SIP (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்வது காலப்போக்கில் செல்வத்தை வளர்ப்பதற்கான எளிய மற்றும் ஒழுக்கமான முறையாக இந்தியர்களிடையே சமீப காலமாக பிரபலமடைந்துள்ளது. இந்த முதலீட்டு முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் தனிநபர்கள் தவறாமல் மாதாமாதம் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. இது குறைந்த வருமானம் வருபவர்களும் அணுகக் கூடிய வகையில் இருக்கும் ஒரு சிறந்த திட்டமாகும். இருப்பினும் SIP-களில் எவ்வளவு முதலீடு செய்வது நல்லதென்பது பலரது கேள்வியாக உள்ளது. இந்தப் பதிவில் அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் உங்களது SIP முதலீடானது உங்களது நிதி சார்ந்த இலக்குகள், பிரச்சனையை சமாளிக்கும் தன்மை மற்றும் தற்போதைய பணத் தேவை ஆகியவற்றுடன் ஒத்துப்போக வேண்டும். அதாவது ஒரு மாதத்தில் அதிகப்படியான செலவு வந்தாலும், உங்களால் எவ்வளவு பணத்தை தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடியுமோ அதை SIP முதலீடாக பராமரிப்பது நல்லது. இதைத் தீர்மானிக்க உங்களது வருமானம் மற்றும் செலவுகளை மதிப்பிடவும். இது உங்களுக்கு ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்தும்.
SIP-ல் முதலீடு செய்வதற்கு முன், உங்களிடம் அவசர கால நிதி இருப்பதை உறுதி செய்யவும். குறைந்தது மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குத் தேவையான பணத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களது எதிர்பாராத திடீர் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வீடு வாங்குதல், உங்கள் பிள்ளைகளின் கல்வி அல்லது உங்களது ஓய்வு திட்டம் போன்றவற்றிற்கு தேவைப்படும் நிதி இலக்குகளை தெளிவாக வரையறுக்கவும். ஒவ்வொரு குறிக்கோளுக்கும் வெவ்வேறு முதலீட்டுத் தொகை மற்றும் கால அளவு தேவைப்படலாம். இதை முறையாக கணக்கிட்டு, அவற்றிற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து செயல்படுத்தவும்.
உங்களது SIP முதலீடுகளை பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் போடுவது நல்லது. இப்படி முதலீடுகளை பரப்புவது, உங்கள் பணத்தை இழக்கும் அபாயங்களை குறைக்கவும், லாபம் ஈட்டவும் உதவும். எனவே இது பற்றிய முழு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு SIP முறையில் பணத்தை முதலீடு செய்யுங்கள்.
உங்களது முதலீடு மற்றும் லாபங்களைத் தெரிந்துகொள்ள SIP கால்குலேட்டரை பயன்படுத்தவும். அதன் மூலமாக மாதம் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்தால் எதிர்காலத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது உங்களது வட்டி சதவிகிதம் மற்றும் எத்தனை ஆண்டு காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும்.
உதாரணத்திற்கு மாதம் 500 ரூபாய் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து உங்களுக்கு 15 சதவீதம் வட்டி கிடைக்கிறதென்றால், நீங்கள் 60,000 முதலீடு செய்திருப்பீர்கள், இதற்கு 56,170 லாபமாக கிடைத்து மொத்தம் 1,16,170 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இந்த லாபம் பார்ப்பதற்கு குறைவாக இருக்கலாம். இதுவே 20 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்தால், 1,20,000 முதலீட்டுக்கு, 3,79,574 லாபமாக கிடைக்கும். ஒருவேளை கஷ்டப்பட்டு 30 ஆண்டுகள் முதலீடு செய்தால், 1,80,000 முதலீட்டுக்கு, சுமார் 15 லட்சங்கள் வரை உங்களுக்கு லாபமாகக் கிடைக்கும்.
வெறும் 500 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தாலே இவ்வளவு லாபம் கிடைக்கிறது என்றால், அதிகமாக நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களது லாபம் பன்மடங்கு இருக்கும். இதைத்தான் கூட்டு வட்டியின் பலன் என்பார்கள். மேலும் வட்டி விகிதங்கள் அதிகரித்தால் உங்களது லாபம் மேலும் அதிகரிக்கும். எனவே இப்போதே இதைப்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, உங்களது SIP முதலீட்டை இன்றே தொடங்குங்கள்.
என்னுடைய கருத்துப்படி, ஒவ்வொருவரும் மாதமும் 1000 ரூபாயாவது இதில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். காலப்போக்கில் உங்களது வருமானத்திற்கு ஏற்ப முதலீட்டை அதிகரித்துக் கொள்வது நல்லது.