ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் நான்காவது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் இப்படத்தைப் பற்றிய சில அப்டேட்களும் சினிமா வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளன.
அரண்மனை படங்களுக்கும் காஞ்சனா படங்களுக்கும் ‘ஒரு End ஏ இல்லையா சார்?’ என்று கேட்கும் அளவிற்கு அடுத்தடுத்த பாகங்கள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதேபோல் பேய் படங்கள் என்றால், ரசிகர்கள் நினைவுக்கு வருவதும் இந்த இரண்டு படங்களே. இவை வித்தியாசமான கதைக்களங்களுடனும், நகைச்சுவையுடனும், த்ரில்லுடனும் எடுக்கப்பட்ட பேய் படங்கள். சமீபத்தில் சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தவகையில் ‘இதுதாண்டா நேரம்... ஆயுதத்தை கையில் எடுங்கடா…’ என்று காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2007-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி திரைப்படம் அவருக்கு மிகவும் முக்கிய படமாக மாறியது. ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா, வினுச்சக்கரவர்த்தி மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடித்தனர்.
அதன் பின்னர் காஞ்சனா படத்தை 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்தார். அந்த படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் திருநங்கையாக சரத்குமார் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அதை மாற்றினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் காஞ்சனா படத்தை வெளியிட்டது.
காஞ்சனா 2 மற்றும் 3ம் பாகங்களை ராகவா லாரன்ஸுடன் இணைந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்நிலையில், காஞ்சனா 4 படத்தை உருவாக்க முடிவெடுத்துள்ள ராகவா லாரன்ஸ், இந்த முறை சன் பிக்சர்ஸ் உடன் இணையப் போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனது சொந்த பேனரான ராகவேந்திரா புரொடக்ஷனிலேயே படத்தை தயாரித்து வெளியிடப் போகிறார் ராகவா லாரன்ஸ் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் காஞ்சனா 4 படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம்.
காஞ்சனா 4 படத்தின் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் என அனைத்திலும் அவரே முன் நின்று படத்தை முடித்து வைக்கப்போவதாக திட்டம் என்று கூறப்படுகிறது.
எப்போதும் காஞ்சனா படங்களில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள். அதேபோல் இந்தமுறை எத்தனை ஹீரோயின்கள் என்பதே ரசிகர்களின் முதல் கேள்வி.