ஒரு திரைப்படம் என்பது விருவிருப்பாகவும், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். படங்கள் பார்க்க விரும்பும் ரசிகர்கள் அதிகமாக படத்தில் விருவிருப்பு மற்றும் டுவிஸ்ட்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அதை எப்போதுமே பூர்த்தி செய்வது ஹாரர் படங்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த உலகில் ஹாரர் படங்களுக்கு என்று எண்ணற்ற விசிறிகள் இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களாலேயே இந்தப் பதிவில் சொல்லப்போகும் 5 ஹாரர் படங்களைப் பார்ப்பது சற்று கடினம். உங்களால் பார்க்க முடியும் என்று நினைத்தால் கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள்.
‘தி மீடியம்’ 2021ல் வெளியான தாய்லாந்த் - தென்கொரியாவால் இணைந்து எடுக்கப்பட்ட Mockumentary வகை ஹாரர் படமாகும். இந்த கதையில் வரும் ஷாமேன் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் உடலில் வந்து தங்கள் குலதெய்வம் இறங்கி குறிசொல்வதாக நம்புகிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் தான் தெரியவரும் அந்த குடும்பத்தில் இருக்கும் நபரை பிடித்திருப்பது வேறு ஏதோ ஒன்று அதற்கும் தங்கள் குலதெய்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது. இந்த படம் ஹாரர் ஃபேன்களுக்கு செம ட்ரீட் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தின் கதைக்களம் நகர நகர திகிலைக்கூட்டிக் கொண்டே போவார்கள்.
'ஷட்டர்' 2004ல் வெளியான தாய்லாந்து ஹாரர் படமாகும். உலகம் முழுவதையும் தாய்லாந்து ஹாரர் படங்களை திரும்பி பார்க்க வைத்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 109 மில்லியன் வசூலித்தது. இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு பிறகு ஹீரோவின் வாழ்வில் நடக்கும் மாற்றங்களும், மர்மங்களும் என்னென்ன என்பதை பற்றியக் கதை. இந்த படத்தின் கிளைமேக்ஸ் டிவிஸ்ட் இன்றைக்கும் பல ஹாரர் ரசிகர்களை கதிகலங்க வைக்கும் என்றே சொல்ல வேண்டும்.
‘ஸ்டெபன் கிங்’ எழுதிய ஹாரர் கதையிலிருந்து எடுக்கப்பட்ட படம் தான் 2007ல் அமேரிக்கன் ஹாரர் படமாக வெளியான 1408. 1408 என்பது ஒரு ஹோட்டல் அறையின் எண்ணாகும். இந்த அறையில் நுழைபவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என்ற வதந்தியை கேட்டுவிட்டு எழுத்தாளரான ஹீரோ அந்த அறைக்கு செல்கிறார். அதற்கு பின் என்ன நடந்தது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக இந்த படம் ஹாரர் ஃபேன்களையே சீட் நுனிக்கு வர வைக்கும் என்பதில் ஐயமில்லை.
'Incantation' 2022ல் வெளியான தைவான் found footage வகை ஹாரர் படமாகும். இதுவரை தைவானில் வெளிவந்த ஹாரர் படங்களிலேயே இதுவே அதிக வசூலை வாரிக்குவித்த படமாகும். இந்த படம் Netflixல் இருக்கிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் சாபத்தை போக்குவதற்காக போராடும் கதை. இந்த படத்தின் கிளைமேக்ஸ் டிவிஸ்ட் கண்டிப்பாக யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.
2016 ஆம் ஆண்டு வெளியான தென்கொரிய ஹாரர் படமான 'The Wailing' கதை முழுவதும் ஒரு விதமான பயத்தையும், மர்மத்தையும் உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இந்த படத்தை பார்த்து முடித்த பிறகு உங்கள் நினைவில் இருந்து நீங்க குறைந்தது இரண்டு நாட்களாவது தேவைப்படும். அத்தகைய தாக்கத்தை கொடுத்துவிடும். இந்த படமும் Netflixல் இருக்கிறது ஹாரர் ஃபேன்ஸ் பார்த்து ரசியுங்கள்.
கண்டிப்பாக இந்தப் படங்களை இரவில் பார்ப்பதை தவிர்க்கவும். இந்த 5 படங்களில் உங்களை பயமுறுத்தியது எது என்பதைக் கட்டாயம் தெரிவியுங்கள்.