வீட்டுக்குள்ளேயே ட்ரெட்மில்லில் சிலர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். சிலர் வீட்டுக்கு வெளியே பார்க், நடைபாதை, சாலையோரம் நடக்கிறார்கள். இரண்டிலும் இருக்கும் சாதக பாதகங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ட்ரெட் மில்லில் நடைப்பயிற்சி (நன்மைகள்);
எல்லாக் காலம், நேரத்திலும் ஏற்றது;
வீட்டிற்குள்ளேயே ட்ரெட்மில்லில் வாக்கிங் செல்வதன் முக்கியமான நன்மை என்னவென்றால் மழை, அதிகமான வெயில், கடும் குளிராக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் நடைப்பயிற்சி செய்யலாம். சீதோஷ்ண நிலையைக் காரணம் காட்டி நடைப்பயிற்சி தடைபடுவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் காலை, மாலை எந்த நேரத்தில் வசதிப்படுகிறதோ அந்த நேரத்தில் ட்ரெட்மிலில் நடக்கலாம். மிகவும் பிசியான வேலைப்பளு உள்ளவர்களுக்கு இது சிறந்த வழியாகும்.
பாதுகாப்பு:
சாலையில் விரைந்து செல்லும் வாகனங்களால் ஏற்படும் கவனச்சிதறல், போக்குவரத்து பற்றிய பயம், பாதுகாப்பு, சீரற்ற நடைபாதைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மிகவும் பாதுகாப்பான சூழலில் நடக்கலாம். பாட்டு, பட்டிமன்றம், ஆடியோ கதைகள் கேட்டுக் கொண்டே நடக்கலாம். சுற்றுப்புறத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:
ட்ரெட் மில்லில் நடக்கும் வேகம், தூரம், நேரம் மற்றும் இதயத்துடிப்பு எரிக்கப்பட்ட கலோரிகள் போன்றவற்றை கண்காணிக்கலாம். நமது உடல் நிலைக்கேற்ப வேகத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
வசதி:
பெரும்பாலான ட்ரெட்மில்களில் அதன் அடிப்புரத்தில் மெத்தை போன்ற பெல்ட் உள்ளது. மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கும் விபத்தினால் அல்லது வேறு சில காரணங்களால் உடலில் காயம் உள்ளவர்களுக்கும் அதிக எடை கொண்ட நபர்களுக்கும் இதில் உள்ள மென்மையான பெல்ட் உடலை சௌகரியமாகவும் இலகுவாகவும் வைக்கிறது.
இதில் நிலையான வேகத்தையும் இதயத் துடிப்பையும் பராமரிப்பது எளிது. இது குறிப்பிட்ட இருதய பயிற்சிக்கு நல்லது. மேலும் இதில் கால்களின் வலிமையை அதிகரிக்க, அதிக கலோரிகளை எரிக்கத் தேவையான பொசிஷனில் செட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
பாதகங்கள்:
தினமும் ஒரே இடத்தில் நடப்பது விரைவாக மனதை சலிப்படைய செய்யும்.
இதில் உள்ள நகரும் பெல்ட் காலை பின்னுக்கு இழுக்கிறது. இதனால் தொடை எலும்புகள் மற்றும் பிட்டத்தின் பின்புறத்தில் உள்ள தசைகள் வெளிப்புற நடைப்பயணத்துடன் ஒப்பிடும்போது கடினமாக உழைக்காது. தொடையின் முன் பக்கம் நல்ல பயிற்சி பெற்றாலும், கால் மற்றும் கணுக்கால்களில் உள்ள சில உறுதிப்படுத்தும் தசைகளுக்கு குறைவான பயிற்சியே தரப்படுகிறது.
ட்ரெட்மில் ஒரு விலை உயர்ந்த முதலீடாக இருக்கிறது. மேலும் அதுவே அறையின் பெரும்பகுதியை அடைத்துக் கொள்ளும். ஜிம்முக்கு சென்றாலும் கட்டணம் கட்ட வேண்டும்.
வீட்டிற்கு வெளியே நடக்கும் நடைப்பயிற்சியின் நன்மைகள்:
வீட்டிற்கு வெளியே நடைபாதைகள், பூங்காக்கள், மற்றும் சாலை ஓரத்தில் நடப்பது மனதிற்கு இதமாக இருக்கும். மேலும் பாதங்கள், கணுக்கால் மற்றும் மையத்தில் உள்ள உறுதிப்படுத்தும் தசைகள், தொடை, எலும்புகள் மற்றும் பிட்டம் ஆகியவை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது.
சீரற்ற தரை, சாலையில் இருக்கும் இயற்கையான சரிவுகள் மற்றும் சாய்வுகள், பலமாக வீசும் காற்று போன்ற காரணிகள் உடலை கடினமாக உழைக்க செய்து, அதிக கலோரி எரிப்புக்கு வழி வகுக்கிறது.
வெளியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது இயற்கைக் காற்று, இயற்கையான சூரிய வெளிச்சம் போன்றவை கிடைக்கிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும். மனநிலையை மேம்படுத்தும்.
பல்வேறு காட்சிகள் ஒலிகள் மற்றும் வாசனையை அனுபவிக்க முடியும். இதனால் நடைப்பயணம் ஈடுபாட்டுடனும் விரும்பத்தக்கதாகவும் இருக்கும். சலிப்பும் தட்டாது. புதிய புதிய முகங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிப்புற நடை பயிற்சியினால் செலவு ஏதுமில்லை. நல்ல உறுதியான காலணிகள் மட்டும் போதும்.
பாதகங்கள்:
தீவிரமான வெப்பமான வானிலை, மழை, மோசமான புயல் காற்று போன்ற சீதோஷ்ண நிலைகள், போக்குவரத்து நெரிசல், சீரற்ற நடைபாதைகள், வழுக்கும் மேற்பரப்புகள் போன்றவை பாதுகாப்பற்றதாக உணர வைக்கும்.
ட்ரெட்மிலின் மெத்தையான அமைப்பு மாதிரி இல்லாமல் ரோட்டில் கான்கிரீட் அல்லது கடினமான பரப்புகளில் நடக்கும் போது மூட்டுகளுக்கு கடினமாக இருக்கும். அதேசமயம் புல் அல்லது மண்பாதைகள் போன்ற மென்மையான பரப்புகளில் நடப்பது மூட்டு ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
அதிக மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு ட்ரெட்மில்லை விட வெளியில் சென்று நடக்கும் நடைப்பயிற்சியே சிறந்தது. அவரவர்களுக்கு எந்த முறை ஒத்து வருகிறதோ அதை தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும்.