Idhayam Movie 
வெள்ளித்திரை

"என் அப்பா நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதயம்" - அப்பா முரளி குறித்து மகன் அதர்வா!

ராகவ்குமார்

'கண்ணின்  கடைப்பார்வை காதலியர்  காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்' என்ற பாரதிதாசன் அவர்களின் காதல் வரிகள் இடம் பெற்ற மாறுபட்ட காதல் திரைப்படமான இதயம் வெளியான நாள் செப்டம்பர் 6, 1991. 

34 ஆண்டுகள் நிறைவடைந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது முரளி - ஹீரா நடித்த இதயம் திரைப்படம். 1970 களிலும், 80 களிலும் வெளியான பல காதல் திரைப்படங்களில் ஜாதி, பெற்றோர்கள் எதிர்ப்பு... இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஒரு சில படங்கள் காதல் தோல்விக்கு தற்கொலையை தீர்வாக வைத்தன. நீங்கள் இது வரை பார்த்தது எல்லாம் காதல் இல்லை. இது ஒரு ஆழமான அற்புதமான உணர்வு என்று கொஞ்சம் வலியுடன் அறிமுக இயக்குநர் கதிர் தந்த படம் இதயம் .

காதலர்கள் என்றால் இறுதியில் கை கோர்க்க வேண்டும்; அல்லது சாக வேண்டும் என்று இருந்த தமிழ் சினிமாவில், காதலை தன் மனத்துள்ளே புதைத்து வைத்து, தான் விரும்பும் பெண்ணிடம் சொல்ல மன போராட்டத்தை நடத்தும் இதயம் கதையை கதிர் தயாரிப்பாளர்களிடம் சொன்ன  போது, பல தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன் வரவில்லை. கதிரின் விடா முயற்சிக்கு பின் சத்ய ஜோதி நிறுவனம் இதயம் படத்தை தயாரிக்க முன் வந்தது. படத்தை பார்த்த பல விநியோகஸ்தர்கள் படம் நன்றாக இருக்கிறது; ஆனால் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று வாங்க மறுத்தார்கள். பின்னர், இளையராஜா இசைக்காகவும், முரளி ஓரளவு பரிச்சியமான  நடிகர் என்பதாலும் ஒரு மனதாக வாங்கி ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டார்கள்.

முதல் நாள் முதல் ஷோ படம் பார்த்து வெளியில் வந்த ரசிகர்கள், அடுத்த காட்சிக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏன் படம் பார்த்தவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் போகிறார்கள் என்ற காரணம் காத்திருந்தவர்களுக்கு புரியவில்லை. வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்ற பின்புதான் காரணம் தெரிய வந்தது.

அதுவரை தமிழ் சினிமா சொல்லாத ஒரு காதல் கதையை, மாறுபட்ட தீர்வுகளுடன் கதிர் தந்திருந்தால், பலரும் உணர்ச்சிவசப்பட்டு பேச வார்த்தை கிடைக்காமல் தடுமாறினர். உள்ளே காதலை வைத்து வெளியே சொல்ல முடியாமல் முரளி தவிக்கும் தவிப்பை திரையில் பார்த்த ஆண்களில் பலர் தங்கள் காதலை நினைவு கொண்டனர்.

இதயம் படத்தை புரிந்து கொள்வதற்கு முன் 1990 களின் தொடக்க காலகட்டதை புரிந்து கொள்ள வேண்டும். அன்று பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் அனைத்துமே ஆண்கள், பெண்கள் இருபாலரும் தனித்தனியாக படிக்கும் நிறுவனங்களாக இருந்தன. இன்று போல இருபாலரும் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு அப்போது குறைவாக இருந்தது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மட்டுமே இருபாலரும் படிக்கும் வாய்ப்பு இருந்தது. கிராமப்புறத்திலிருந்து பல  முதல் தலைமுறை இளைஞர்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்த சமயம் அது. அதனால்தான் கிராம பின்னணியில் இருந்துவந்து  சென்னையில் ஒரு மருத்தவ கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் ஒரு அழகான, வசதி படைத்த நகர்ப்புற பின்னணியில் இருக்கும் பெண்ணிடம் காதலை ஹீரோ முரளி வெளிப்படுத்த எடுக்கும் முயற்சியை பல இளைஞர்கள் தங்கள் வாழ்கையுடன் பொருத்தி பார்த்தார்கள். இந்த இதயம் பலரின் இதயத்தை கவர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

'என்னவளே; நீ பேசிய ஆயிரம் வார்த்தைகளை விட நீ பேசாமல் கடந்து செல்லும் இந்த மௌனம் ஆயிரம் அர்த்தங்களை புரிய வைக்கிறது' என்றான் ஒரு புதுக்கவிஞன். நமக்கு பிடித்தமான பெண் பேசாமல், நம்மை கடந்து சென்றால் நாம் அடையும் வேதனையை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இந்த வேதனையின் வலிகளை வாலிப கவிஞர் வாலியை தவிர கவிதைகளில் வேறு யாரால் சொல்ல முடியும்?

'இதயமே, என் இதயமே, உன் மௌனம் என்னை கொல்லுதே' என்று தொடங்கும் பாடலில் மௌனத்தின் வலியால் காதலன் பாடும் பாடலை மிக அற்புதமாக எழுதியிருப்பார் வாலி. இன்றும் பேச மறுக்கும் காதலியிடமும், மனைவியிடமும் இந்த பாடலை ஆண்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்! இந்த படத்தில் வாலியுடன்  இணைந்து கவிஞர் பிறைசூடனும் சில பாடல்களை  எழுதியுள்ளார். ராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது.

இதயம் திரைப்படத்தின் வெற்றி, 90 களில் சிறந்த, மாறுபட்ட காதல் திரைப்படங்கள் உருவாக காரணமாக இருந்தது. காதல்  கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, சொல்லாமலே, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, என பல மாறுபட்ட காதல் திரைப்படங்கள் வெளியாக இதயத்தின் வெற்றி ஒரு காரணம்.

90 களின்  தமிழ் சினிமா என்பதே காதல் சினிமாவாக இருந்தது. இதயம் படத்திற்கு பிறகு கதிர், காதல் தேசம், காதல் வைரஸ் போன்ற சில காதல் படங்களை இயக்கினார். இருப்பினும் தனக்கு காதல் மீது நம்பிக்கையில்லை என்று கதிர் ஒரு வார இதழில் அப்போது சொல்லியிருந்தது ரசிகர்களுக்கு வியப்பை அளித்தது .

பிரேக் அப், ஜஸ்ட் லைக் தட் என்று வாழும் இன்றைய கார்ப்பரேட் இளைஞர்களுக்கு இந்த இதயத்தின் காதல் புரிவது கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் நாம் இந்த இதயம் படத்தை பார்க்க பரிந்துரை செய்வோம். "என் அப்பா நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதயம்" என்று பல இடங்களில் பெருமையுடன் சொல்வார் முரளியின் மகன் அதர்வா.

இதயம் திரைப்படத்தின் கதை, 'ஒரு ஆணின் பார்வையில் காதல்' என்ற அடிப்படையில் உருவானது. குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலைமை, இப்படி பல காரணங்களால் காதலை வெளியில் சொல்ல முடியாமல், இதயத்தில் சுமந்து கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஏற்று வாழும் பல ஆண்களுக்கு இந்த இதயம் திரைப்படம் சமர்ப்பணம்.

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT