்பிடுவதை வெகுவாகக் குறைத்து விடக் கூடாது. மிகவும் குறைவாகச் சாப்பிட்டால் சத்துணவும், ஊட்டச்சத்துகளும் குறைந்து சக்தியை இழக்க நேரிடும்.
முதலில் 80 சதவிகிதம் சாப்பிடுவதானது சாப்பிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தாது. ஆகவே காலப் போக்கில் தான் இது ஏற்கும் நிலையில் ஒருவருக்கு வரும் என்பதால் சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
சிலருக்கு 80 சதவிகிதம் என்பதை எப்படிக் கண்டுபிடித்து நிர்ணயிப்பது என்பதில் சந்தேகம் வரும். தொடர்ந்த பழக்கத்தினாலும் உன்னிப்பாக உணவின் அளவைக் கவனித்து உணர்வதினாலுமே இதைக் கண்டுபிடிக்க முடியும்.
ஒரு முறை இதற்கு நாம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் கவலை இல்லை. இது அன்றாட வாழ்க்கை முறையாகவே ஆகி விடும். நமக்குக் கிடைத்த இந்த நல்ல பழக்கத்தை நாம் கடைப்பிடிப்பதோடு குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூடச் சொல்லலாமே!ஹரா ஹாசி பூ! 80 சதவிகிதம் வயிறு நிரம்பிய வரை மட்டுமே சாப்பிடுங்கள்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)