'Angry Young Men' Season 1 
சின்னத்திரை / OTT

ANGRY YOUNG MEN: Season 1 - "நான் சாட்சிக் கையெழுத்து போட்டால் அந்தத் திருமணம் நிலைக்காது என் ராசி அப்படி"

நா.மதுசூதனன்

"சலீம் சாப் திரைக்கதையில் வல்லவர். எவ்வளவு சிக்கலான கதை முடிச்சாக இருந்தாலும் அவர் எளிதில் அதை வளைத்து விடுவார். நான் வசனங்களைப் பார்த்துக் கொள்வேன்" என்கிறார் ஜாவேத்.

வெற்றியின் போதை அளவுக்கு அதிகமாக இவர்களை ஆட்கொண்டது. ஒரு கட்டத்தில் படத்தின் கதாநாயகனைவிட, அது அமிதாப்பாகவே இருந்தாலும் கூட, தங்களுக்கு ஒரு லட்சம் அதைவிடக் கூடத் தர வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தனர். சில படங்களுக்கு வாங்கியும் உள்ளனர்.

ஜாவேத் அக்தர் தனது முதல் மனைவியான ஹனி இரானியைத் திருமணம் செய்தபோது சலீமைத் தான் சாட்சிக் கையெழுத்து போடச் சொன்னார்.

"நான் சாட்சிக் கையெழுத்து போட்டால் அந்தத் திருமணம் நிலைக்காது என் ராசி அப்படி" என்று சொன்னார் சலீம். "எனக்கு இந்த மூட நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அண்ணனாக நீங்கள் தான் போட வேண்டும்" என்று உறுதியாக இருந்தார் ஜாவேத்.

"அவர் சொன்னது போலவே பின்னாளில் நாங்கள் பிரிய வேண்டி வந்தது" என்று சிரிக்கிறார் ஜாவேத். "ஆனால் அந்தப் பிரிவிற்காக இன்றும் வருந்துகிறேன். என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு அது" என்கிறார்.

அவரது இரண்டாவது மனைவியான ஷபானா ஆஸ்மி, "எல்லா விதமான பேச்சுக்களையும் நான் கேட்டேன். ஆனால் ஹனி இரானி இதைக் கௌரவமாகத் தான் எதிர்கொண்டார். வீட்டைப் பிரிக்க வந்தவள் என்ற பெயர் என்னை விட்டு நீங்க அவரும் ஒரு முக்கியக் காரணம். இன்றுவரை நாங்கள் நல்ல நண்பர்கள்" என்கிறார்.

சலீமின் முதல் மனைவியும் நடிகர் சல்மான் கானின் அம்மாவுமான சல்மா கானும் இதைச் சந்தித்தார். நடிகை ஹெலனை, தான் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக அவரிடம் தான் முதலில் சொன்னார் சலீம். மக்களான சல்மான், அர்பாஸ், சொஹைல் கானிடம் "ஹெலன் ஆன்டி வரப்போகிறார். அவருக்கு உங்கள் அம்மாவிற்குத் தரும் மரியாதையைத் தரத் தவறக் கூடாது" என்று உறுதியாகச் சொன்னார் சலீம்.

"இன்று வரை அவர் பேச்சை நாங்கள் மீறவில்லை. ஹெலன் ஆன்டி எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்களுக்குள் வேற்றுமையே கிடையாது" என்கிறார் சல்மான் கான்.

"நான் இரண்டாவது மனைவி என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தே வராமல் பார்த்துக் கொண்டதில் அந்தக் குடும்பத்தின் பங்கு மிக முக்கியம். இன்று வரை முதலில் ஹெலன் ஆன்டி எங்கே என்று தான் கேட்பார்கள். அவர்களும் என் பிள்ளைகள் தான்" என்கிறார் ஹெலன்.

வெற்றிகள் எப்படி வேகமாக வருமோ அது போலத்தானே தோல்விகளும். எதிர்பாராமல் அடித்துச் சாய்த்தது. ஷோலே போன்றே அடுத்த படம் இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க முடிவு செய்தார் ரமேஷ் சிப்பி. அது தான் ஷான். அமிதாப், ஷஷிகபூர், சத்ருகன் சின்ஹா, பர்வீன் பாபி, என நட்சத்திர பட்டாளம். புது வில்லன். குல்பூஷண் கர்பந்தா. ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல எடுக்க நினைத்த படம். முதல் நாளிலேயே தோல்வி உறுதியானது. ஷோலே போலத் தான் இதுவும் என நினைத்துத் திரும்ப அதே போல் விளம்பரம் செய்தனர் இருவரும். இந்த முறை பலிக்கவில்லை. மிகப் பெரிய தோல்வி. இவர்கள் சகாப்தம் முடிந்தது என்று ஊரெங்கும் பேச்சு பரவ ஆரம்பித்தது. இவர்களுடைய இந்தத் தோல்வியை இந்திப் படவுலகில் பலர் பார்ட்டி வைத்துக் கொண்டாடினர் என்கின்றனர் இருவரும்.

"எங்களுடைய மதிப்பை நாங்கள் உணரவில்லை. வெற்றியின் போதை எங்களை மயக்கியிருந்தது." என்கின்றனர் இருவரும்.

இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்த போன்கள் அடிப்பதை நிறுத்தின. தயாரிப்பாளர்கள் வருகை குறையத் தொடங்கியது. பலமான வெற்றிகள் எப்படி உயரத்தில் நிறுத்தி வைத்ததோ மிகப் பெரிய தோல்விகள் இவர்களை ஆழத்தில் அமர்த்தி விட்டன. புதிய எழுத்தாளர்கள் வரத் தொடங்கினார்கள்.

இருபத்தி நான்கு மணி நேரத்தில் பதினெட்டு மணி நேரம் ஒன்றாகக் கழித்த இவர்கள் ஏன் பிரிந்தோம் என்று யாரிடமும் சொல்லாமல் பிரிந்தனர். இன்று வரை அதற்கான உண்மையான காரணத்தை இவர்கள் சொல்லவில்லை. ஆனால் பெரிய சண்டையோ மனக்கசப்போ இல்லை. சேற்றை வாரி வீசிக் கொள்ளவில்லை. நல்லதை பற்றி மட்டுமே பேசினர்.

"எல்லோருக்கும் ஒரு ஷெல்ப் லைப் இருக்கும். இவர்களுக்கு அது முடிந்தது அவ்வளவு தான்" என்கிறார் ஹெலன். மிகப் பெரிய வெற்றியின்போது அவர்கள் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை. தோல்விக்குப் பிறகு இருவரும் குடும்பத்திடம் திரும்பினர். ஆனால் குடும்பம் இவர்களுடன் எப்போதும் இருந்தது. அது தான் இந்த நாட்டின் குடும்பப் பாரம்பரியத்தின் பலம்.

இவர்கள் இருவரும் பிரிந்தபோது, தங்கள் குடும்பத்திற்கு திரும்பக் கிடைத்ததால் மனைவி மக்களுக்குச் சந்தோஷம். ஆனால் சேர்ந்திருந்தபோது இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருந்த அந்த நெருக்கம் கொஞ்சம் குறைந்தது. இது தவிர்க்க முடியாதது என்கின்றனர் பிள்ளைகளான அர்பாஸ் கானும் பார்ஹான் அக்தரும். "Love is rooted in respect. When respect is over there wont be any love" என்கிறார் சலீம்.

"படிப்பது மட்டுமே எழுதுதலை வளப்படுத்தும். இன்றைய எழுத்தாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வெளியேயும் உள்ளேயும் தேட வேண்டும்" என்கிறார் ஜாவேத் அக்தர்.

வளரும் எழுத்தாளர்கள் பேசும்போது "திரைக்கதை எழுத்தாளர்களுக்கு இவர்கள் தான் ஆதர்சம். காட்பாதர்கள். இந்திமட்டுமல்ல சினிமாவிற்கென்று இவர்கள் பங்களிப்பும், பெயரும், புகழும் இனி ஒருவர் கண்டிப்பாகத் தர முடியாது. அன்றும் இன்றும் என்றும் சலீம் - ஜாவேத் என்பது மாற்றவே முடியாத ஒரு எமோஷன். நிகழ்வு. சரித்திரம்" என்கிறார்கள்.

இரண்டு குடும்பங்களின் தயாரிப்பான இதில் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்களின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமான (அவருடைய வெற்றிக்கும்) அமிதாப் பச்சனை மிகக் குறைவாகவே பயன்படுத்தி உள்ளனர். குடும்பங்கள் அதிகம் பேசுவதால் ஒரு கட்டத்தில் பெருமை பேசுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனாலும் திரை விமர்சகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரின் கருத்துகள் திரையுலக செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் இந்த டாகுமெண்டரி மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT