Zendaya
Zendaya 
வெள்ளித்திரை

சூப்பர்மேன் ஹீரோயின் ஜெண்டாயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

பாரதி

ஜெண்டாயா மேரி ஸ்டோமர் கோல்மன், கலிபோர்னியாவில் உள்ள ஓக்லேண்ட் என்ற இடத்தில் செப்டம்பர் 1, 1996ம் ஆண்டு பிறந்தார்.இவர் சிறுவயதிலிருந்தே நடிப்பு மற்றும் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

ஜெண்டாயா சினிமா துறையில் வருவதற்கு முன்னர் ‘மேஸிஸ்’ மற்றும் ‘ஓல்ட் நேவி’ ஆகிய பிராண்டுகளுக்கு குழந்தை மாடலாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஒரு குழந்தை மாடலாக இருந்த ஜென்டாயா 2010ம் ஆண்டு டிஸ்னி சேனலில் ‘ஷேக் இட் அப்’ என்ற தொடரில் ‘ராக்கி ப்ளூ’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். ஜெண்டாயா நடிப்பில் மட்டும் திறமை வாய்ந்தவர் இல்லை. அவர் பாடகர், ஃபேஷன் மாடல், நடனகலைஞரும் கூட.

Zendaya

2013ம் ஆண்டு வெளியான ‘ரீப்லே’ பாடல் மூலம் தனது குரலையும் இசையமைக்கும் திறனையும் உலகிற்கு காண்பித்தார். இந்த பாடல் பில்போர்ட் பட்டியலில் 100 ல் 40வது இடத்தில் உள்ளது. இதுபோல் 12 மியூசிக் வீடியோவில் பாடியிருக்கிறார். மேலும் ‘Dancing with star’ நடன நிகழ்ச்சியில் சீசன் 16ல் தனது 16 வயதினிலேயே கலந்துக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் முதன்முதலில் ஒரு இளம் வயதினர் கலந்துக்கொண்ட பெருமை ஜெண்டாயாவையே சேரும்.

ஜெண்டாயாவின் இந்த அதீத திறமை அவரை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல காத்துக்கொண்டிருந்தது. ஆம்! 2017ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன் ஹோம்கம்மிங்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தில் ‘எம்ஜே’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க ஜெண்டாயாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் ஹீரோ படங்களில் நடிக்க வேண்டுமென்பது எத்தனையோ பேருடைய கனவு. அந்த கனவு ஜெண்டாயாவிற்கு பளித்தது.

இவரின் நடிப்புத் திறமை ஒரு பக்கம் இருக்க, இவரின் குரல் வளம் ஒரு பக்கம் இவரை முன்னேற செய்தது. ஆம்! 2008ம் ஆண்டு வெளியான ‘ஸ்மால் ஃபூட்’ என்ற அனிமேஷன் படத்தில் ‘மீச்சி’ என்ற கதாப்பாத்திற்கு குரல் கொடுத்தார். இவரின் அழகான மற்றும் அழுத்தமான குரல் அனைவரையும் ஈர்த்தது. நடிப்பு, பாடல், குரல் கொடுப்பதில், நடனம் என அனைத்திலும் ஒரு கால் வைத்த ஜெண்டாயா அடுத்து தயாரிப்பிலும் இறங்கினார்.

2019ம் ஆண்டு வெளியான ‘Euphoria’ என்ற தொடருக்கு இணைத் தயாரிப்பாளராக மாறி, அந்த தொடரிலும் நடித்தார். இந்த தொடரில் அவரின் அற்புதமான நடிப்பு அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. இப்படத்திற்காக சிறந்த கதாநாயகிக்கான ‘எம்மி விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இந்த எம்மி விருதில் முதன்முறை ஒரு இளம் வயதினர் வாங்கிய பெருமையும் ஜெண்டாயாவிற்குத்தான்.

ஜெண்டாயா, உடலை வைத்தும், நிறத்தை வைத்தும் அவமானப்படுத்துபவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதேபோல் நிறவெறிக்கு எதிராகவும் மற்றும் ஓரினச் சேர்க்கை ஆகியவற்றிற்கும் ஆதராவாக குரல் கொடுத்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளை படிக்க வைத்து உதவி செய்தும் வருகிறார்.

இவரின் ஆடை அலங்கார வடிவமைப்பு எப்போதும் அனைவரையும் கவரும் வகையில் தான் இருக்கும். ஜெண்டாயா 2019ம் ஆண்டு Lancome என்ற அழகு சாதனப்பொருட்களுக்கு இளம் தூதுவராக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு வெளியான ‘டூனே’ என்ற அறிவியல் ரீதியான படத்தில் ’சானி’ என்ற

கதாப்பாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பால் அசத்தியிருப்பார் ஜெண்டாயா. மேலும் ‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’, ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’, ‘டக் டக் கூஸ்’, ‘மால்கோல்ம் & மேரி’, ‘ஸ்பேஸ் ஜேம்: நியூ லிகேஸி’ போன்ற 11 படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த வருடம் டூனே 2 மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகவுள்ளன.

இவரின் ஆற்றல்மிக்க நடிப்பு NAACP விருது மற்றும் டீன் சாய்ஸ் விருது போன்ற பல உயரிய விருதுகளையும் ஜெண்டாயாவிற்கு வாங்கிக்கொடுத்தது. ஜெண்டாயா சொந்தமாக ‘தயா’ என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். அவருடைய சொந்த ஆடைகளை அங்கேத்தான் வடிமைப்பார். மேலும் UNICEF திட்டத்திற்கு தூதுவராக இருந்து வருகிரார். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கி வருகிறார்.

ஜெண்டாயா தனது வாழ்வில் யாரையும் சாராமல் சுதந்திரமாகவே முடிவுகளை எடுத்து வெற்றியை கண்டுள்ளார். அதேபோல் சுயநலத்திலும் பொதுநலத்திலும் சமமான அக்கரைவைத்து ஒரு வலிமையான பெண்ணாகவே இருந்து வருகிறார். இதுவே அவரின் இளம் வயதில் சாதனைப் படைக்க படிக்கட்டுகளாக அமைந்தன. ஜெண்டாயாவின் துணிச்சலும் தைரியமும் வலிமையும் சுதந்திரமும் பொதுநலமும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

சிறுகதை - ஸ்கூட்டர் ராணி!

SCROLL FOR NEXT