வெள்ளித்திரை

ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் குறித்து ஒரு பார்வை!

கார்த்திகா வாசுதேவன்

உதகையைப் பூர்வீகமாகக் கொண்டவரான இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கர்த்திகி கொன்சால்வ்ஸின் அறிமுகக் குறும்படம் இது. முதல் முயற்சியிலேயே ஆஸ்கர் வென்றிருக்கிறார்.

இந்தோ அமெரிக்க கூட்டுத்தயாரிப்பில் உருவான இந்த ஆவணப் படத்தை தயாரித்திருப்பது சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். 95 வது அகாடமி விருது வென்ற வகையில் இது இந்தப் பிரிவில் விருது வென்ற முதல் இந்திய ஆவணக் குறும்படம் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

இந்தப் பற்றி படத்தைப் பற்றி விமர்சிப்பதைக் காட்டிலும் உள்ளது உள்ளபடியே தெரிந்து கொள்வது தான் நாம் இதற்குச் செய்யும் நியாயமாக இருக்க முடியும். இந்த ஆவணப்படம் அனாதையான யானைக்குட்டிகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பில் இருக்கும் பொம்மன் மற்றும் பெல்லியின் வாழ்க்கையைச் சொல்கிறது. காட்டின் மக்களான அவர்களுக்கு யானையோ அங்கிருக்கும் ஏனைய விலங்குகளோ எதுவுமே புதிதில்லை. ஆனால், நமக்கு இவர்கள் அத்தனை பேருமே புதிதானவர்கள்.

படத்தில் வரும் வனப்பகுதிகள் முழுமையுமே கண்களுக்கு குளு குளுவென்றிருக்கின்றன.

தந்தத்தால் ஆற்றங்கரை ஈரமணலைக் குத்தி எடுக்கும் யானை விளையாட்டு. தாயும், சேயுமாக குட்டிக் குட்டி சிம்பன்ஸிகள், சிறுத்தைப் புலி, பறக்கும் அணில், கழுகு, ஆந்தை, மயில் என ஒவ்வொரு காட்சியுமே மறக்க முடியாத அளவுக்கு மனதை நிறைக்கின்றன.

கொம்புத் தேன் எடுக்கும் காட்சி ஓரிடத்தில் நெஞ்சைச் சில்லிட வைக்கிறது.

சில இடங்களில் மேலிருந்து ஏரியல் வியூவில் காண்பிக்கப்படும் காடும், யானை இடப்பெயர்வும் ஆஹா... அருமை! யானையின் பிரம்மாண்டத்தை உணர இது மிகச்சிறந்த தேர்வு.

ஆவணப் படத்தில் ஓரிடத்தில் பெல்லி சொல்கிறார்...

என்ன இருந்தாலும் யானை ஒரு காட்டு மிருகம். நாம் அதன் மீது பாசத்தைக் காட்டலாம். அதற்காக அது நாம் சொல்வதைச் செய்யுமே தவிர, யானை கற்றுக் கொள்வது என்பது பிற யானைகளோடு பழகும் போது தான். ஒரு யானைக்குத் தேவையான எல்லாவற்றையும் மனிதர்களால் கற்பிக்க முடியாது. -என்கிறார்.

எத்தனை புரிதலோடு இருக்கிறார் என்று பாருங்கள்.

தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகப்பழமையான யானை முகாம்களில் ஒன்று. இதன் வயது 140. இதன் நிலப்பரப்பு ஆசிய யானைகளுக்கு மிகப்பெரும் வனப்பகுதியாக இருந்து வருகிறது.

படத்தில் ஓரிடத்தில் பெல்லி சொல்கிறார்;

“நாங்க காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள். காட்டுக்கு நடுவுல தான் வாழறோம். இனியும் அப்படித்தான் வாழுவோம்.எங்களுக்கு காடு சாமி மாதிரி, அதனால காட்டுக்குள்ள போகும் போது செருப்பில்லாமத் தான் நடப்போம். காடு எங்களுக்கு எல்லாமே தருது. ஆனாலும் நாங்க தேவைக்கு மட்டும் தான் அதை எடுத்துப்போம். தேவை இல்லாத எதையும் காட்டுல இருந்து எடுக்க மாட்டோம்.”

படத்தின் நாயகனான பொம்மனின் வார்த்தைகளில் இருந்து...

“ரகு, அம்மாவை இழந்த அனாதை யானைக்குட்டியா எங்க கிட்ட வந்தான். முதல்ல பார்க்கும் போது எனக்கு நம்பிக்கையே இல்லை அது பிழைக்கும்னு. பூச்சி பிடிச்சுப் போய், வால் எல்லாம் அறுந்து ரொம்ப பரிதாபமா இருந்துச்சு. அதோட அம்மா, கரண்ட் ஷாக் அடிச்சு செத்துப் போயிடுச்சு. மழை இல்லை தண்ணி இல்லை, காட்டுக்குள்ள யானைங்களுக்கு சாப்பாட்டுக்கு ரொம்பக் கஷ்டம். அதனால அதுங்க ஜனங்க இருக்கற ஊருப்பக்கமா வர ஆரம்பிச்சுதுங்க. கூட்டமா இருந்த யானைங்க அதுவா காட்டுக்குள்ள போயிடும். ஆனா, இந்தக் குட்டிங்க தான் பாவம் எங்கயாவது தவறிப் போயி வழி தெரியாம நிக்கும். அப்படித்தான் ரகு என்கிட்ட வந்தான்.

முதல்ல ரெண்டு, மூணு தடவை அதை காட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போய் விட்டு அது மத்த யானைக்கூட்டத்தோட சேருமான்னு பார்த்தோம். ஆனா, ரகு போகல. திரும்பத் திரும்ப இங்க தான் வந்தது.

இப்ப அதை ஒரு புள்ள மாதிரி வளர்த்தறோம் நாங்க.”

இப்படிச் சொல்லும் பொம்மனை ரகுவின் அப்பா என்று தான் கருதுகிறார்கள் அங்குள்ள மக்கள்.

பொம்மனின் அப்பா காட்டில் யானை வேலையில் தான் இருந்திருக்கிறார். அவர் இறந்த பிறகு வாரிசு உரிமைப்படி அவரது வேலை அவரது மகனுக்குக் கிடைத்திருக்கிறது.

“நான் யானை வேலை செய்றேன் இப்ப. அப்புறம் இதோ இந்த சின்னப்புள்ளைங்க இருக்காங்க பாருங்க, இவனுங்க செய்வானுங்க இந்த யானை வேலையை. முதல்ல ரகு மட்டும் தான் வந்தான். அப்புறமா காட்டுல வழி தப்பிப் போய் அம்மு வந்துச்சு. இந்த ரெண்டு குட்டி யானைங்களையும் வளர்க்கத் துணையா எனக்கு பெல்லி கிடைச்சாங்க. அவங்களை எனக்குக் கிடைச்ச வரமாத்தான் பார்க்கறேன். இப்ப நான் யானைக்கு அப்பான்னா... அவங்க தான் யானைக்கு அம்மா. இங்க உள்ளவங்க எங்களை அப்படிச் சொல்லும் போது

எங்களுக்கு அது ரொம்பப் பெருமையா இருந்தது. இந்த ரெண்டு குட்டி யானைகளை வளர்க்க வேண்டியது தான் எங்க வேலை. அதுக்கு தான் அரசாங்கம் எங்களுக்கு பணம் தருது. அப்போ அதுங்க தான எங்களுக்கு கடவுள். நாங்க அது ரெண்டையும் குழந்தைங்கள வளர்க்கற மாதிரி தான் வளர்க்கறோம்.

இந்த யானைங்கள கூட சேர்ந்து வளர்த்ததுல எங்களுக்குள்ள நல்லா பாசமாயிடுச்சு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். - என்கிறார் பொம்மன்.”

இனி பெல்லி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

“என் புருஷனை காட்டுக்குள்ள புலி அடிச்சு கொன்னுடுச்சு. அதனால காடுன்னாலே எனக்கு ரொம்ப பயம். ஆனா, இந்த ரகுவையும், அம்முவையும் வளர்க்க ஆரம்பிச்சப்புறம் காட்டு மேல இருந்த பயம் போயிடுச்சு. என் மகளும் இறந்துட்டா, வாழ்க்கையில நான் நிறைய இழந்துட்டேன். அதனால அப்பப்ப கண் கலங்கும். அழுவேன். நான் கண்ணீர் விடறதை பார்த்தா உடனே ரகு வந்து துதிக்கையால துடைச்சி விடுவான். எம்பொண்ணு உயிரோட இருந்தா இப்படித்தான பாசமா இருப்பான்னு நினைக்கும் போது எனக்கு அழுகை வந்துடும்... என்கிறார்.

பொம்மன் பேசும் போது...

“இந்த யானைக்குட்டிகளை வளர்த்ததுல எங்களுக்குள்ள பாசமாகி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இல்லையா? எங்களுக்கு கல்யாணம் ஆன பிறகு, வனத்துறை அதிகாரிங்க. ரகுவை வேற ஒருத்தருக்கு கொடுக்கறதா முடிவு செஞ்சிட்டாங்க. நாங்க எவ்வளவோ பேசிப் பார்த்தோம். சார், எங்க கிட்டயே விட்டுடுங்களேன். நாங்களே நல்லபடியா வளர்த்துற்றோம்னு கெஞ்சிப் பார்த்தோம். ஆனா, அவங்க ஒத்துக்கல, வேற ஒருத்தர் கிட்ட கொடுத்துட்டாங்க. இப்பவும் ரகுவை நான் பார்க்கறப்ப ஓடி வந்து எங்கிட்ட நிற்பான். அவனுக்கு எம்மேல பாசம் இருக்கறதை நான் உணர்வேன்.

இப்ப அம்மு எங்க கூட இருக்கு.

ரகுவுக்கு 7 வயசு, அம்முவுக்கு 3 வயசு. ரெண்டுமே நல்லபடியா வளருதுங்க.”

- என்று சொல்லும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்க்கை கதையாகி ஆவணப்படப் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றிருப்பது குறித்தெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள் அவ்வளவு தான்.

இந்த எளிய மனிதர்கள் யானைகளின் மீது கொண்டுள்ள புரிதலும், கனிவும் எல்லோருக்குமே வந்து விட்டால் யானைக்குட்டிகள் இனிமேல் அனாதைகளாகும் நிலை வராதோ என்னவோ?!

படத்தின் ஒரு காட்சியில், பெல்லி தன் பேத்திக்கு ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதை மூன்று குருடர்களைப் பற்றியது.

“யானை பார்க்க ஆசைப்படும் குருடர்கள் மூன்று பேர் காட்டுக்குள்ள போறாங்க. அதுல ஒருத்தர் யானையோட காலை மட்டும் தொட்டுப் பார்த்துட்டு, யானை உரல் மாதிரி இருக்குதுங்கறார். இன்னொருத்தர் காதை மட்டும் தொட்டுப் பார்த்துட்டு யானை முறம் மாதிரி இருக்குதுங்கறார். அடுத்தவர் யானையோடு வாலை மட்டும் தொட்டுப் பார்த்துட்டு யானை துடைப்பம் மாதிரி இருக்குதுங்கறார்.”

இங்க கூட நிறைய மனுசங்க யானை ரொம்ப மோசமானது, தோட்டத்தை அழிக்கும், மரத்தை முறிக்கும்னு சொல்றாங்க. அப்படி எதுவும் இல்லை. அது கூடவே இருக்கற எங்களுக்குத்தான் தெரியும் யானை எவ்வளவு பாசம் மிக்கதுன்னு!”

நம்ம ரகு எங்க மேல எவ்வளவு பாசமா இருக்கான்னு பார்த்தியா?

என்கிறார்.

யானைகள் மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவை. உணர்வு மயமானவை. இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு யானை குறித்த புரிதலோடு பழங்குடி மக்கள் குறித்த புரிதலும் கிடைக்கலாம். ஆனால், அதை எத்தனை நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்வோம் என்பது தான் மனிதர்களாகிய நம்முடைய மிகப்பெரிய பிரச்சனை!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT