Andhagan 
வெள்ளித்திரை

ANDHAGAN - அப்பாவின் இயக்கத்தில் பிரசாந்த் 'ரீ என்ட்ரி'!

ராகவ்குமார்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவினர் அடிக்கடி துபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இது போன்று கலை நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள், அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த பிரசாந்த்திடம் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள டேட் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்த பின்னரே கலை நிகழ்ச்சி பற்றி திட்டமிடுவார்கள். அந்த அளவிற்கு பிரசாந்த் பல்வேறு ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தார்.  

1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமான பிரசாந்த் செம்பருத்தி, தமிழ், ஆணழகன், கண்ணெதிரே தோன்றினாள் என பல வெற்றி படங்களை தந்து 1992 முதல் 2012 வரை முன்னணியில் இருந்தார். தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும், சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காததாலும்  திரையுலகில்  தொடர்ந்து நீடிக்க முடியாமல் போனார். 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தவர்,  தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஹீரோவாக அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆன்று திரைக்கு வருகிறது.

பிரசாந்த் 'ரீ என்ட்ரி' தர அப்பா தியாகராஜனே வழி வகை செய்துள்ளார்.  ஹிந்தியில்  வெளியாகி வெற்றி பெற்ற 'அந்தாதூன்' என்ற படத்தின் கதையை தமிழில் தன் மகனை நடிக்க வைக்க  ரீ மேக் உரிமையை வாங்கி உள்ளார். இந்த படத்தை தியாகராஜனே இயக்கியும் உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில்  ஹீரோவாக  கார்த்திக் அறிமுகம் ஆனார். அதே படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார் தியாகராஜன். இந்த படத்திற்கு பிறகு இருவரும் நண்பர்களாக மாறி விட்டனர். தன் நண்பர் தியாகராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்தகன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் கார்த்திக். கண்ணேதிரே தோன்றினாள், ஜோடி, தமிழ் போன்ற படங்களில் பிரஷாந்திற்கு ஜோடியாக நடித்தவர் சிம்ரன். பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லியாக நடித்திருப்பார். தன் நண்பர் பிரசாந்திற்காக அந்தகன் படத்திலும் வில்லியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் மையக் கருத்தை வைத்து 'அந்தகன் ஆந்தம் (andhagan anthem ) என்ற பாடலை வெளியிட்டு உள்ளார்கள். ஆரம்ப காலங்களில் பிரசாந்துக்கு போட்டியாளர் என்று கருதப்பட்ட விஜய், இந்த ஆந்தம் பாடலை வெளியிட்டுள்ளார். பிரபு தேவா இப்பாடலை வடிவமைத்துள்ளார். அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடல் பாடி உள்ளனர். தியாகராஜன், பிரசாந்த் இவர்கள் மீதுள்ள நட்பின் மீதும் மரியாதைக்காகவும் பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

பார்வைக் குறைபாடு உள்ள ஒரு பியானோ கலைஞனாக பிரசாந்த் இப்படத்தில் நடித்துள்ளார். பிரசாந்திற்கு நன்றாக பியானோ வாசிக்க தெரியும் என்பது இந்த கேரக்டருக்கு கூடுதல் சிறப்பு என்கிறார் தியாகராஜன். பிரசாந்த்தை டாப் ஸ்டார் என்பார்கள் ரசிகர்கள். இந்த அந்தகன், பிரசாந்த்தை மீண்டும் டாப் ஸ்டாராக உயர்த்த வேண்டும் என்று வாழ்த்துவோம். 

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT