Arvind Swamy 
வெள்ளித்திரை

கடின சூழல்களை கடந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் கனவு நாயகன்!

ராஜமருதவேல்

90களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அர்விந்த்சாமி. இன்றுவரையிலும் பெண்கள் அர்விந்த்சாமி மாதிரி தான் மாப்பிள்ளை இருக்க வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு அழகிற்கு உதாரணமாக இருந்தவர். ஆனாலும் அவரது சினிமா வாழ்க்கை பல போராட்டங்களுக்குப் பின் ஒரு கட்டத்தில் முற்றிலும் முடிந்து போனது. ஒரு தசாப்த காலத்திற்குப் பின் திரையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி வெற்றிகரமாக வலம் வருகிறார்.

தனது கல்லூரிக் காலத்தில் நாடகத்தில் நடிக்கும் போதே மாணவர்கள் கூச்சல் போட்டு அவரை மேடையில் இருந்து இறக்கி விட்டனர். அந்த நடிகரைத் தான் சந்தோஷ் சிவனும் மணிரத்னமும் மெருகேற்றினர். ஆரம்பத்தில் அர்விந்த்சாமியை ஒளிப்பதிவாளரான சந்தோஷ்சிவன் சில விளம்பர படங்களில் நடிக்க வைத்தார். பின்னர் தளபதி திரைப்படத்தில் அர்விந்த்சாமியை நடிக்க வைக்க மணிரத்னமிடம் பரிந்துரையும் செய்தார். சிறப்பான நடிப்புக் களம் கொண்ட தளபதி படத்தில் ரஜினி, மம்முட்டி, அம்ரீஷ் பூரி போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு மத்தியில் அமைதியாக எதையும் அலட்டிக் கொள்ளாமல் தன் சிறந்த நடிப்பை அர்விந்த்சாமி பதிவு செய்தார்.

இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட மணிரத்னமின் ரோஜாவின் மூலம் அர்விந்த்சாமி கதாநாயகனாக உயர்ந்தார். ரோஜா திரைப்படத்தின் இசை இதுவரை யாரும் கேட்டிராத வகையில் இருக்க, பான் இந்தியப் படமாக மிகப் பெரிய வெற்றியையும் விருதுகளையும் வாங்கிக் குவித்தது. முதல் படத்திலேயே பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்து அர்விந்த்சாமிக்கு கிடைத்தது. பம்பாய், மின்சாரக்கனவு படங்களும் பான் இந்தியாவின் பெரிய வெற்றியை பெற இந்தியா முழுக்க பிரபலமான நடிகராக அர்விந்த்சாமி விளங்கினார்.

ரஜினி, கமலை விட குறுகிய காலத்தில் தேசியப் புகழ் பெற்றாலும் அடுத்தடுத்து வளர நிலை நிறுத்தும் கதைகளை தேர்ந்தெடுக்காமல் வீழ்ச்சிக்கு சென்றார். பெரிய வெற்றி பெற்ற மின்சாரக்கனவில் அவர் பாத்திரம் தோல்வி அடைவதாக இதுஅவருக்கு முதல் பின்னடைவாக இருந்தது. அடுத்ததாக தேவராகம் படத்தின் அவரது பரிதாப கதாபாத்திரம் அவரது ஸ்டார் அந்தஸ்தை வெகுவாக உடைத்தது. புதையல் படம் அவருக்கு சரியான பாதையை காட்ட ஆரம்பித்தாலும் அதன் பின் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

ஹிந்தியில் அவர் அறிமுகமான சாத் ரங் கே சப்னே திரைப்படம் பாலிவுட் ரசிகர்களை சிறிது கூட ஈர்க்கும் வகையில் இல்லை. அடுத்து அவருக்கு சில பெரிய படங்கள் கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாதுரி தீட்சித்துடன் அர்விந்த்சாமி நடித்த எஞ்சினியர் திரைப்படம் 90% முடிந்து கைவிடப்பட்டது. அவர் கரிஷ்மா கபூருடன் நடித்த படமும் வெளியாகவில்லை, சில படங்கள் முடிந்து மிகத் தாமதமாக வெளிவந்தன.

இந்நிலையில் ஒரு விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட அவர் சில ஆண்டுகள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரது ஒரு கால் தற்காலிமாக செயலிழந்தது. அவருடைய மனைவியுடன் மணமுறிவு ஏற்பட்ட காலத்தில் அவரது தோற்றம் சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது. மணிரத்னம் கடல் படத்தில் அர்விந்த் சாமியை மீண்டும் நடிக்க வைத்தார். ஆனாலும் அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை.

இடைப்பட்ட காலத்தில் அர்விந்த்சாமி தன் தொழிலில் கவனம் செலுத்தி அதில் வேகமாக வளர்ந்தார். சினிமாவில் அவருக்கு போராட்டம் இருந்தாலும் தொழிலில் அவர் வெற்றியை தக்க வைத்தார், புதிய நிறுவனங்களையும் தொடங்கினார். இந்நிலையில் தனி ஒருவன் திரைப்படத்தில் அர்விந்த்சாமியின் கதாபாத்திரம் பெரிய வெற்றியை பெற்றது. செக்கச் சிவந்த வானம் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க அவரது சினிமா பாதை வெற்றிக்கு திரும்பியது. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகராக அவர் இருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் அவரது நிறுவனத்தின் வருவாய் ₹ 3,300 கோடியாக உள்ளது.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT