இந்தியாவுக்கு செஸ் விளையாட்டின் மூலம் சர்வதேச அளவில் பெருமை சேர்த்த விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இத்தனை நாட்கள் இவரது சாதனைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது இந்தச் சாதனைகளை விரைவில் திரையில் காண இருக்கிறோம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்தியாவில் அதிகம் பேர் கிரிக்கெட்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சத்தமில்லாமல் சதுரங்கப் போட்டியில் சாதித்து வந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டு பிரபலமானதற்கு முக்கிய காரணமே இவர் தான். பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற இளம் செஸ் வீரர்கள் இன்றைய காலகட்டத்தில் உருவாவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும் இவரே.
கடந்த 1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தார், நம் நாட்டின் சதுரங்க நாயகன் விஸ்வநாதன் ஆனந்த். சர்வதேச செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆனந்த், இதுவரையில் 2 முறை உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தையும், 5 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார். செஸ் விளையாட்டில் கடந்த 1988 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுக் கொடுத்தவரும் இவர் தான்.
விளையாட்டு, அரசியல், இராணுவம் மற்றும் பல துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வெளியிடும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி போன்ற முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற நிகழ்வு கூட 83 என்ற பெயரில் திரைப்படமானது. சமீபத்தில் இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அமரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் தற்போது செஸ் விளையாட்டில் சாதித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இத்திரைப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் இணைந்து, சஞ்சய் திரிபாதி எழுதுகிறார். ஆஷிஷ் சிங் மற்றும் மஹாவீர் ஜெயின் ஆகிய இருவரும் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செஸ் விளையாட்டு மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படம் பான் இந்தியா அளவில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களில் சில காட்சிகள் உண்மைத் தன்மைக்கு புறம்பாக இருக்கின்றன என்று அவ்வப்போது விமர்சனங்கள் எழும். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்திலும் இப்படி ஒரு விமர்சனம் எழுந்தது. இதுபோன்ற விமர்சனங்கள் விஸ்வநாதன் ஆனந்த் பையோகிராபி படத்தில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.