எண்பதுகளில் தமிழ்சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ரேவதி ஒரு பேட்டியில், தனது திருமணம் குறித்து பேசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தமிழ், மலையாளம், ஹிந்தி என சினிமாவில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த ரேவதி, இப்போதுவரை நடிப்பை விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடித்த காலங்களை நாம் பொற்காலங்கள் என்றே கூறலாம்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு அந்தப் பாத்திரமாகவே கதையில் வாழ்வார். அன்றைய காலத்து பிரபல இயக்குநர்கள் முதல் இன்றைய இயக்குநர்கள் வரை ஏராளமான இயக்குநர்களிடம் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவர் தன் வாழ்வில் திருமணம் குறித்து பேசியுள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட விவாகரத்து வாங்குவது தொடர்க்கதையாக உள்ளது. சமந்தா நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் சைந்தவி எனத் தொடர்ந்து விவாகரத்து செய்திகள் இணையத்தில் வந்துக் கொண்டேதான் இருக்கின்றன. அப்போது ரசிகர்களின் ஒரே கருத்து, “அந்தக் காலத்தில் திருமணம் செய்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழவில்லையா? இப்போது என்ன இவர்கள் எளிதாக திருமணம் செய்துக்கொண்டு, எளிதாக விவாகரத்து வாங்குகிறார்கள்." என்றுதான்.
அப்போது சரண்யா, தேவையானி, ஜோதிகா, அசின், கார்த்தி போன்ற நடிகை, நடிகர்கள் திருமணம் செய்துக்கொண்டு நன்றாக வாழ்கிறார்கள்தான். ஆனால், ஒருபக்கம் அவர்கள் சினிமாத்துறையில் திருமணத்திற்கு முன்பிருந்ததுபோல் ஜொலிக்க முடியவில்லை. இதனை நாம் திருமணம் பந்தத்திற்குள் நுழைந்ததால், குடும்பத்தினர் போடும் கட்டுப்பாடுகள் என்று மட்டும் கூறிவிட முடியாது. அது ஒன்றே காரணமில்லை.
அதையும் தாண்டி திருமணத்திற்கு பின்னும் குழந்தைகள் வந்ததற்குபின்னும் அவர்களின் உடல் ஆரோக்கியம் என்றும் கூறலாம். அல்லது நடுவில் வெகுகாலம் சினிமாவில் இருந்து விலகிய காரணமாகவும் இருக்கலாம். ஆகையால், திருமணத்திற்கு பின் சினிமாவில் அவ்வளவாக நிலைக்க முடியுமா? என்ற பயம் அப்போதிலிருந்து இப்போதுவரை இருக்கத்தான் செய்கிறது. என்ன…! இப்போது துணிந்து அதற்கு தேவையான முடிவுகளை எடுக்கிறார்கள்.
அந்தவகையில் தொகுப்பாளர், நடிகை ரேவதியிடம் மன வருத்தம் கொள்ளும் வகையில் நடந்த சம்பவம் எதுவென்று கேட்டபோது, ரேவதி கூறியதாவது, “சினிமாவில் அப்படி ஏதும் இல்லை. நிறைய விஷயங்கள் அவ்வப்போது வரும். ஆனால், அதையெல்லாம் கடந்துவிட்டதால், எதுவும் பெரிதாக தோன்றவில்லை.
ஆனால், நான் கல்யாணம் அந்த வயதில் செய்திருக்க கூடாது. இன்னும் ஒரு நான்கு வருடங்கள் தாண்டி கல்யாணம் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அந்த சமயத்தில்தான் மௌனராகம் மற்றும் புன்னகை மன்னன் படங்கள் பண்ணியிருந்தேன். அது முடிந்ததும் கல்யாணம் செய்தேன். இன்னும் கொஞ்சம் நிறைய நல்ல படங்கள் பண்ணதும் கல்யாணம் பண்ணிருக்க கூடாதா? என்று நினைத்தேன்.
ஆனால், அது இப்போதுதான் எனக்கு தோன்றுகிறது. 17 வயதிலிருந்து 20 வயது வரை படம் நடித்தேன். பின்னர் திருமணம் செய்தேன். திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடித்தேன். அதை மக்கள் எப்படியோ ஏற்றுக்கொண்டனர். இப்போது அனைவருக்கும் இருக்கும் தொழில் மீதான ஈடுபாடு குறித்து அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.” என்று பேசினார்.