KILL Movie 
வெள்ளித்திரை

'KILL' - The Bloodiest and Goriest Movie! ஆக்சன் படப்பிரியர்களுக்கு நல்ல விருந்து!

நா.மதுசூதனன்

KILL - இந்தப் படம் ஆக்சன் படப்பிரியர்களுக்கு மட்டுமே. குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் வயதானவர்களும் இந்தப் படத்தைத் தவிர்த்தல் நலம்.

படம் முழுதும் ரத்தம் தெறிக்க வன்முறையான படங்கள் ஆங்கிலத்தில் நிறைய பார்த்திருப்போம். Raid, I saw the devil, Night comes for us, Macabre, Wrong turn போன்றவை சில உதாரணங்கள். அதுபோல இந்தியாவிலும் படம் எடுத்தால் என்ன என்ற எண்ணம் வந்து எடுக்கப்பட்ட படம் தான் KILL.

The Bloodiest and Goriest Movie என்ற அடைமொழியுடன் வந்துள்ள இந்தப் படம் தான் ஆக்சன் படப்பிரியர்களுக்கு இன்று விருந்து. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ரத்தம் தெறிக்க வேண்டும், சண்டைகள் ஜான் விக் படம் போல அமைய வேண்டும் என்று நினைத்துத் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அதில் என்ன வேடிக்கை என்றால், இந்தப் படத்தின் ஆங்கில உரிமையை ஜான் விக் தயாரித்த லயன்ஸ் கேட்ஸ் நிறுவனமே வாங்கிவிட்டதாகக் கேள்வி. இது போதாதா அந்தப் படத்தின் தரத்தை நிர்ணயிக்க.

தனது காதலியைக் கைப்பிடிக்க அவள் சொன்னபடி அவள் பயணம் செல்லும் ரயிலில் தனது நண்பனுடன் தில்லி நோக்கிச் செல்கிறார் நாயகன் அம்ரித் (லக்க்ஷை). இவர் ராணுவத்தில் கமாண்டோவாகப் பணியாற்றுபவர். அதே ரயிலில் ஒரு பெரிய கொள்ளைக் கும்பல் ஆயுதங்களுடன் ஏறி விடுகிறது. அந்தக் கும்பலின் தலைவர் ஆஷிஷ் வித்யார்த்தி. கொலைகளுக்கு அஞ்சாத குடும்பமாகச் செயல்படுகின்ற கும்பல் அது.

பணக்காரப் பயணிகள் பயணம் செய்கின்ற ஏசி கோச்சுகளில் இரண்டு பக்கங்களிலும் ஏறி ஷட்டரை இழுத்து மூடுகின்றனர். தடுக்க முயலும் ஒருவனுக்கு நடுமண்டையில் வெட்டு. அந்தக் கும்பலின் வழிகாட்டிப் போலச் செயல்படும் ஒருவன் கண்களில் கதாநாயகி மாட்டுகிறார். சிரித்து சிரித்து அவரைத் திகிலடைய வைக்கிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகி மாட்டிக் கொள்ள, அவரைக் காப்பாற்ற நாயகனும் அவரது நண்பரும் களத்தில் இறங்குகின்றனர். பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களுக்கும் ரத்தத்தில் வன்முறை ஓடும் கொள்ளைக் கூட்டத்தினருக்கும் நடைபெறும் போராட்டமே கதை.

படத்தின் டேக் லைனுக்கு ஏற்றவாறு பதினைந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் சண்டை, படம் முடியும் வரை தொடர்கிறது. பார்க்கும் நமக்குத் தான் பதை பதைக்கிறது, நடிப்பவர்களுக்கு ஏதாவது விபரீதம் நடைபெற்று விடப்போகிறதே என்று. அந்த அளவு சண்டைக் காட்சிகள் தத்ருபமாக அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எபெக்ட்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் அணியினர் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க ரயிலில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தாலும் ஒரு நிமிடம் கூடச் சலிப்போ அலுப்போ தட்டவில்லை. ஒரு பதற்றம் நம் வயிற்றைப் பிசைந்து கொண்டே இருக்கிறது. இந்தக் குறுகிய இடங்களில் சண்டைக்காட்சிகள் அமைத்த ஸ்டன்ட் இயக்குனருக்கு ஒரு பலமான கைதட்டல். பாத்ரூம், நடைபாதை, ரயில் பெட்டிகளின் உள்ளே, பெர்த்துகளுக்கு நடுவேயென விதவிதமான சண்டைகள். வித விதமான ஆயுதங்கள். இருக்கிற ஆட்கள் போதாதென்று வழியில் ஒரு இருபது பேர் இவர்களுக்கு ஆதரவாக ஏறிப் பின்னர் சாக வருகிறார்கள்.

நாயகன் கமாண்டோவாகக் காட்டி விட்டபடியால் அவர் இவர்களைச் சமாளிப்பது சற்று நம்பும்படி இருந்தாலும் சராசரி நாயகன்போல அத்தனைக் கத்திக் குத்துகளுக்குப் பிறகும் இவர்களைச் சாய்ப்பது போலக் காட்டியது மட்டுமே சற்றே நெருடல்.

"யாருப்பா நீ, நான் உங்கள்ள நாலு பேரத்தான் கொன்னேன். நீ எங்கள்ல நாப்பது பேரைக் காவு வாங்கிட்டியேடா. எங்களைவிட பெரிய ராட்சசன் நீ தாண்டா" என்று சொல்லிக்கொண்டே நாயகனைத் தாக்கும் சண்டை உச்சம். நம்மை மீறிப் 'போட்டுத் தள்ளுடா அவனை' என்று நம்மை மீறி கத்துகிறோம். அந்தளவு நம்முள் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறார்கள்.

ஒரு படத்தில் வில்லன் பலமாக அமைந்துவிட்டால் போதும் படம் பிழைத்து விடும். இதில் ராகவ் ஜுயால். ஆளைப் பார்த்தவுடன் பகீரென்று இருக்கிறது. அலுக்காமல் கொல்கிறார். இவருக்கும் நாயகனுக்கும் நடக்கும் போராட்டம் பலே.

நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் ஆக்சன் படப்பிரியர்களுக்கு மட்டுமே. குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் வயதானவர்களும் இந்தப் படத்தைத் தவிர்த்தல் நலம்.

என்ன ஒரே ஒரு பயம். இந்தப் படத்தின் வெற்றி காரணமாக இதே போல வன்முறையான படங்கள் தொடர்ந்து அணிவகுக்கும் சாத்தியக் கூறுகள் மிக அதிகம். ஏற்கனவே திரைப்படங்களைப் போதைக் கலாச்சாரமும் சண்டைக்காட்சிகளும் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. "எவர், எப்படி, என்ன சொன்னால் என்ன? கல்லாப்பெட்டி நிறைகிறதா? வாங்குப்பா நூறு கத்தி. ஆயிரம் அருவா. லிட்டர் கணக்கில் ரத்தம்" என்று தயாரிப்பாளர்கள் இறங்கிவிடக்கூடும்.

மிகக் குறைவான ஊர்களிலும் திரையரங்கங்களிலும் மட்டுமே திரையிடப்பட்டிருக்கும் இப்படம் அடுத்த மாத மத்தியில் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரிய திரையில் இதைப் பார்த்தல் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT