பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் பெரிய ஸ்டூடியோ ஒன்றைத் திறந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், முதன்முதலில் அம்மாவின் நகையை அடகு வைத்துதான் ஸ்டூடியோவின் முக்கியமான பொருட்களை வாங்கினேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரலால் இந்திய மக்களின் மனதைக் கவர்ந்தவர். சில காலங்களிலேயே கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் என இந்தியா முழுவதும் இசையமைக்கத் தொடங்கினார். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது பாடல்களுக்காக இரண்டு முறை ஆஸ்கார் விருது வென்றுள்ளார். சமீபத்தில் லால் சலாம், அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். மேலும் ஜெயம் ரவியின் ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான், படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல இடங்களில் கச்சேரி நடத்தி வருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகிவிடும். அந்தவகையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்தக் கச்சேரி சரியான முறையில் ஏற்பாடு செய்யவில்லை என்று சர்ச்சையில் முடிந்தது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார்.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் பெரிய ஸ்டூடியோ ஒன்றைத் திறந்திருக்கிறார். இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோ என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்டூடியோவில் உலகில் விலை உயர்ந்த இசைக்கருவிகள், ரெக்காடர்கள், மிக்சர்கள் என்று தேவையான அனைத்தையுமே வைத்திருக்கிறார். மேலும் நவீன வசதிகளோடு ஸ்டூடியோவை வைத்திருக்கின்றார்.
இந்த ஸ்டூடியோவிற்கு Firdaus Studio என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்காலத்தில் ரஹ்மான் உருவாக்கிய ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் கூட செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. ஆனால், தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவை அமைத்திருக்கிறார். இதன் மூலம் இவர் நம் நாட்டின் இசையை பெருமைப்படுத்தும் அளவிற்கு செய்துக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மையாகிறது. இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான், “நான் முதலில் ஸ்டூடியோ அமைத்த போது என்னிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை.
அப்போது ஸ்டூடியோவிற்காக அம்ப்லிஃபையர், ஈக்குவலைசர் போன்ற அடிப்படை கருவிகள் கூட என்னால் வாங்க முடியவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னுடைய ஸ்டுடியோவில் ஏசி, செல்பி, ரெக்கார்பெட் மட்டுமே இருந்தன. ஸ்டூடியோவில் வேறு எதுவுமே கிடையாது. எதையும் வாங்க பணமும் இல்லாமல் இருந்தேன். என்னுடைய அம்மாவின் நகையை அடகு வைத்து தான் முதன் முதலில் ரெக்கார்டர் ஒன்றை ஸ்டூடியோவிற்கு வாங்கினேன். அந்தத் தருணம் தான் என்னுடைய வாழ்க்கையே மாறிய தருணம். என் எதிர்காலத்தை நான் உணர்ந்தத் தருணம்.” என்று உருக்கமாகப் பேசினார்.