துரித உணவை விட முடியலையா? காரணம் உங்கள் வயிறு அல்ல... உங்கள் மூளை!

Fast/Junk food | துரித உணவு
Fast/Junk food | துரித உணவுImage Credit: Gemini
முனைவர். த. சரவணக்குமார்

முனைவர். த. சரவணக்குமார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானோகிரிஸ்டல்கள் சார்ந்த ஆய்வில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் Q1 தரவரிசை இதழில் கிரிஸ்டல் DFT ஆய்வு தொடர்பான ஆய்வையும் வெளியிட்டுள்ளார். எளிய உபகரணங்கள் கொண்டு அறிவியல் கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்கி வருகிறார். அறிவியல் மட்டுமின்றி, தமிழ், இசை, இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடகராகவும், கவிஞராகவும், பாடலாசிரியராகவும் திகழும் இவர், தனது சொந்தப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் பல்வேறு நிகழ்வுகளில் பாடி வருகிறார். இவரது அறிவியல் தேடலும், தமிழின் மீதான பற்றும், இசை மற்றும் படைப்பாற்றலும் இணைந்து, அறிவியலையும் தமிழையும் ஒருங்கே முன்னெடுக்கும் பன்முக ஆளுமையாக அவரைத் தனித்துவப்படுத்துகின்றன.

Updated on: 

நம்ம MIND-டு வேற அங்க போகுதே

'நம்ம இன்னைக்கு மட்டும் பர்கர் சாப்பிடுவோம்...

நாளையிலிருந்து கண்டிப்பாக நிறுத்திடுவோம்...'

இப்படி நமக்கே நாமே எத்தனை முறை வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்?

ஆனால், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு பீட்சா கடையைப் பார்த்தாலோ, நண்பர்கள் "ஒரு பர்கர் ஆர்டர் பண்ணலாமே!" என்று சொன்னாலோ, அல்லது மொபைலில் உணவு விநியோகச் செயலியின் அறிவிப்பு வந்தாலோ, நம் முடிவு சில நிமிடங்களில் மாறிவிடுகிறது. சேவு, மிக்சர், பஜ்ஜி, போண்டா, பானி பூரி, காளான் என துரித உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்

பிறகு மனதில் ஒரே கேள்வி...

'என்னால ஏன் இந்தப் பழக்கத்தை மட்டும் விட முடியல?'

இதற்கான பதில் நம் வயிற்றில் இல்லை; நம் மூளையில் இருக்கிறது என்று நவீன மருத்துவ அறிவியல் கூறுகிறது.

உணவின் மீது மூளைக்கு ஏன் இத்தனை ஆசை?

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை மட்டும் நிரப்புவதில்லை. அது நம் மூளையிலும் ஒரு நினைவையும், ஒரு அனுபவத்தையும் உருவாக்குகிறது. குறிப்பாக அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்பு கொண்ட துரித உணவுகள் மூளையின் வெகுமதி மையத்தை (Reward System) வலுவாகத் தூண்டுகின்றன.

அப்போது டோபமைன் (Dopamine) என்ற நரம்பியல் வேதிப்பொருள் அதிகமாகச் சுரக்கிறது. இதனால் சில நிமிடங்களுக்கு மகிழ்ச்சி, உற்சாகம், திருப்தி போன்ற உணர்வுகள் உருவாகின்றன.

இந்த அனுபவத்தை மூளை மிகவும் முக்கியமானதாகப் பதிவு செய்து வைத்துக்கொள்கிறது.

அடுத்த முறை அதே உணவைப் பார்த்தாலோ, அதன் மணத்தை உணர்ந்தாலோ, விளம்பரத்தைப் பார்த்தாலோ கூட, 'அந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற வேண்டும்' என்று மூளை நம்மைத் தூண்டத் தொடங்குகிறது.

அதனால்தான்...

வயிறு நிறைந்திருந்தாலும்,

'ஒரு சிறிய பீட்சா மட்டும்...'

என்று மனம் சொல்லத் தொடங்குகிறது.

இது பசி அல்ல; பல நேரங்களில் இது பழக்கத்தின் நினைவு.

வயிறு நிறைந்தாலும் மனம் ஏன் சாப்பிடச் சொல்கிறது?

ஒரு செயலை நாம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்தால், அதற்கான நரம்பியல் இணைப்புகள் (Neural Pathways) மூளையில் வலுவடைகின்றன. இதுவே ஒரு பழக்கமாக மாறுகிறது.

உதாரணமாக, தினமும் மாலை ஐந்து மணிக்கு தேநீருடன் சமோசா சாப்பிடும் பழக்கம் இருந்தால், அந்த நேரம் வந்தாலே உடலுக்குப் பசி இல்லாவிட்டாலும், மூளை அந்த உணவை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும். அந்த உணவு கிடைக்காவிட்டால் சிலருக்கு எரிச்சல், அமைதியின்மை அல்லது ஏமாற்றம் கூட ஏற்படலாம்.

இதன் காரணமாகத்தான், துரித உணவை ஒரே நாளில் முழுமையாகக் கைவிடுவது பலருக்குக் கடினமாக இருக்கிறது.

Fast/Junk food | துரித உணவு
Fast/Junk food | துரித உணவு

பழக்கத்தை மாற்றுவது எப்படி? - நியூரோபிளாஸ்டிசிட்டி

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், நம் மூளை புதிய பழக்கங்களையும் உருவாக்கும் திறன் கொண்டது. இதையே அறிவியலில் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) என்று அழைக்கிறார்கள்.

அதனால், கெட்ட பழக்கத்தை அழிக்க முயற்சிப்பதைவிட, அதற்குப் பதிலாக ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாரத்தில் ஐந்து முறை துரித உணவு சாப்பிடுபவர் என்றால், முதலில் அதை மூன்று முறையாகக் குறையுங்கள். பின்னர் வாரத்திற்கு ஒரு முறையாக மாற்றுங்கள்.

வீட்டில் பழங்கள், சுண்டல், வறுத்த கடலை, பாதாம், வேர்க்கடலை, தயிர், மோர் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வைத்திருங்கள். திடீரென பசி எடுத்தால் முதலில் அவற்றைத் தேர்வு செய்யுங்கள்.

அதேபோல், போதுமான தூக்கம் இல்லாதபோதும், அதிக மனஅழுத்தம் இருக்கும்போதும், தனிமை அல்லது சலிப்பு ஏற்படும்போதும் துரித உணவின் மீது ஆசை அதிகரிக்கலாம். எனவே, தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, போதுமான உறக்கம், குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் ஆகியவையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்க உதவுகின்றன.

துரித உணவை ஒருமுறை சாப்பிட்டதால் உடனடியாக நோய் வந்துவிடாது.

ஆனால்...

அது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும்போது, உடல் பருமன், கொழுப்பு கல்லீரல், இன்சுலின் எதிர்ப்பு, வகை–2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயம் படிப்படியாக அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல தண்ணியோட TDS அளவு எவ்ளோ இருக்கணும்னு தெரியுமா?
Fast/Junk food | துரித உணவு

திருவள்ளுவர் சொன்ன உணவுக் கட்டுப்பாடு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் உணவுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.

அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

– திருக்குறள் 943

அளவோடு உண்பவனே நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வான் என்ற இந்தக் குறள், இன்று மருத்துவ அறிவியல் கூறும் அளவான உணவு, சரியான உணவுத் தேர்வு, உடல் எடைக் கட்டுப்பாடு போன்ற கருத்துகளோடு ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒத்துப்போகிறது.

எனவே, அடுத்த முறை துரித உணவைப் பார்க்கும்போது, 'எனக்கு உண்மையிலேயே பசியா... இல்லை என் மூளை பழைய மகிழ்ச்சியைத் தேடுகிறதா?' என்று உங்களையே ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.

நாம் மூளையிடம் கேட்கின்ற அந்த கேள்வி உங்கள் மூளை உங்களுக்கு பதில் அளிக்க ஆரம்பிக்கும். உங்கள் அடுத்த உணவுத் தேர்வை மட்டுமல்ல, உங்கள் அடுத்த தலைமுறை ஆரோக்கியத்தையும் மாற்றக்கூடும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட உடனே 10 நிமிடம் நடந்தால் இத்தனை நன்மைகளா?
Fast/Junk food | துரித உணவு

Reference:

logo
Kalki Online
kalkionline.com